2016-11-23 15:49:00

மோதல்களுக்குப் பதில், உறவை வளர்க்க, தண்ணீர் பயன்படவேண்டும்


நவ.23,2016. ஐ.நா. அவையில் இடம்பெற்றுள்ள நாடுகளில், நான்கில் மூன்று பகுதி நாடுகள், ஆறுகளையும், நீர்நிலைகளையும் பகிர்ந்து வருகின்றன என்று, ஐ.நா. பொதுச் செயலர், பான் கி மூன் அவர்கள், இச்செவ்வாயன்று, ஐ.நா. பாதுகாப்பு அவை கூட்டமொன்றில் உரையாற்றினார்.

"தண்ணீர், அமைதி, பாதுகாப்பு" என்ற தலைப்பில் மேற்கொள்ளப்பட்ட ஒரு கலந்துரையாடலில் பங்கேற்ற பான் கி மூன் அவர்கள், உலகில் 260 ஆறுகள், ஒன்றுக்கும் மேற்பட்ட நாடுகள் வழியே ஓடி, கடலில் கலக்கின்றன என்பதைச் சிறப்பாகக் குறிப்பிட்டு, நாடுகளுக்குள், மோதல்களை உருவாக்காமல், உறவை வளர்க்க, தண்ணீர் பயன்படவேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

மனித வரலாற்றில், நிலமும், நிலத்தடி எண்ணையும் இதுவரை மோதல்களை உருவாக்கி வந்துள்ளதுபோல், இனி வரும் ஆண்டுகளில், தண்ணீரும் மோதல்களை உருவாக்கும் நிலையை நாமே உருவாக்கியுள்ளோம் என்று, பான் கி மூன் கவலை வெளியிட்டார்.

இருப்பினும், பல நாடுகள், தண்ணீர் பங்கீடு என்ற அடிப்படையில், தங்கள் ஏனைய கருத்து வேறுபாடுகளையும் தீர்த்துள்ளன என்பதையும் பான் கி மூன் அவர்கள், எடுத்துக்காட்டுகளுடன் எடுத்துரைத்தார்.

தண்ணீர் பங்கீடு, தண்ணீர் பாதுகாப்பு ஆகிய செயல்பாடுகளை நடைமுறைப்படுத்த, பெண்களின் பங்களிப்பு மிகவும் முக்கியம் என்பதையும், ஐ.நா. பொதுச்செயலர், தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.