நவ.28,2016.
ஐந்நூறு ரூபாய், ஆயிரம் ரூபாய் தாள்கள்
பற்றிய செய்திகளே அதிகமாக வெளியாகும் இந்நாள்களில், இறைவனின் படைப்பில் நிகழும் சில அதிசயங்களும்,
அவ்வப்போது நம் கண்களிலிருந்து தப்புவதில்லை. ஓர் உடல் இரு தலை, நலமாக வாழும் அதிசய குழந்தை!
என்ற தலைப்பில், நவம்பர் 25, கடந்த வெள்ளியன்று, புகைப்படத்துடன் ஒரு செய்தி வெளியாகி
இருந்தது. பாலஸ்தீனாவின் காசா நகரில், இரண்டு தலைகள் மற்றும் ஓர் உடலுடன் ஒரு குழந்தை
பிறந்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை, இம்மகப்பேற்றினைப் பார்த்த மருத்துவர் தெரிவிக்கையில்,
இரண்டு இலட்சம் பிறப்புக்களில் ஒன்று, இவ்வாறு இடம்பெறுவதாக கூறியுள்ளார். இக்குழந்தை,
கண்ணாடிப் பெட்டிக்குள், வைக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை நலமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒரு குழந்தை உணவு சாப்பிடும், காணொளியையும், கடந்த வாரத்தில் காண நேர்ந்தது.
இரு கைகளும் இல்லாத அந்தக் குழந்தை, இரண்டு கால்களுக்கு இடையில், சாப்பாட்டுத் தட்டை
வைத்துக்கொண்டு, கால் விரலில் கரண்டியை வைத்து சாப்பிடுவதைக் கண்டு கண்கள் கலங்கி விட்டன.
எந்தவித முகச்சுளிப்பும், சோர்வும் இல்லாமல், அந்தக் குழந்தை உணவை எடுத்துச் சாப்பிட்ட
காட்சி, கண்களைவிட்டு அகல மறுக்கிறது. இந்த வயதிலேயே எவ்வளவு விடாமுயற்சி, தன்னம்பிக்கை!
ஒரு குழந்தை எந்த இடத்தில், எந்த வீட்டில், எந்த இனத்தில், எந்த மதத்தில் பிறப்பது என்பதை, பிறக்கப்போகும் அந்தக் குழந்தை தீர்மானிப்பதில்லை. பிறப்பும், இறப்பும் யார் சொல்லியும் வருவதில்லை. அதேபோல் மாற்றுத்திறனும்! அதை யாரும் விரும்பி அடைவதில்லை. பிறப்பாலோ, நோயாலோ விபத்தாலோ, அல்லது வேறு எந்தக் காரணத்தினாலோ, உடலில் குறை ஏற்பட்டு விடுகின்றது. இவ்வாறு பாதிக்கப்படுகிறவர்களை, மாற்றுத்திறனாளிகள் என்று சொல்கிறோம். பார்வைத்திறன், செவித்திறன் குறைவு, கை, கால் வளர்ச்சி பாதிப்பு போன்ற குறைகளோடு, மனவளர்ச்சிக் குறைபாடு உள்ளவர்களும் இதில் உள்ளடங்குவர். மனவளர்ச்சிக் குறை என்பது, அறிவு வளர்ச்சியில் ஏற்படும் ஒரு குறை. மனவளர்ச்சிக் குறைபாடு ஒரு நோயல்ல, அது வளர்ச்சி நின்றுவிடும் நிலை”என்று, 1838ம் ஆண்டில், Jean-Étienne Dominique Esquirol என்ற ப்ரெஞ்ச் உளவியல் நிபுணர் சொன்னார். அன்பர்களே, டிசம்பர் 03, வருகிற சனிக்கிழமை, உலக மாற்றுத் திறனாளிகள் நாள். உலக மக்கள் தொகையில் 15 விழுக்காட்டினர், மாற்றுத்திறனாளிகள். வளரும் நாடுகளிலுள்ள மாற்றுத்திறனாளிக் குழந்தைகளில் 90 விழுக்காட்டினர், பள்ளிக்குச் செல்வதில்லை என யுனெஸ்கோ அமைப்பு தெரிவிக்கிறது.
