2016-11-26 16:14:00

இலங்கையில், அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட விண்ணப்பம்


நவ.26,2016. இலங்கையில், அனைத்து அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதை விண்ணப்பிக்கும் மனு ஒன்றை, அந்நாட்டின் சமூக ஆர்வலர் அமைப்பு ஒன்று, அரசுத்தலவைர் மைத்ரிபால ஸ்ரீசேனா அவர்களிடம், இவ்வாரத்தில் சமர்ப்பித்துள்ளது.

இலங்கையின், தேசிய அரசியல் கைதிகள் விடுதலை அமைப்பு(NMRPP), சமர்ப்பித்துள்ள இந்த மனுவில், அனைத்து அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்படவும், அந்நாட்டின் பல்வேறு இனக் குழுக்களையும் உள்ளடக்கிய பிரச்சனைகளுக்குத் தீர்வு காணப்படவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

இந்த மனுவில், இலங்கையின் பல்வேறு பகுதிகளிலிருந்து, ஏறத்தாழ ஐம்பதாயிரம் பேர் கையெழுத்திட்டுள்ளனர். மேலும், இலங்கையில், குறைந்தது 160 அரசியல் கைதிகள் உள்ளனர் என்று, சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

மேலும், இலங்கையின் வடகிழக்குப் பகுதியில், 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைம்பெண்கள், தங்களின் குடும்பங்களை, கஷ்டப்பட்டு நிர்வகித்து வருகின்றனர் என்று சொல்லப்பட்டுள்ளது.

இதற்கிடையே, நாட்டை வறுமையிலிருந்து விடுவிக்கும் நோக்கத்தில், 2017ம் ஆண்டை, வறுமை ஒழிப்பு ஆண்டாக அறிவித்துள்ளது இலங்கை அரசு.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.