2016-11-26 16:01:00

ஃபிடல் காஸ்ட்ரோ மறைவுக்கு திருத்தந்தை இரங்கல் செய்தி


நவ.26,2016. கியூபாவின் முன்னாள் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ அவர்களின் மறைவுக்கு, தனது இரங்கலைத் தெரிவிக்கும் தந்திச் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கியூப நாட்டின் தற்போதைய அதிபர் ரவுல் காஸ்ட்ரோ அவர்களுக்கு அனுப்பியுள்ள செய்தியில், ஃபிடல் காஸ்ட்ரோ அவர்களின் குடும்பத்தினருக்கும், நாட்டினருக்கும், தனது இரங்கலைத் தெரிவிப்பதாகவும், அவரின் ஆன்மா நிறை சாந்தியடையச் செபிப்பதாகவும், கியூப மக்களை, அந்நாட்டின் பாதுகாவலராம் கோப்ரே பிறரன்பு அன்னை மரியாவிடம் அர்ப்பணிப்பதாகவும் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

புனித திருத்தந்தை 2ம் ஜான் பால்(1998), முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்(2012), திருத்தந்தை பிரான்சிஸ்(2015) ஆகிய மூவருமே, கியூபாவில், ஃபிடல் காஸ்ட்ரோ அவர்களைச் சந்தித்திருக்கின்றனர். கியூப கம்யூனிச நாட்டில் மாற்றங்கள் ஏற்படுவதற்கு, திருத்தந்தையரும், கத்தோலிக்கத் திருஅவையும் முக்கியமாகப் பங்காற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்திய இலங்கை நேரப்படி, இச்சனிக்கிழமை காலை 9 மணியளவில், தனது 90வது வயதில் காலமான ஃபிடல் காஸ்ட்ரோ அவர்கள், கியூபா நாட்டின் புரட்சித் தலைவராவார். இவரின் மறைவுக்கு, இந்தியப் பிரதமர், தமிழக அரசியல் தலைவர்கள் உட்பட, பல தலைவர்கள் தங்களின் இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

ஏறக்குறைய ஐம்பது ஆண்டுகளுக்கு, கியூபாவை, ஒரு கட்சி அரசாக ஆண்டு வந்த ஃபிடல் காஸ்ட்ரோ அவர்கள், நோயின் காரணமாக, 2008ம் ஆண்டில், கியூபாவின் தலைமைப் பொறுப்பை, தனது சகோதரர் ரவுல் காஸ்ட்ரோ அவர்களிடம் ஒப்படைத்தார். ஃபிடல் காஸ்ட்ரோ அவர்கள், இலத்தீன் அமெரிக்கா மற்றும் ஆப்ரிக்காவில், மார்க்சீயத்தைப் பரப்ப முயற்சித்தவர்.  

ஃபிடல் காஸ்ட்ரோ அவர்களின் மறைவுக்கு, கியூபா, ஒன்பது நாள்கள் துக்கம் அனுசரிக்கின்றது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.