இன்றைய ஈரான் நாட்டுக் கவிஞர் Omar Khayyám அவர்கள், 'பானை பேசுகிறது' என்ற தலைப்பில், இந்த மாற்றுத்திறனாளிகள் பற்றி, எழுதிய ஒரு சிறிய கவிதையில், இவ்வாறு சொல்கிறார்.. எத்தனையோ பானைகளைக் குயவன் செய்கிறான். அவற்றுள் நல்லவற்றைத் தேடி வாங்கிச் செல்கின்றனர். சில பானைகள் வளைந்திருக்கின்றன, நெளிந்திருக்கின்றன, சில ஓட்டையாக இருக்கின்றன என்றெல்லாம் சொல்லி ஒதுக்கி வைத்துவிடுகின்றனர். அப்படி ஒதுக்கி வைக்கப்பட்ட ஒரு பானை பேசுகிறது...
வளைந்தும், நெளிந்தும் உள்ளதென்று விலகிப் போகின்றார்கள். அந்த நாள் குயவன் செய்த பிழைக்கு, நான் என்ன செய்வேன்? என்று அந்தப் பானையின் ஏக்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
ஒரு கதவு மூடினால், இன்னொரு கதவு திறக்கும் என்பார்கள். உண்மைதான். மனிதராய்ப் பிறந்த ஒவ்வொருவருக்குள்ளும் இன்னொரு மாற்றுத்திறன் இருக்கிறது. அதைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். தேடலில்தானே வாழ்க்கையின் வெற்றியே அடங்கி இருக்கிறது. வெளித்தோற்றத்தால் மாறுபட்டவர்களாகத் தோன்றும், மாற்றுத் திறனாளிகள் பலர், இந்தத் தேடலில் வெற்றியும் கண்டிருக்கிறார்கள், கண்டும் வருகிறார்கள். மிகுந்த மனஉறுதியுடன், தங்களின் வலிகளைத் தாங்கி, சாதனையாளர்களாய் உயர்ந்து நிற்கின்றனர். பாப்பிறை அறிவியல் கழகம், கடந்த வெள்ளியன்று, வத்திக்கானில் தொடங்கிய, அறிவியல் மற்றும் நீடித்து நிலைத்திருக்கூடிய முன்னேற்றம் பற்றிய கருத்தரங்கில், கலந்துகொண்டு, இந்தப் பிரபஞ்சத்தின் தொடக்கம் பற்றி இருபது நிமிடங்கள் பேசினார் இயற்பியல் அறிவியல் மேதை ஸ்டீபன் ஹாக்கிங்(Stephen Hawking). இக்கருத்தரங்கில் கலந்துகொண்டவர்கள் இத்திங்களன்று திருத்தந்தையை திருப்பீடத்தில் சந்தித்தனர். ஸ்டீபன் ஹாக்கிங் அவர்களும் அச்சந்திப்பில் இருந்தார். இவர், 1986ம் ஆண்டிலிருந்து பாப்பிறை அறிவியல் கழகத்தில் உறுப்பினராக இருந்து வருகிறார். 1942ம் ஆண்டில் பிறந்த இந்த மேதை, தனது 21வது வயதில், தசையூட்டமற்ற பக்கமரபு நோயால் பாதிக்கப்பட்டார். கை, கால், வயிறு, தலை என முழுவதும் செயலிழந்து, சக்கர நாற்காலியிலேயே இவரது வாழ்க்கை கழிந்த போதும், இவரது மூளையின் செயல்பாடு மட்டும் சற்றும் ஓயவில்லை. சார்பியல் மற்றும் குவாண்டம் ஈர்ப்பில் அரிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியவர் இவர். நம்பிக்கை இழக்காமல் வலக்கண்ணை மட்டுமே அசைத்து எழுத்துகளை அடையாளம் காட்டி பாடம் நடத்தி, புத்தகம் எழுதி புகழின் உச்சிக்கு உயர்ந்தவர். 