2016-11-26 15:23:00

திருவருகைக்காலத்தின் முதல் ஞாயிறு : ஞாயிறு சிந்தனை


சில நாட்களுக்கு முன், Whatsapp வழியே, சில நண்பர்கள், ஒரு படத்தையும், அத்துடன், ஓர் எச்சரிக்கையையும் பகிர்ந்துகொண்டனர். ஏழு தலைகள் கொண்ட பாம்பு ஒன்று, சாலையோரத்தில் படமெடுத்து ஆடுவது போன்று, அந்தப் படம் அமைந்திருந்தது. படத்திற்கு அடியில், அந்தப் பாம்பு, ஹொண்டுராஸ் நாட்டில் காணப்பட்டதாகவும், ஏழு தலை நாகம், உலக முடிவுக்கு ஓர் அறிகுறி என்றும் எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. அந்தப் படத்தையும், எச்சரிக்கையையும் சிறிது ஆழமாக ஆய்வு செய்தால், அவற்றில் உள்ள தவறுகள் வெளிச்சமாகும். அந்தப்படம், ஹொண்டுராஸில் அல்ல, இந்தியாவில் எடுக்கப்பட்டது என்பதும், கம்ப்யூட்டர் நுணுக்கங்கள் தெரிந்த ஒருவர், படமெடுத்து ஆடும் ஒரு பாம்பின் தலையை, ஏழுமுறை வெட்டி ஒட்டி, அந்தப் படத்தை உருவாக்கியுள்ளார் என்பதும், புரியும். இதில், மற்றொரு வருத்தமான அம்சம் என்னெவெனில், இந்தப் படம், கடந்த நான்கு, அல்லது, ஐந்து ஆண்டுகள், நம் சமூக வலைத்தளங்களில், பல்வேறு காரணங்களுக்காக, மீண்டும், மீண்டும் தோன்றி, பரபரப்பை உண்டாக்கி வருகிறது.

பிரமிக்கத்தக்க தொழில் நுட்பங்களால், நம்மிடையே தகவல் பரிமாற்றங்கள் தாறுமாறாகப் பெருகிவிட்டன. நம்மை வந்தடையும் ஒரு தகவலை உள்வாங்கி, அதில் உள்ள உண்மையை, அதனால் விளையும் நன்மை, அல்லது, தீமையைக் குறித்து சிறிதும் சிந்திக்காமல், அதை உடனே மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளவேண்டும் என்ற வேகமே, நம்மிடம் அதிகம் உள்ளதோ என்ற கவலை எழுகிறது. இத்தகையத் துரிதப் பரிமாற்றங்களால், வதந்திகளும், குழப்பங்களுமே அதிகம் உருவாகின்றன என்பதையும் மறுக்கமுடியாது.

"உலகம் முடியப் போகிறது" என்ற வதந்தி, இதுவரை பலமுறை தோன்றி மறைந்துள்ளது. இறுதியாக நாம் இந்த வதந்தியை, 2012ம் ஆண்டு கேட்டோம். 2012ம் ஆண்டு, டிசம்பர் மாதம் துவங்கியதும், உலக முடிவைப் பற்றிய பல செய்திகள் உலவி வந்தன. தென் அமெரிக்காவின் பழமைவாய்ந்த மாயன் கலாச்சார நாள்காட்டியின்படி, 21-12-2012 என்ற எண்ணிக்கை கொண்ட நாளன்று,  அதாவது, 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் 21ம் தேதி உலகம் முடியும் என்று சொல்லப்பட்டிருந்ததாக வதந்திகள் உலவியதால், இந்தப் பரபரப்பு உருவானது. 21-12-2012 வந்தது, போனது. உலகம் இன்னும் இயங்கிக் கொண்டிருக்கிறது. கடந்த 4 ஆண்டுகளாக உறங்கிக்கிடந்த உலகமுடிவு என்ற வதந்தி, மீண்டும் இந்த ஏழு தலைப் பாம்பின் வழியே விழித்தெழுந்துள்ளது என்பதை எண்ணும்போது, இத்தகைய வதந்திகளை ஏன் பரப்புகிறோம் என்பதை ஆய்வு செய்யக் கடமைப்பட்டுள்ளோம்.

