2016-11-24 16:08:00

திருத்தந்தை:உலகம் சந்திக்கும் புது அடிமைத்தனம், போதைப்பொருள்


நவ.24,2016. போதைப்பொருள்களைச் சார்ந்திருப்பது இவ்வுலகம் சந்திக்கும் புதுவகை அடிமைத்தனம் என்றும், இந்த அடிமைத்தனம் பரவுவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன்னைச் சந்திக்க வந்திருந்த ஓர் அறிஞர்கள் குழுவிடம் கூறினார்.

பாப்பிறை அறிவியல் கழகம், நவம்பர் 23, 24 ஆகிய இரு நாள்கள்,  வத்திக்கானில் நடத்திய ஒரு கருத்தரங்கில் பங்கேற்ற மருத்துவர்கள், மனநல ஆலோசகர்கள், அறிவியல் துறை நிபுணர்கள் ஆகியோரைச்  சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், போதைப்பொருள் உற்பத்தி, பயன்பாடு, மாற்றுவழிகள் ஆகிய கருத்துக்களில் அவர்களோடு உரையாடினார்.

சிதைந்துபோன குடும்பங்கள், சமுதாயத்தில் உருவாகும் அழுத்தங்கள், ஆபத்தான அனுபவங்களைத் தேடிச்செல்லும் இளையோர், போதைப்பொருள் வர்த்தகம் போன்றவை, போதைப்பொருள் பயன்பாட்டிற்குக் காரணங்களாக அமைகின்றன என்று திருத்தந்தை தன் உரையில் விளக்கிக் கூறினார்.

போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை உடைந்துபோன பொருள்களைப்போல் பாவித்து, அவர்களை எறிந்துவிடும் போக்கு, இன்றைய உலகில் பரவி வருவதையும், திருத்தந்தை ஓர் எச்சரிக்கையாக விடுத்தார்.

போதைப்பொருள் உற்பத்தி, பயன்பாடு, வர்த்தகம் என்ற பறந்து விரிந்த வலையில், சட்டங்களுக்குப் புறம்பான நிறுவனங்கள் மட்டும் செயல்படுவதில்லை, மாறாக, புகழ்பெற்ற வங்கிகளும் செயலாற்றி, இவ்வர்த்தகத்தில் பயன்படுத்தப்படும் கறுப்புப் பணத்தை சலவை செய்கின்றன என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

போதைப்பொருள் என்ற பிரச்சனையைத் தடுப்பது மிக முக்கியமான வழி என்றாலும், இந்தப் பிரச்சனையில் சிக்கியிருப்போரை மீட்பதும், அவர்களுக்கு சமுதாயத்தில் மீண்டும் மதிப்புள்ள நிலையை வழங்குவதும் நம் அனைவரின் கடமை என்பதை தன் உரையில் வலியுறுத்தினார், திருத்தந்தை.

60க்கும் மேற்பட்ட அறிஞர்கள் கலந்துகொண்ட இந்த பன்னாட்டு கருத்தரங்கிற்கென தெரிவு செய்யப்பட்ட மையக்கருத்தான, "போதைப்பொருள்கள்: உலகளாவிய இந்தப் பிரச்சனையும், தீர்வுகளும்" என்ற தலைப்பு, திருத்தந்தையின் விருப்பத்திற்கேற்ப தெரிவு செய்யப்பட்டது என்று, பாப்பிறை அறிவியல் கழகம் அறிவித்துள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.