2005ம் ஆண்டில் ஒருநாள், சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி தொலைக்காட்சி நிலையம் கேட்ட கேள்விகளுக்கு கணினி மூலம் விடை சொல்லுகிறார். வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று கேட்டபோது,
வாழ்க்கை, முன்பைவிட மகிழ்வாகவும், சவால் நிறைந்ததாகவும் இருக்கிறது. வாழ்வில், எதை இழந்தீர்கள் என்பதல்ல, என்ன மிச்சம் இருக்கிறது என்பதுதான் முக்கியம்'
இவ்வாறு பதிலளித்தார் ஸ்டீபன் ஹாக்கிங். தன்னம்பிக்கையோடு போராடினால் வாழ்வில் வெற்றி நிச்சயம் என்பதை, நிரூபித்துக் காட்டும் எத்தனையோ மாற்றுத்திறன் மனிதர்களை, பட்டியலிட்டுக்கொண்டே செல்லலாம். தமிழகத்தின், ராஜபாளையம் கணேசன் அவர்கள், பிறவியிலேயே பார்வைத்திறனையிழந்தவர். இவர் பற்றிச் சொல்லும் உள்ளூர் நபர் ஒருவர், இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற ஒரு கொள்கையோடு வாழும் மனிதர் இவர் என்று புகழாராம் சூட்டுகிறார். கணேசன் அவர்களுக்கு மூன்று குழந்தைகள். இவர், அரசு தரும் சலுகைகளையோ, இலவசங்களையோ ஏற்காமல், உழைப்பின்மீது, அளவற்ற நம்பிக்கை கொண்டவர். சலுகைகளையும், இலவசங்களையும், ஏற்காமல் இருப்பதற்கு, இவர் ஓர் ஊடகத்திடம், இவ்வாறு காரணம் சொல்லியிருக்கிறார்,,
ஐயா, இலவசங்கள் ஒரு மனிதரை, எப்போதுமே சோம்பேறியாகவும், உண்மை பேச முடியாதவனாகவும் மாற்றிவிடும். ஒருவருக்கு இலவசங்களைக் கொடுப்பதற்குப் பதிலாக வாய்ப்புக்களைக் கொடுத்தால், அவை, அந்த மனிதரை, வேறு தளத்திற்குக் கொண்டுபோகும். ஆனால், இங்கே, யாரும் அதற்குத் தயாராக இல்லை. இலவசம் என்ற பெயரில், பெரிய சுரண்டல் நடந்து கொண்டிருக்கிறது. அதில் எனக்கு விருப்பம் கிடையாது. நான் உழைப்பில்லாதவனாக வாழ விரும்பவில்லை. அதனால்தான் இலவசங்களை மறுக்கிறேன். அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது, கூன் குருடு செவிடு நீங்கி பிறத்தல், அதைவிட அரிது என்று படித்திருக்கிறோம். அப்படி பிறக்கும் மனிதர்களில், கேட்கிற மற்றும் பேசுகிற சக்தி இல்லாமல் இருப்பவர்கள்தான் மிகவும் பாவப்பட்டவர்கள். அதேபோல் தன்னம்பிக்கை இல்லாத மனிதரும் மிகவும் பாவப்பட்டவர்கள்.