நம்மைச்சுற்றி, இயற்கையில், அல்லது, அரசியல், மதம், சமுதாயம் இவற்றில் உண்டாகும் பல எதிர்பாராத நிகழ்வுகளை, உலக முடிவின் அடையாளங்கள் என்று, எளிதில் முடிவு கட்டிவிடுகிறோம். இறுதி காலத்தைப்பற்றி நாம் பகிர்ந்துகொள்ளும் கருத்துக்கள், பொதுவாக, பரபரப்பையும், அச்சத்தையும் உருவாக்கும் கருத்துக்களாகவே உள்ளன. உலக முடிவு, இறுதிக்காலம், மானிட மகனின் இரண்டாம் வருகை ஆகியவை நமக்குள் எவ்வகை உணர்வுகளை எழுப்புகின்றன? எவ்வகை உண்மைகளைச் சொல்லித்தருகின்றன? என்பதைச் சீர்தூக்கிப் பார்க்க, இந்த ஞாயிறு, தகுந்ததொரு தருணமாக அமைந்துள்ளது.

இன்று, திருவருகைக் காலத்தின் முதல் ஞாயிறு. ஒவ்வோர் ஆண்டும், திருவருகைக் காலத்துடன், ஒரு புதிய வழிபாட்டு ஆண்டைத் துவக்குகிறோம். திருவருகைக் காலம் என்றதுமே, கிறிஸ்மஸ் விழாவுக்கான ஏற்பாடுகள், களைகட்டத் துவங்கிவிடும். திருஅவை கொண்டாடும் அனைத்து விழாக்களிலுமே, கிறிஸ்மஸ் விழா, தனியிடம் பெறுகிறது; ஏராளமான மகிழ்வைக் கொணர்கிறது. கிறிஸ்துவ உலகையும் தாண்டி, உலகில் பெரும் தாக்கத்தை உருவாக்கும் விழா இது என்று சொன்னால், மிகையல்ல. குழந்தை வடிவில் நம் இறைவன் வருவார் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கும் திருவருகைக் காலத்தின் முதல் ஞாயிறன்று, உலகின் முடிவில் இறைவன் மீண்டும் வருவதை நினைவுறுத்தும் நற்செய்தி நமக்குத் தரப்பட்டுள்ளது.

உலக முடிவைப் பற்றி நம்மால் தீர்மானமாக ஒன்றும் சொல்லமுடியாது. அது நாளையே வரலாம், இன்னும் பல கோடி ஆண்டுகள் சென்று வரலாம், அல்லது, வராமலேயேப் போகலாம். ஆனால், நம் ஒவ்வொருவரின் தனிப்பட்ட உலக வாழ்வு முடியும் என்பது, திண்ணமான உண்மை. இந்த முடிவும், எப்போது வரும் என்பது, நிச்சயமற்ற ஒன்று. உலகின் முடிவு, அல்லது, நமது வாழ்வின் முடிவு என்பதைக் குறித்த நம் கண்ணோட்டம் என்ன?

எல்லாம் முடிந்துவிடும், எல்லாம் அழிந்துவிடும் என்ற கோணத்தில் சிந்தித்தால், மனதில் வெறுமை உணர்வுகள் மேலோங்கும், வாழ்வதில் பொருளே இல்லை என்ற சலிப்பு உருவாகும். உலக முடிவில் அல்லது வாழ்வின் முடிவில் நாம் இறைவனைச் சந்திக்கச் செல்கிறோம் என்ற எண்ணம், எதிர்பார்ப்பை உருவாக்கலாம். நாம் சந்திக்கச் செல்வது, நமது அன்புத் தந்தையை, தாயை, அல்லது உற்ற நண்பரை என்ற கண்ணோட்டம் இருந்தால், இச்சந்திப்பை ஆவலுடன் எதிர்பார்ப்போம். நாம் சந்திக்கப் போவது, நம்மைத் தீர்ப்பிடவிருக்கும் ஒரு நீதிபதியை என்ற கண்ணோட்டம் இருந்தால், இச்சந்திப்பு, பயத்தையும், கலக்கத்தையும் உருவாக்கும்.

