2016-11-29 14:58:00

திருத்தந்தையின் செபங்களுக்கு கோஸ்தா ரிக்கா தலைவர் நன்றி


நவ.29,2016. “இயேசுவின் இரக்கத்தின் சாட்சிகளாக, மகிழ்வு மற்றும் ஆறுதலைத் தாங்கிச் செல்பவர்களாக நாம் வாழுமாறு, அவர் நம்மை அழைக்கிறார்” என்பது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டரில், இச்செவ்வாயன்று வெளியானது.

மேலும், கோஸ்தா ரிக்கா நாட்டில், ஒட்டோ கடும் புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் செபித்ததற்கும், ஒருமைப்பாட்டுணர்வைத் தெளிவான முறையில் காட்டியதற்கும், கோஸ்தா ரிக்கா அரசுத்தலைவர் Luis Guillermo Solís அவர்கள், தனது நன்றியைத் தெரிவித்தார்.

கோஸ்தா ரிக்கா நாட்டிற்காக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஞ்ஞாயிறு மூவேளை செப உரையின் இறுதியில் விடுத்த அழைப்பு குறித்து, வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியில், திருத்தந்தைக்கு, தனது நன்றியைத் தெரிவித்தார் அரசுத்தலைவர் சோலிஸ்.

ஒட்டோ கடும் புயலால், பாதிக்கப்பட்டுள்ள தங்களுக்கு, திருத்தந்தை தனது ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவித்தது குறித்து, கோஸ்தா ரிக்கா நாட்டினர் மிகவும் மகிழ்வதாக, மேலும் கூறினார் அரசுத்தலைவர் சோலிஸ்.

மத்திய அமெரிக்காவின் தென் பகுதியில் கடந்த வாரத்தில், மணிக்கு 175 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய ஒட்டோ கடும் புயலால், பல நகரங்கள் நீரில் மூழ்கின மற்றும் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.

கோஸ்தா ரிக்கா நாடு, 1851ம் ஆண்டுக்குப் பின்னர், தற்போதுதான் கடும் புயலால் பாதிக்கப்பட்டுள்ளது என்று, பதிவேடுகள் கூறுகின்றன. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.