2016-12-01 15:28:00

117வது பிறந்த நாளை கொண்டாடிய இத்தாலியப் பெண்மணி


டிச.01,2016. உலகிலேயே அதிக வயதானவராகக் கருதப்படும் இத்தாலியைச் சேர்ந்த எம்மா மொரானோ (Emma Martina Luigia Morano) அவர்கள், நவம்பர் 29, செவ்வாய்க்கிழமை, தனது 117வது பிறந்த நாளை கொண்டாடி முடித்துள்ளார்.

எம்மா அவர்கள், 1899ஆம் ஆண்டு இத்தாலியில் பிறந்தவர். தனது வாழ்நாளில், 19, 20, 21 ஆகி.ய மூன்று நூற்றாண்டுகளில் வாழ்ந்து வருபவர். இரண்டு உலகப் போர்களை கண்டவர். ஏறத்தாழ 90 இத்தாலிய அரசு மாற்றங்களைச் சந்தித்தவர்.

தன் வாழ்நாளில் 11 திருத்தந்தையரைக் கண்ட எம்மா அவர்கள், உலகில் தற்போது வாழ்பவர்களிலேயே அதிக வயதானவர் என்ற கின்னஸ் உலகச் சாதனை படைத்துள்ளார்.

எம்மா அவர்களின் அக்கம்பக்கத்தினரும், நண்பர்களும் இணைந்து வெகு சிறப்பாக எம்மாவின் பிறந்த நாளை வெர்பானியா (Verbania) நகரத்தில் உள்ள அவரது சிறிய குடியிருப்பில் கேக் வெட்டி மகிழ்ச்சியாகக் கொண்டாடியுள்ளனர்.

எம்மா அவர்களின் பிறந்தநாளையொட்டி, இத்தாலிய அரசுத்தலைவர், Sergio Mattarella அவர்கள் வாழ்த்துச் செய்தியொன்றை அனுப்பினார்.

இதுவரை உலகில் வாழ்ந்தவர்களிலேயே, 122 ஆண்டுகள், 164 நாட்கள் வாழ்ந்து, மிக அதிக வயதுடையவர் என்ற கின்னஸ் சாதனையைப் படைத்த Jeanne Louise Calment என்பவர், 1997ம் ஆண்டு ஆகஸ்ட் 4ம் தேதி மரணமடைந்தார்.

ஆண்களிலேயே அதிக வயதுடையவர் என்று கருதப்படும் Israel Kristal என்பவர், இவ்வாண்டு செப்டம்பர் மாதம் தன் 113வது வயதை நிறைவு செய்தார்.

ஆதாரம் : Agencies / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.