2016-11-22 15:43:00

பிலிப்பீன்சில் நீதியின் சக்கரம் நத்தை வேகத்தில் நகர்கின்றது


நவ.22,2016. 2009ம் ஆண்டு பிலிப்பீன்சின் Maguindanao பகுதியில் 32 பத்திரிகையாளர்கள் உட்பட 54 பேர் படுகொலைச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, இதுவரை ஒருவர்கூட நீதியின்முன் கொணரப்படவில்லை என, கவலையை வெளியிட்டுள்ளார் அப்பகுதி ஆயர் ஒருவர்.

பிலிப்பீன்சில் நீதியின் சக்கரம் நத்தை வேகத்தில் நகர்வதால், படுகொலைக்கு உள்ளானோரின் உறவினர்களின் துன்பம், பெருமளவில் உள்ளதாகத் தெரிவித்தார்  Ozamis மறைமாவட்ட ஆயர் Martin Jumoad.

2009ம் ஆண்டு நவம்பர்  23ம் தேதி நடந்த படுகொலைகளுக்குப் பலியானோரின் குடும்ப உறுப்பினர்கள், நம்பிக்கையை இழக்காமல், உறுதியுடன் நீதிக்காகப் போராட வேண்டும் என்ற அழைப்பையும் முன்வைத்தார் ஆயர்.

இதற்கிடையே, பிலிப்பீன்ஸ் நாட்டில், தண்டனை என்ற பயமின்றி குற்றவாளிகள் நடமாடுவதாகவும், குற்றமிழைக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படாததால் அவர்கள் வறுமையில் வாடும் சூழல் இருப்பதாகவும், கவலையை வெளியிட்டார் பிலிப்பீன்ஸ் பத்திரிகையாளர் சங்கத்தின் பொதுச்செயலர் Dabet Panelo.

2009ம் ஆண்டு நவம்பர் 23ம் தேதி, மிந்தனாவோ தீவின் Maguindanao பகுதி அரசியல்வாதியின் உறவினர்கள், ஆதரவாளர்கள் என 54 பேரை, ஏறத்தாழ 200 ஆயுதம் தாங்கிய மனிதர்கள் படுகொலைச் செய்தது தொடர்பாக, இதுவரை ஒருவர்கூட நீதியின்முன் கொணரப்படவில்லை.

ஆதாரம் : UCAN /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.