2016-11-25 14:56:00

திருத்தந்தை: இறுதித் தண்டனைத் தீர்ப்பு, சித்ரவதைக்கூடம் அல்ல


நவ.25,2016. இறுதித் தண்டனைத் தீர்ப்பு, சித்ரவதைக்கூடம் அல்ல, ஆனால், அது இறைவனிடமிருந்து விலகி இருப்பதாகும் என்றும், அலகை, நம்மை மயக்கி, வாழ்வைச் சீர்குலைக்கும் என்பதால், கிறிஸ்தவர்கள், அலகையோடு ஒருபோதும் உரையாடல் நடத்தக் கூடாது என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வெள்ளியன்று கேட்டுக்கொண்டார்.    

சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில், இவ்வெள்ளி காலையில் நிறைவேற்றியத் திருப்பலியில், உலகின் முடிவு பற்றிய சிந்தனைகளை வழங்கிய திருத்தந்தை, வானதூதர் அலகையைப் பிடித்து, அதை முரட்டுச் சங்கிலியால் கட்டி, அதைப் படுகுழியில் எவ்வாறு எறிந்தார் என்பது பற்றிச் சொல்லும் திருவெளிப்பாட்டு நூல் பகுதியை மையப்படுத்தி மறையுரையாற்றினார்.

மனிதரை மயக்கும் பாம்பு அல்லது அலகை, மீண்டும் நாடுகளைப் படுகுழியில் தள்ளாதவண்ணம், அது படுகுழியில் எறியப்பட்டது என்றும், அலகை, ஒரு பொய்யன், அது பொய்யை உற்பத்தி செய்கின்றது மற்றும் மாயவேலைகளைச் செய்கின்றது என்றும் கூறினார் திருத்தந்தை.

இயேசு, அலகையிடம் எவ்வாறு நடந்துகொண்டார் என்பதை விளக்கிய திருத்தந்தை, இயேசு, அலகையின் பெயரைக் கேட்டார், ஆனால் அதனோடு அவர் உரையாடவில்லை, மாறாக, அதனை விரட்டியடித்தார், எனவே, அலகையாகிய இந்தப் பொய்யனோடு நாம் உரையாடக் கூடாது என்றும் கூறினார்.

நாம் ஒவ்வொருவரும் செய்த செயல்களை வைத்து, நம் ஆண்டவர், எவ்வாறு நம்மைத் தீர்ப்பிடுவார் என்பதை, திருவெளிப்பாட்டு நூல் பகுதியிலிருந்து விளக்கிய திருத்தந்தை, தண்டனை வழங்கப்பட்டவர்கள், நெருப்பு ஏரியில் எறியப்பட்டனர், அது இரண்டாவது மரணம் என்றும் கூறினார். இறுதித் தண்டனைத் தீர்ப்பு, சித்ரவதைக்கூடம் அல்ல எனவும், இரண்டாவது மரணமாகிய இத்தீர்ப்பைப் பெற்றவர்கள், இறையாட்சியில் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டார்கள் எனவும், இறைவனிடமிருந்து விலகி இருப்பதே அத்தீர்ப்பு எனவும் திருத்தந்தை கூறினார். நாம் நம் இதயங்களைத் தாழ்மையோடு திறந்து வைத்தால், இயேசுவால் மகிழ்வையும் மீட்பையும், மன்னிப்பையும் நாமும் பெறுவோம் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நம்பிக்கையே, இயேசுவைச் சந்திப்பதற்கு நம் இதயங்களைத் திறக்கின்றது என்றும், இயேசுவைச் சந்திக்கும் இந்த மிக அழகான நேரத்திற்காகவே நாம் காத்திருக்கிறோம் என்றும், தன் மறையுரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.