2016-11-30 15:02:00

இரக்கத்தின் தூதர்கள் : நற்பண்புகளைப் பின்பற்றத் தூண்டியவர்


நவ.30,2016. பிறர் இழைத்த தவறுகளை, தீமைகளை மன்னித்தல், தீமை செய்வோரைப் பொறுமையோடு ஏற்றுக்கொள்ளுதல் உட்பட இரக்கத்தின் ஏழு ஆன்மீகக் கடமைகளை, இரக்கத்தின் யூபிலி ஆண்டில், கிறிஸ்தவர்கள் அனைவரும் ஆற்றுமாறு அழைப்புப் பெற்றிருந்தனர். இக்கடமைகளை, தொடர்ந்து ஆற்றுமாறும், யூபிலி ஆண்டின் நிறைவில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அகிலத் திருஅவைக்கும் அழைப்பு விடுத்தார். இயேசு சபையில், குருமாணவராக இருந்தபோதே, இக்கடமைகளை, தனது வாழ்வில் நிறைவேற்றியவர், புனித யோவான் பெர்க்மான்ஸ். இப்புனிதர் தனது நாள் குறிப்பேட்டில், “மற்றவர்களிடம் காணப்படும் குறைகளைக் கண்டு, நீ முகம் சுளிக்கிறாய். அதே குறைகளை, உன்னிடமிருந்து விலக்கிவிடு. யார் யாரிடம் என்ன நற்பண்புகளைக் காண்கிறாயோ, அவற்றை, நீயும் உன் வாழ்வில் கடைப்பிடி” என்று எழுதியிருக்கிறார்.  பெல்ஜியம் நாட்டில், டியெஸ்ட் எனும் ஊரில், 1599ம் ஆண்டு மார்ச் 13ம் தேதி, குடும்பத்தில் மூத்த மகனாகப் பிறந்தார் யோவான் பெர்க்மான்ஸ். இவரது தந்தை ஜான் சார்லஸ், காலணிகள் தயாரிப்பவர். இவர் வளர்ந்த காலத்தில், ஹாலந்து, பெல்ஜியம், லக்சம்பர்க் ஆகிய நாடுகளில், கத்தோலிக்கருக்கும், பிரிந்த கிறிஸ்தவ சபையினருக்கும் இடையே நடந்த போரினால், அரசியலில் நெருக்கடிநிலை காணப்பட்டது. இவருக்கு ஒன்பது வயது நடந்தபோது, இவரது அன்னை, கடும் நோயினால் தாக்கப்பட்டார். இதனால், தாயின் படுக்கையருகில் பலமணி நேரங்கள் செலவிட்டார் யோவான் பெர்க்மான்ஸ். இவர், தனது படிப்பைத் தொடர, ஒரு செல்வந்தர் வீட்டில், வேலை செய்தார். இவரின் அன்னையின் இறப்பிற்குப் பின்னர், இவரது தந்தையும், குருவானார்.