நமக்குத் தெரியாத ஒருவரைச் சந்திக்கச் செல்லும் நேரங்களில், நாம் நடந்துகொள்ளும் விதம், நாம் மற்ற நேரங்களில் நடந்துகொள்ளும் விதத்தைவிட வித்தியாசமாக இருக்கும். அதுவும், நாம் சந்திக்கச் செல்வது, மிக முக்கியமான ஒருவர் என்றால், மிகவும் கவனமாக நடந்துகொள்வோம். குழந்தைகளிடமும், வயதானவர்களிடமும் இந்த மாற்றங்கள் இருக்காது. அதேபோல், ஆன்மீகத்தில் அதிகம் வளர்ந்தவர்களிடமும் இந்த மாற்றங்கள் இருக்காது. யார் பார்த்தாலும், பார்க்காமல் போனாலும் சரி. அவர்கள் எந்நேரத்திலும் உண்மையான ஈடுபாட்டுடன் ஒவ்வொரு நாள் செயல்களையும் செய்வர். நேரத்திற்குத் தக்கதுபோல், தன்னைச் சூழ்ந்திருப்போருக்குத் தகுந்ததுபோல், வாழ்வை மாற்றிக்கொள்ளாமல் வாழ்ந்த பல உயர்ந்த மனிதர்களின் வாழ்க்கை, நமக்குப் பாடமாக அமையவேண்டும்.

நகைச்சுவை உணர்வுடன் எப்போதும் வாழ்ந்ததாகச் சொல்லப்படும் புனித பிலிப் நேரி, ஒருநாள், நண்பர்களுடன் சீட்டு விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது சாவைப் பற்றிய பேச்சு அங்கு எழுந்தது. நண்பர்களில் ஒருவர் பிலிப்பிடம், "பிலிப், இதோ, அடுத்த நிமிடமே நீ இறக்கப் போகிறாய் என்று தெரிந்தால், என்ன செய்வாய்?" என்று கேட்டார். பிலிப் ஒரு நிமிடம் சிந்தித்தார். பின்னர் தன் நண்பரிடம், "தொடர்ந்து சீட்டு விளையாடிக் கொண்டிருப்பேன்" என்றார்.

மரணத்தை, பயங்கரமான ஒரு மாற்றமாக, முடிவாகப் பார்ப்பவர்கள், அதைக் கண்டு பயப்பட வேண்டியிருக்கும். காரணம்? அவர்களது வாழ்வுக்கும், சாவுக்கும் இடையே ஏகப்பட்ட முரண்பாடுகள் இருக்கலாம். இந்த முரண்பாடுகளை எல்லாம் சரிசெய்துவிட்டு, மரணத்தைச் சந்திக்க அவர்களுக்கு அதிக நேரம் தேவைப்படுகிறது. ஆனால், வாழ்வு முழுவதையும், நல்லவிதமாக, பொறுப்புணர்வுடன் வாழ்பவர்களுக்கு, வாழ்ந்தவர்களுக்கு சாவு எவ்வகையிலும் பயத்தை உண்டாக்காது என்பதற்கு, புனித பிலிப் நேரி அவர்கள், நல்லதோர் எடுத்துக்காட்டு.

சாவின் வழியாக, தன்னைச் சந்திக்கப்போவது அல்லது தான் சென்றடையப்போவது இறைவன்தான் என்பதை ஆழமாக உணர்ந்தபின், பயம், பரபரப்பு எல்லாம் ஏன்? தேவையில்லையே. புனித பிலிப் நேரியைப் பொருத்தவரை, நாம் இப்படி கற்பனை செய்து பார்க்கலாம். நண்பர் சொன்னதுபோலவே, சீட்டு விளையாடிக் கொண்டிருக்கும்போது அவருக்கு சாவு நேரிட்டால், மறு வாழ்வில், அந்த இறைவனோடு, தன் விளையாட்டைத் தொடர்ந்திருப்பார், பிலிப்.

ஜான் வெஸ்லி என்பவர், 18ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு மேதை. கிறிஸ்தவ வாழ்வு என்பது, பொறுப்புடன் சரியானக் கணக்கை இறைவனிடம் ஒப்படைக்கும் ஒரு பணி என்ற எண்ணத்தை, இங்கிலாந்து மக்கள் மத்தியில் விதைத்தவர் இவர். “இன்று உங்கள் வாழ்வின் கடைசி நாள் என்றால் நீங்கள் என்ன செய்வீர்கள்?” என்று இவரிடம் ஒருவர் கேட்டபோது, இவர் சொன்ன பதில் இதுதான்: "மாலை நான்கு மணிக்கு, நான் வழக்கம்போல் தேநீர் அருந்துவேன், 6 மணிக்கு, நோயுற்றிருக்கும் திருமதி பிரவுன் அவர்களை மருத்துவமனையில் பார்க்கச் செல்வேன், 8 மணிக்கு, என் மாலை செபங்களைச் சொல்வேன், இரவு உணவுக்குப் பின், வழக்கம்போல் படுக்கச் செல்வேன்... விழித்தெழும்போது, என் இறைவன் முகத்தில் விழிப்பேன்" என்று சொன்னாராம்.

