2016-11-22 15:11:00

கடவுளுக்கு விசுவாசமாக இருந்தால் மரண பயம் தேவையில்லை


நவ.22,2016. நாம் ஆண்டவருக்கு விசுவாசமாக இருந்தால், மரணத்தைக் கண்டு அஞ்சத் தேவையில்லை, ஆனால், ஒருபோதும் இறக்க மாட்டோம் என்பது போன்ற எண்ணத்தில், மேலெழுந்தவாரியான காரியங்களில், நம் வாழ்வை, அமைத்துக்கொள்வது ஆபத்தானது என்று எச்சரித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில், இச்செவ்வாய் காலை நிறைவேற்றிய திருப்பலியில், இவ்வாறு மறையுரையாற்றிய திருத்தந்தை, நாம் எல்லாரும் இறப்போம் என்பதால், நம் வாழ்வின் இறுதி முடிவு பற்றிச் சிந்திக்க, நம் ஆண்டவர் விடுக்கும் அழைப்பை நினைவுபடுத்தினார்.

திருவெளிபாட்டு நூலிலிருந்து எடுக்கப்பட்ட இத்திருப்பலியின் முதல் வாசகத்தை (திவெ.14:14-20) மையப்படுத்தி, மறையுரைச் சிந்தனைகளை வழங்கிய திருத்தந்தை, இறுதித் தீர்ப்பு நாளில், நாம் அனைவரும், எவ்வாறு இயேசுவை எதிர்கொள்வோம் என்பது பற்றி எடுத்துரைத்தார்.

ஒவ்வொரு மனிதரும் இறக்கும்போது, மரணம் பற்றிய தனது சிந்தனைகளை, நாட்குறிப்பேட்டில் எழுதி வருவதாகக் குறிப்பிட்ட திருத்தந்தை, நாம் இறக்கும்போது, எதை விட்டுச் செல்கிறோம், நம் இறுதித் தீர்ப்பு எத்தகையதாய் இருக்கும் என்பது பற்றிச் சிந்திப்பதற்கு, நாம் கடமைப்பட்டுள்ளோம் என்றும் தெரிவித்தார்.

தான் சிறுபிள்ளையாய் இருக்கும்போது, மறைக்கல்வி வகுப்பில், மரணம், இறுதித் தீர்ப்பு, நரகம், விண்ணகம் ஆகிய நான்கு காரியங்களைக் கற்றுக் கொடுத்தனர் என்றும் கூறிய திருத்தந்தை, ஆண்டவருக்கு விசுவாசமாக இருப்பது, ஏமாற்றாது எனவும், இறப்புவரை ஆண்டவருக்கு விசுவாசமாக இருந்தால், வாழ்வின் மகுடம் நமக்குக் கிடைக்கும் எனவும், ஆண்டவருக்கு விசுவாசமாக இருந்தால், மரணத்தைக் கண்டு அஞ்சத் தேவையில்லை எனவும் மறையுரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.