2016-11-23 15:19:00

இஸ்லாம், கிறிஸ்தவ உரையாடல் குழுவினருடன் திருத்தந்தை


நவ.23,2016. "துன்புறும் வேளையில் பொறுமையாக இருக்கவும், பிறருக்கு அறிவுரை வழங்கும் வேளையில் பணிவுடன் இருக்கவும் தூய ஆவியார் நமக்கு உதவி செய்வாராக" என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியாக, இப்புதனன்று வெளியாயின.

மேலும், திருப்பீட பல்சமய உரையாடல் அவையும், ஈரான் நாட்டின் இஸ்லாமிய கலாச்சாரம் மற்றும் பன்னாட்டு உறவுத் துறையும் உரோம் நகரில் ஏற்பாடு செய்துள்ள ஒரு கூட்டத்தில் கலந்துகொள்ள வந்திருந்த பிரதிநிதிகளை, நவம்பர் 23, இப்புதன் காலை வத்திக்கானில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஸ்லாம், கிறிஸ்தவ உரையாடல், ஒவ்வோர் ஆண்டும் முக்கியத்துவம் பெற்று வருகிறது என்று கூறினார்.

ஈரான் நாட்டு அரசுத் தலைவர், துணைத் தலைவர் ஆகியோர் தன்னைச் சந்திக்க வந்திருந்த தருணங்களை நினைவுகூர்ந்த திருத்தந்தை, இச்சந்திப்புக்களின் வழியே, ஈரான் நாட்டின் செறிவுமிக்க கலாச்சாரத்தை தான் உணர்ந்துகொள்ள முடிந்தது என்று கூறினார்.

திருப்பீட பல்சமய உரையாடல் அவையும், ஈரான் நாட்டின் இஸ்லாமிய கலாச்சாரம் மற்றும் பன்னாட்டு உறவுத் துறையும் இதுவரை ஒன்பது முறை சந்தித்து, தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துள்ளன என்பதும், உரோம் நகரில் தற்போது நடைபெற்ற கூட்டம், இவ்விரு தரப்பினருக்கும் இடையே நிகழ்ந்த 10வது கூட்டம் என்பதும் குறிப்பிடத்தக்கன.

நவம்பர் 22, 23 ஆகிய இருநாட்கள் நடைபெற்ற இக்கூட்டத்தில், திருப்பீட பல்சமய உரையாடல் அவையின் தலைவர், கர்தினால் Jean Louis-Pierre Tauran அவர்களும், ஈரான் நாட்டின் இஸ்லாமிய கலாச்சாரம் மற்றும் பன்னாட்டு உறவுத் துறையின் தலைவர், Abouzar Ebrahimi Torkaman அவர்களும் கலந்துகொண்டனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.