2016-11-25 15:17:00

பெண்களுக்கு எதிரான வன்முறை மனித உரிமை மீறல்


நவ.25,2016. பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறை, மனித உரிமை மீறல் என்பதை ஏற்கும் மனநிலை, உலகளவில் வளர்ந்து வருகின்றது என்று, ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் அவர்கள் கூறினார்.

நவம்பர் 25, இவ்வெள்ளியன்று, கடைப்பிடிக்கப்பட்ட பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு உலக நாளுக்கு வெளியிட்ட செய்தியில் இவ்வாறு கூறியுள்ள பான் கி மூன் அவர்கள், பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கு, மேலும் நடவடிக்கைகள் எடுக்கப்படுமாறு வலியுறுத்தியுள்ளார்.

பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறை, பொதுநலத்திற்குக் கேடு வருவித்து, நீடித்திருக்கக்கூடிய நிலையான வளர்ச்சிக்கு, பெரும் தடையாக உள்ளது என்பதையும் உலக சமுதாயம் ஏற்கத் தொடங்கியுள்ளது எனவும், அச்செய்தி கூறுகிறது. 

உலகில், பெண்களுக்கு எதிரான வன்முறைகள், ஒவ்வொரு நாளும் இடம்பெறுகின்றன என்றும், இவற்றைக் களைவதற்கு, அரசியல் துறைகளில், நல்மனது காட்டப்பட்டு, முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்றும் கூறியுள்ளார் பான் கி மூன்.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.