2016-11-26 15:37:00

இத்தாலிய இளையோர் தன்னார்வலர்களுக்கு திருத்தந்தை பாராட்டு


நவ.26,2016. வாழ்வில் முழு அர்த்தத்தையும், மகிழ்வையும் அளிக்கும் பாதை, எல்லாருக்கும் ஒரே மாதிரியாக இல்லையெனினும், ஒவ்வொருவரும், அவரவர் ஆளுமைக்கு ஏற்றவண்ணம் அப்பாதையைப் பின்பற்றுமாறு, ஓர் இளையோர் குழுவிடம் கேட்டுக் கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.  

இத்தாலிய தேசிய இளையோர் தன்னார்வலர் அமைப்பின் ஏறக்குறைய ஏழாயிரம் பேரை, வத்திக்கானின் அருளாளர் ஆறாம் பவுல் அரங்கத்தில், இச்சனிக்கிழமை காலையில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாறு கூறினார்.

இந்த அமைப்பினரின் பணிகள், குறிப்பாக, சமுதாயத்தில் நலிந்தவர்க்கு இவர்கள் ஆற்றும் பணிகள், நாட்டிற்கு, உயிரூட்டம் கொடுப்பதாகவும், விலைமதிப்பற்றதாகவும் உள்ளன என்றும், சமுதாயத்தின் நன்மைகளை, வெளிச்சத்திற்குக் கொணர்வதற்கு, இவர்களின் பணிகள் இன்றியமையாதவை என்றும் கூறினார் திருத்தந்தை.  

சுற்றுச்சூழல் பாதுகாப்பு, புலம்பெயர்ந்தவர், குடிபெயர்ந்தவர், மாற்றுத்திறனாளிகள், சமூகத்தில் தேவையில் இருப்போர் உட்பட, இந்த அமைப்பு ஆற்றிவரும் பணிகளைப் பாராட்டி, ஊக்கப்படுத்திய திருத்தந்தை, இப்பணிகளில் ஈடுபட்டுள்ள தன்னார்வலர்களுக்கு, தனது நன்றியையும் தெரிவித்தார்.

சமுதாயத்தில் நலிந்தவர்கள் தொடங்கி, ஒவ்வொருவரின் உரிமைகள் மதிக்கப்பட்டு, பாதுகாக்கப்படுமாறும் திருத்தந்தை கேட்டுக்கொண்டார்.

இந்தத் தேசிய அமைப்பு ஆரம்பிக்கப்பட்டதன் 15ம் ஆண்டையொட்டி, இந்த அமைப்பினர் திருத்தந்தையைச் சந்தித்தனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.