2016-11-24 16:40:00

நவம்பர் 23 இங்கிலாந்தின் வழிபாட்டுத் தலங்களில் சிவப்பு புதன்


நவ.24,2016. உலகம் முழுவதும் தங்கள் மத நம்பிக்கைக்காகத் துன்புறுவோருடன் ஒருமைப்பாட்டை அறிவிக்கும் அடையாளமாக, இங்கிலாந்தின் அனைத்து கோவில்களிலும், நவம்பர் 23, புதனன்று, சிவப்பு வண்ண விளக்குகள் ஏற்றப்பட்டன.

Aid to the Church in Need என்ற பிறரன்பு அமைப்பு, ஒருங்கிணைத்த இந்தச் சிறப்பு நிகழ்வில் கலந்துகொள்ள, சிரியாவின் தமஸ்கு நகரில் பணியாற்றும் சிரிய ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தந்தை, 2ம் இக்னேசியஸ் அஃப்ரேம் அவர்கள் இலண்டனுக்கு வருகை தந்திருந்தார்.

இந்நிகழ்வில் பங்கேற்கும் வண்ணம், பள்ளி மாணவ, மாணவியர் சிவப்பு வண்ணத்தில் உடையணிந்து வந்திருந்தனர். அதேபோல், நவம்பர் 23 அன்று சிறப்பிக்கப்பட்ட மறைசாட்சியான திருத்தந்தை புனித கிளமென்ட் நினைவாக, அருள் பணியாளர்களும் சிவப்பு வண்ண திருப்பலி உடை அணிந்திருந்தனர் என்று, ICN கத்தோலிக்கச் செய்தி கூறுகிறது.

இந்த நாளையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு சிவப்பு பேருந்து, வெஸ்ட்மின்ஸ்டர் பேராலயத்திலிருந்து காலை 11.30 மணிக்குக் கிளம்பி, சிவப்பு விளக்குகளால் ஒளியேற்றப்பெற்றிருந்த Imam Khoei இஸ்லாமிய மையம், புனித ஜான் வுட் யூத தொழுகைக்கூடம் வழியே சென்று, இறுதியில், மாலை, வெஸ்ட்மின்ஸ்டர் பேராலயத்திற்குத் திரும்பிய வேளையில், அங்கு திருப்பலி நிறைவேற்றப்பட்டது.

இந்த சிவப்பு புதனையொட்டி, Soul Sanctuary Gospel Choir என்ற இசைக்குழுவினரின் இசை நிகழ்ச்சியும் பேராலய சதுக்கத்தில் நிகழ்ந்தது.

ஆதாரம் : ICN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.