2016-11-25 15:04:00

துன்புறும்பெண்களின் மாண்பு மதிக்கப்பட ஆண்டவர் விரும்புகிறார்


நவ.25,2016. “ஏராளமான பெண்கள், வாழ்வின் சுமைகளாலும், கொடூர வன்முறைகளாலும் மிகவும் துன்புறுகின்றனர்! அவர்கள், இவற்றிலிருந்து  விடுதலை பெறவும், அவர்களின் மாண்பு மதிக்கப்படவும் வேண்டுமென்று ஆண்டவர் விரும்புகிறார்” என்ற சொற்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தியாக, இவ்வெள்ளியன்று வெளியிடப்பட்டன.

பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு நாள், நவம்பர் 25, இவ்வெள்ளியன்று, உலகளவில் கடைப்பிடிக்கப்பட்டவேளை, திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியும், இந்த உலக நாளையொட்டியதாக அமைந்திருந்தது. 

இன்று உலகில், மூன்று பெண்களுக்கு ஒருவர் வீதம், பாலியலில் அல்லது உடலில் வன்முறையை எதிர்கொள்கின்றனர் என்றும், இலட்சக்கணக்கான சிறுமிகள், கட்டாயத் திருமணத்திற்கும், பாலியல் கொடுமைக்கும் உட்படுகின்றனர் என்றும், உலகில் ஏறத்தாழ இருபது கோடிச் சிறுமிகளின் பிறப்புறுக்கள் சேதமாக்கப்படுகின்றன என்றும் புள்ளி விபரங்கள் கூறுகின்றன.

பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு உலக நாள், நவம்பர் 25ம் தேதி கடைப்பிடிக்கப்படுமாறு, 1999ம் ஆண்டு, டிசம்பர் 17ம் தேதி, ஐ.நா. பொது அவை, தீர்மானம் நிறைவேற்றியது. இந்த நாளை, பெண் ஆர்வலர்கள், 1981ம் ஆண்டிலிருந்து, கடைப்பிடித்து வருகின்றனர்.

தொமினிக்கன் குடியரசில், சர்வாதிகாரி Rafael Trujillo (1930-1961)அவர்கள், அரசியல் ஆர்வலர்களான மூன்று Mirabal சகோதரிகளை, 1960ம் ஆண்டு நவம்பர் 25ம் தேதி, கொடூரமாய்க் கொலைசெய்ததை முன்னிட்டு, நவம்பர் 25ம் நாள், பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு உலக நாளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.