2016-11-24 16:40:00

வியட்நாம் அரசுத்தலைவர் திருத்தந்தையுடன் சந்திப்பு


நவ.24,2016. நவம்பர் 23, இப்புதன் மாலை 5 மணிக்கு, வியட்நாம் அரசுத்தலைவர், Tran Dai Quang அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார்.

ஏறத்தாழ 30 நிமிடங்கள் நீடித்த இந்தச் சந்திப்பின்போது, வத்திக்கானுக்கும் திருப்பீடத்திற்கும் இடையே நிலவும் உறவுகள் குறித்தும், இந்த உறவை வலுப்படுத்த மேற்கொள்ளக்கூடிய வழிமுறைகள் குறித்தும் பேசப்பட்டன என்று திருப்பீட செய்தித் தொடர்பகம் அறிவித்துள்ளது.

வியட்நாமில் பயன்படுத்தப்பட்ட பழமைவாய்ந்த ஒரு தாளக்கருவியை அரசுத் தலைவர், திருத்தந்தைக்கு பரிசாக அளித்தார். "பாலைவனம் தோட்டமாக மாறும்" என்ற வார்த்தைகள் பொறிக்கப்பட்ட ஒரு பதக்கத்தையும், திருத்தந்தை வெளியிட்டுள்ள "அன்பின் மகிழ்வு" மற்றும், "இறைவா உமக்கேப் புகழ்" என்ற மடல்களையும்,  திருத்தந்தை அரசுத்தலைவருக்கு வழங்கினார்.

அரசுத் தலைவர், திருத்தந்தையுடன் மேற்கொண்ட இச்சந்திப்பிற்குப் பின்னர், திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களையும், பன்னாட்டு உறவுகள் துறையின் தலைவர், பேராயர் பால் ரிச்சர்ட் காலகர் அவர்களையும் சந்தித்தார்.

8 கோடியே 90 இலட்சம் மக்கள் தொகையைக் கொண்டுள்ள வியட்நாம் நாட்டில், 6.5 விழுக்காட்டினர் கத்தோலிக்கர். வியட்நாம் நாட்டிற்கும், வத்திக்கானுக்கும் அதிகாரப்பூர்வ தூதரக உறவுகள் இல்லையெனினும், வியட்நாமில் தங்காமல் செயலாற்றும் திருப்பீடத் தூதரை அந்நாடு ஏற்றுக்கொண்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.