2016-11-29 14:50:00

கிறிஸ்தவத் தாழ்மை, குழந்தை போன்ற நற்பண்பைக் கொண்டிருப்பது


நவ.29,2016. உண்மையான கிறிஸ்தவத் தாழ்மை, குழந்தை போன்ற நற்பண்பைக் கொண்டிருப்பதாகும் மற்றும், இது ஒருபோதும் பகட்டான தாழ்மையாக இருக்காது என்று, சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில், இச்செவ்வாய் காலை நிறைவேற்றிய திருப்பலியில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இச்செவ்வாய் திருப்பலியின் வாசகங்களிலிருந்து மறையுரைச் சிந்தனைகளை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஞானிகள் மற்றும் அறிவாளிகளுக்கு அல்லாமல், தாழ்மையான மற்றும் குழந்தை மனம் கொண்டவர்களுக்கு, கடவுள் தம்மை, எவ்வாறு வெளிப்படுத்துகிறார் என்பது பற்றி விளக்கினார்.

ஒரு குழந்தை, ஒரு மாட்டுத்தொழுவம், ஓர் அன்னை, ஒரு தந்தை... என, கிறிஸ்மஸ் நிகழ்வில் சிறியவர்களையே பார்க்கிறோம் என்றும், இவர்கள், பெரிய மனதையும்,  அதேநேரம், குழந்தையின் மனநிலையையும் கொண்டவர்கள் என்றும் கூறினார் திருத்தந்தை.

குழந்தை போன்ற உள்ளம் கொண்டவர்களே, தாழ்மைப் பண்பையும், ஆண்டவர் பற்றிய அச்சத்தையும், முழுமையாகப் புரிந்துகொள்ளும் திறமையையும் கொண்டவர்கள், ஏனென்றால், அவர்கள், ஆண்டவரின் பிரசன்னத்தில் நடக்கின்றனர், ஆண்டவரால் காக்கப்படுகின்றனர் என்றுரைத்த திருத்தந்தை, வாழ்வில் முன்னோக்கிப் பயணிக்க, ஆண்டவர் அவர்களுக்கு, சக்தியை அளிக்கிறார், இதுவே உண்மையான தாழ்மை என்று கூறினார்.

கடவுள் தம் பேருண்மைகளை, தாழ்மையான மனத்தவர்க்கு வெளிப்படுத்துகிறார், இதில் மகிழும் இயேசுவை நோக்குவோம், தாழ்மை எனும் பண்பையும், ஆண்டவர் பற்றிய அச்சத்தையும் கொண்டிருந்து, ஆண்டவர் பிரசன்னத்தில் நடக்க, நமக்கு அருளை வழங்குமாறு இறைஞ்சுவோம் என்று, திருப்பலி மறையுரையை நிறைவு செய்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.