புனித பிலிப் நேரியைப் போல், ஜான் வெஸ்லியைப் போல், மனதில் எவ்வித அச்சமுமின்றி, அமைதியாக மரணத்தைச் சந்திக்கும் பக்குவம், ஒரு நாளில் உருவாகும் மனநிலை அல்ல. வாழ்நாளெல்லாம் ஒருவர் பழக்கப்படுத்தும் மனநிலை அது. இத்தகைய நிலையை அடைந்தவர்கள், தங்கள் தனிப்பட்ட வாழ்வில் ஆழ்ந்த அமைதியை உணர்ந்தவர்கள். அமைதியை, தங்கள் உயிர் மூச்சாகக் கொண்டு வாழ்பவர்கள் இவ்வுலகில் பெருகினால், நாம் இன்று ஏங்கித் தவிக்கும் அமைதி, உலகெங்கும் நிறையும்.

அமைதி நிறைந்த உலகை ஒரு கனவாக, கற்பனையாகக் கண்டவர், இறைவாக்கினர் எசாயா. அவரது கற்பனை வரிகள், இந்த ஞாயிறன்று, நமது முதல் வாசகமாக ஒலிக்கின்றன. இறைவாக்கினர் எசாயா கண்ட கனவு, நம் உள்ளத்திலும் நம்பிக்கையை உருவாக்கட்டும்.

எசாயா 2 : 4-5

அவர்கள் தங்கள் வாள்களைக் கலப்பைக் கொழுக்களாகவும் தங்கள் ஈட்டிகளைக் கருக்கரிவாள்களாகவும் அடித்துக் கொள்வார்கள், ஓர் இனத்திற்கு எதிராக மற்றோர் இனம் வாள் எடுக்காது: அவர்கள் இனி ஒருபோதும் போர்ப்பயிற்சி பெறமாட்டார்கள். யாக்கோபின் குடும்பத்தாரே, வாருங்கள் நாம் ஆண்டவரின் ஒளியில் நடப்போம்.

இறைவாக்கினர் எசாயா சொல்லும் வார்த்தைகளைக் கேட்கும்போது, இத்தகைய உலகம், கற்பனையாக, கனவாக மட்டுமே இருக்கமுடியும். நனவாக மாறவே முடியாது என்று, நம்மில் பலர் தீர்மானித்து விடுகிறோம். எனவே, இப்படி ஒரு உலகை நினைத்துப்பார்த்து, ஏக்கப் பெருமூச்சு விடலாம், அல்லது ஒரு விரக்திச் சிரிப்பு சிரிக்கலாம். நமது ஏக்கத்திற்கும், விரக்திக்கும் காரணம் உள்ளது. எசாயாவின் கனவில், போர் கருவிகள் விவசாயக் கருவிகளாக மாறுகின்றன. நாம் வாழும் சூழலில், விவசாயக் கருவிகள், போர் கருவிகளாக மாறி வருகின்றன. பயிர்களை அறுவடை செய்யும் அரிவாள், உயிர்களை அறுவடை செய்யும் கொடூரம் நடந்து வருகிறது.

மனிதர்கள் கண்டுபிடித்த அனைத்துக் கருவிகளையும் கொண்டு ஆக்கவும் முடியும், அழிக்கவும் முடியும். அழிவை மட்டுமே முன்னிறுத்தும் செயல்கள் பெருகி வருவதைப் பார்க்கும்போது, கலிகாலம், முடிவுகாலம் ஆரம்பித்து விட்டதோ என்றும் புலம்புகிறோம்.

முடிவு என்றாலே, அழிவுதானா? இல்லை. முடிவு, இறுதி என்பனவற்றை அழிவு என்று பார்க்கலாம், அல்லது நிறைவு என்ற கோணத்திலும் சிந்திக்கலாம். அது நம் கண்ணோட்டத்தைப் பொருத்தது. தகுந்த கண்ணோட்டம், நமது எண்ணங்களை மட்டுமல்ல, நமது வாழ்வையே மாற்றும் சக்திபெற்றது.

இரண்டாம் உலகப் போரின்போது நிறுவப்பட்ட நாத்சி வதை முகாம்களைப் பற்றி ஆயிரமாயிரம் கதைகள், திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. Jacob the Liar, அதாவது, ‘பொய்சொல்லும் ஜேக்கப்’ என்ற திரைப்படம், தனி ஒருவரின் மாறுபட்ட கண்ணோட்டம், எப்படி, அவரைச் சுற்றியிருப்பவர்களையும் மாற்றுகிறது என்பதைக் காட்டும் ஓர் அழகியத் திரைப்படம்.

யூத இனத்தைச் சார்ந்த ஜேக்கப் என்ற ஒரு கடைக்காரர், ஜெர்மானியர்களால் பிடிபட்டு, நாத்சி வதை முகாமில் சேர்க்கப்படுகிறார். அவர் அந்த முகாமில் சேரும்போது, அங்கு, பலர், தற்கொலை செய்துகொண்டனர் என்பதை அறிகிறார். அவர், விளையாட்டாக ஒரு நாள், ரேடியோவில் தான் கேட்டதாக ஒரு செய்தியைக் கூறுகிறார். அதாவது, இன்னும் சில நாட்களில், ஜெர்மானியப் படைகள் தோற்கடிக்கப்படும் என்ற செய்தி அது. அந்த ரேடியோ எங்கு உள்ளதெனக் கேட்கும் எல்லாரிடமும், அது ஒரு பெரிய இரகசியம் என்று மட்டும் கூறுகிறார். ஜேக்கப் கூறும் செய்திகள், பலருக்கு நம்பிக்கை தருவதால், அவர் இருந்த முகாமில் தற்கொலைகள் நின்று போகின்றன. ஜெர்மானிய அதிகாரிகள் அந்த ரேடியோ பற்றி கேள்விப்பட்டு, ஜேக்கப்பைப் பிடித்துச்சென்று, சித்ரவதை செய்கின்றனர். இறுதியில் ஜேக்கப் கொல்லப்படுகிறார். ஆனால், அவர் கற்பனையில் உருவாக்கிய அந்த ரேடியோ, அதன் வழியாகச் சொன்ன நம்பிக்கை தரும் செய்திகள் பலரையும் சாவிலிருந்து காப்பாற்றுகின்றன.

சென்ற ஞாயிறன்று இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டை அதிகாரப் பூர்வமாக நிறைவு செய்தோம். யூபிலி ஆண்டு நிறைவுற்றாலும், இரக்கம் நம் வாழ்விலும், திருஅவை வாழ்விலும் தொடரவேண்டும் என்ற எண்ணத்தை, திருத்தந்தை, ஆயர்கள், அருள்பணியாளர்கள் ஆகிய அனைவரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த யூபிலி ஆண்டின் இறுதியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட, "இரக்கமும் இழிநிலையும்" (Misericordia et Misera) என்ற திருத்தூது மடலின் துவக்கத்தில், திருத்தந்தை கூறும் வார்த்தைகள், இந்த எண்ணத்தை உள்ளத்தில் ஆழப் பதிக்கின்றன.

இரக்கம் நிறைந்து வழிந்த காலமாக அமைந்த இந்தப் புனித ஆண்டு, தொடர்ந்து நம் சமுதாயத்தில் கொண்டாடப்படவேண்டும். திருஅவை வாழ்வில், இரக்கம், ஓர் அடைப்புக்குறிக்குள் சிக்கிக்கொண்ட இடைச்செறுகலாக மாறிவிட முடியாது. நற்செய்தியின் ஆழமான உண்மைகளை வெளிப்படுத்தி, திருஅவையின் உயிர் துடிப்பாக இரக்கம் உள்ளது.

நம் ஒவ்வொருவர் வாழ்விலும் இரக்கம், ஓர் இடைச்செறுகலாக இல்லாமல், இடைவிடாது தொடரவேண்டும், இவ்வுலகமே இரக்கத்தால் நிறைந்து வழியவேண்டும், இரக்கமே நாம் சுவாசிக்கும் மூச்சாக மாறவேண்டும் என்ற செபங்கள், இத்திருவருகைக் காலம் முழுவதும் நம்மிடமிருந்து எழட்டும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.