புனித யோவான் பெர்க்மான்ஸ், தனது 17வது வயதில், 1616ம் ஆண்டில் இயேசு சபையில் சேர்ந்தார். இயேசு சபையில் ஈராண்டுகள் நவதுறவுப் பயிற்சியை முடித்த பின்னர், உரோமைக்குப் படிப்பைத் தொடர அனுப்பப்பட்டார். தனது பையைத் தோளில் போட்டுக்கொண்டு, அங்கிருந்து நடந்தே உரோமைக்கு வந்தார். உரோமையில், உரோமன் கல்லூரியில், 1621ம் ஆண்டில், மெய்யியல் மூன்றாம் ஆண்டு படித்தபோது, கிரேக்க கல்லூரியில், தொமினிக்கன் சபையினர் நடத்திய, மெய்யியல் விவாதம் ஒன்றிற்கு, இவரை அனுப்பி வைத்தனர். இவர், அந்த விவாதத்தில், ஆழ்ந்த கருத்துக்களை, மிகத் தெளிவாக விளக்கி, எல்லாரின் பாராட்டையும் பெற்றார். இது முடிந்து, அவர் வாழ்ந்த இயேசு சபையினர் இல்லம் திரும்பியபோது, உரோமன் காய்ச்சலால் தாக்கப்பட்டார். அச்சமயம் உரோமையில், கொள்ளை நோய் பரவியிருந்தது. இவரும், இந்நோயால் தாக்கப்பட்டார். இதனால் பெர்க்மான்ஸ் அருளப்பரின் நுரையீரல்கள் பாதிக்கப்பட்டன. உடல் பலமும் விரைவாகக் குறையத் தொடங்கியது. வயிற்றுப்போக்கு மற்றும் கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இவர், 1621ம் ஆண்டு ஆகஸ்ட் 13ம் தேதி இறைவனடி சேர்ந்தார். இப்புனிதர், 22 ஆண்டுகள், ஐந்து மாதங்கள் மட்டுமே இவ்வுலகில் வாழ்ந்தார். யோவான் பெர்க்மான்ஸ் அவர்களின் உடல், உரோம், புனித இஞ்ஞாசியார் ஆலயத்தில் புதைக்கப்படுவதற்கு முன்னர், அவ்வுடலைத் தரிசிப்பதற்கு, பல நாள்கள், பெருமளவில் மக்கள் வந்துகொண்டிருந்தனர். அதே ஆண்டில், Aarschot பிரபு  Phillip-Charles அவர்கள், திருத்தந்தை 15ம் கிரகரி அவர்களுக்கு மனு ஒன்றை எழுதி, யோவான் பெர்க்மான்ஸ் அவர்களை, அருளாளராக அறிவிப்பதற்கு நடைமுறைகளைத் தொடங்குமாறு கேட்டுக்கொண்டார். மேலும், இப்புனிதர் இறந்த பின்னர், இவரின் இதயத்தை எடுத்து, இவரது தாயகமான பெல்ஜியத்தின் Leuven நகர் ஆலயத்தில் புனிதப் பொருளாக வைத்தனர் என்று சொல்லப்படுகிறது.  

"நம் உண்மையான மதிப்பு, மனிதர்கள் நம்மைப் பற்றி என்ன நினைக்கின்றார்கள் என்பதில் அல்ல, ஆனால், உண்மையில், நாம் யார் என்பது பற்றி, கடவுள் என்ன நினைக்கிறார் என்பதிலே அடங்கியுள்ளது" என்று சொன்னவர், புனித யோவான் பெர்க்மான்ஸ். இயேசு சபையின் மற்றோர் இளம் புனிதர் அலாய்சியஸ் கொன்சாகா அவர்கள், இப்புனிதரை தனது வாழ்வுக்கு எடுத்துக்காட்டாகக் கொண்டிருந்தார். அன்னை மரியா மீது ஆழ்ந்த பக்தி கொண்டிருந்த புனித பெர்க்மான்ஸ் அருளப்பர், 1865ம் ஆண்டில் அருளாளராகவும், 1888ம் ஆண்டில் புனிதராகவும் அறிவிக்கப்பட்டார். இவர், பீடப்பரிசாரகர்களுக்குப் பாதுகாவலராகப் போற்றப்படுகிறார். இந்த வயதில் நான் புனிதனாகாவிட்டால், எப்பொழுதும் புனிதனாக முடியாது என்று, புனித யோவான் பெர்க்மான்ஸ் அவர்கள், தனது சிறு வயதிலே சொல்லிக் கொள்வது வழக்கமாம். இப்புனிதரின் விழா நவம்பர் 26. பக்திக்கும், சிரித்த முகத்திற்கும், தளரா ஊக்கத்திற்கும் பெயர்போன இப்புனிதர், சிறிய செயல்களையும், முழுமையாகச் செய்யும் பழக்கம் கொண்டவர். இவ்வாறு செய்வதற்கு, மற்றவரையும் தூண்டுபவர். குழு வாழ்வே பெரிய தபம் என்றும் கூறிய இப்புனிதர், சபையின் கொள்கைகளைப் பிரமாணிக்கமாகக் கடைப்பிடித்தவர். இதனாலே, புனித யோவான் பெர்க்மான்ஸ் அவர்களின் கையில், ஒரு திருச்சிலுவையும், சபையின் கொள்கை நூலும் இருப்பதுபோலவே சித்தரிக்கப்படுகிறார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.