இவ்வாறு எதார்த்தமாகப் பேசும் கணேசன் அவர்கள், சிறுவயதிலே தாயை இழந்தவர். இவரது தங்கையும், இவரும் தந்தையின் அரவணைப்பில் வளர்ந்தவர்கள். கணேசன், ஒரு முதுகலை மின்னணுவியல் பொறியியல் பட்டதாரி. இவர், ஒரு பெரிய போராட்டத்திற்குப் பிறகே படிப்பை முடித்துள்ளார். பிறவியிலேயே பார்வைத்திறனையிழந்த இவர், பாடல்கள் கேட்டு வளர்ந்தது, மின்னணுவியல் மீதான காதலை வளர்த்திருக்கிறது. ஆனால் பார்வையற்ற ஒருவர், மின்சாரம் தொடர்பான படிப்பில் சேர, கல்லூரி நிர்வாகம் மறுத்திருக்கிறது. ஆனாலும், சோர்ந்து விடாமல், டில்லி வரை சென்று போராடி, தனது இலட்சியத்தை நிறைவேற்றியிருக்கிறார். முதலில் தொலைக்காட்சி பொறியியல் வேலை செய்துள்ளார். இத்தொழிலில், ஒரு சிறிய பொருளைக் கொடுத்துவிட்டு, அதிகமாகப் பணம் வாங்க வேண்டியிருந்தது. இப்படி மக்களை ஏமாற்ற வேண்டியிருந்ததால், அந்த வேலையை விட்டுவிட்டு, தற்போதைய தொழிலைச் செய்து வருவதாகச் சொல்லியிருக்கிறார். பழைய மாதிரியான வானொலி, தொலைக்காட்சிகளைச் சரிசெய்து கொடுக்கிறார். பள்ளிகளுக்கு பேனா விற்பனை செய்கிறார். கணேசன் அவர்கள் நம்பி வாழ்வது அவரை, அவரது திறமையை மட்டுமே. தான் செல்லும் இடங்களில், தன் நேர்மை மற்றும் அன்பால், மக்களின் நட்பைச் சம்பாதித்து வைத்திருக்கிறாராம். மீரட் பகுதியில், பார்வைத்திறனற்றவர்களுக்கான ஒரு பள்ளியில், 2ம் வகுப்பு படித்து வருபவர் பார்வையற்ற சிறுமி ரிடா ஜிரா. ஏழு வயது நிரம்பிய இந்த முஸ்லிம் சிறுமி, இந்துக்களின் புனித நுாலான பகவத் கீதையை, மனப்பாடாமாகக் கற்று கூறி வருகிறார் என்று, அண்மையில் பல ஊடகங்களில் செய்தி வெளியாகி இருந்தது.
உடம்பில் உள்ள குறைகள் எல்லாம் ஊனம் இல்லை. உள்ளம் நன்றாக இருந்தால் ஊனம் ஒரு குறையில்லை. உள்ளம் ஊனப்பட்டால், உடம்பிருந்தும் பயனில்லை.. என்ற பாடல் வரிகளை நாம் கேட்டிருக்கிறோம். எனவே, உடல்குறை என்பது ஊனம் அல்ல, ஆனால், உள்ளத்தில் குறை இருப்பதையே, ஊனம் என்று உணருவோம். பூரான் தனக்கு எத்தனை கால்கள் என்று எண்ணத் தொடங்கினால் அது நகராமலேயே நின்றுவிடும் என்பதற்கேற்ப, மாற்றுத்திறன் அன்பர்களே, இழந்ததை மறந்து விடுங்கள். தன்னிரக்கத்தைத் தூக்கி எறியுங்கள். உங்களுக்குள் உள்ள தனித்திறமைகளை, இனம் கண்டு, அவற்றை பட்டை தீட்டி, சாதனையாளர் பட்டியலை நீளமாக்குங்கள். தடைகளையும், தோல்விகளையும் கண்டு அஞ்சாதீர்கள். சோதனைகளை சாதனைகளாக மாற்றுங்கள். உங்கள் உடலின் ஒவ்வொரு நரம்பிலும் நம்பிக்கையை நங்கூரமாக இறக்குங்கள். மலைத்து நின்றால் குலைத்துவிடும். வீறுகொண்டு எழுகிறவரின் வாழ்வே, வீர வரலாறாய் பதியப்படும்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |