2016-11-26 16:05:00

கடவுளின் இரக்கத்தின் மேன்மையை தொடர்ந்து அனுபவிப்போம்


நவ.26,2016. “யூபிலி ஆண்டு நிறைவுற்றிருக்கும் இவ்வேளையில், கடவுளின் இரக்கப்பெருக்கத்தின் மேன்மையை, மகிழ்வு, பிரமாணிக்கம் மற்றும் ஆர்வத்தோடு, எவ்வாறு தொடர்ந்து அனுபவிப்பது என்பதை, நாம் முன்னோக்கிப் பார்க்கிறோம்”என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியாக, இச்சனிக்கிழமையன்று வெளியாயின.

மேலும், உரோம் நகரின் புகழ்பெற்ற ஓர் ஆலயம் மற்றும் துறவு இல்லம் குறித்த ஓர் ஒப்பந்தத்தை, திருப்பீடமும், பிரான்ஸ் நாடும் அமல்படுத்தத் தொடங்கியுள்ளன.

உரோம் நகரின் Trinità dei Monti ஆலயம் மற்றும் துறவு இல்லம் குறித்து, 1872ம் ஆண்டு மே 14, 1828ம் ஆண்டு செப்டம்பர் 8, 1974ம் ஆண்டு, மே 4, 1999ம் ஆண்டு சனவரி 21, 2005ம் ஆண்டு ஜூலை 12 ஆகிய நாள்களில், தூதரக உறவுகள் ஒப்பந்தத்தில், செய்யப்பட்ட மாற்றங்களை, திருப்பீடமும், பிரான்ஸ் நாடும் அமல்படுத்தத் தொடங்கியுள்ளன என்று, திருப்பீடம் இவ்வெள்ளியன்று வெளியிட்ட அறிக்கை ஒன்று கூறுகிறது.

இந்த ஒப்பந்தம், 2016ம் ஆண்டு நவம்பர் 23, இப்புதனன்று அமலுக்கு வந்துள்ளது.

உரோம் நகரின் புகழ்பெற்ற இஸ்பானியப் படிகளை(Spanish Steps) நோக்கியுள்ள இந்தப் பகுதி, 19ம் நூற்றாண்டிலிருந்து இன்று வரை, ப்ரெஞ்ச் கத்தோலிக்க அமைப்புகளின் கண்காணிப்பில் இருந்தது. தற்போது, இந்த ஒப்பந்தத்தின் வழியாக, இந்தப் பகுதி, இம்மானுவேல் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இம்மானுவேல் குழு, பாப்பிறை உரிமை பெற்ற, ஓர் அனைத்துலக பொதுவான கழகமாகும். இக்குழு, 1972ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.