2016-11-22 15:08:00

அடுத்த மூன்று உலக இளையோர் தினங்களின் மையப்பொருள்கள்


நவ.22,2016. அடுத்த மூன்று ஆண்டுகளில்(2017-2019) சிறப்பிக்கப்படும் உலக இளையோர் தினங்களின் தலைப்புக்களை, திருப்பீட பொதுநிலையினர், குடும்பம் மற்றும் வாழ்வு அவை, இச்செவ்வாயன்று வெளியிட்டுள்ளது.

2017,2018,2019 ஆகிய மூன்று ஆண்டுகளில் சிறப்பிக்கப்படும் உலக இளையோர் தினங்களுக்கென, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தேர்ந்தெடுத்துள்ள தலைப்புக்களை வெளியிட்டுள்ள இத்திருப்பீட அவை, இந்த உலக தினம், 2019ம் ஆண்டில், மத்திய அமெரிக்காவிலுள்ள பனாமா நாட்டில் சிறப்பிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

2017ம் ஆண்டில் சிறப்பிக்கப்படும் 32வது உலக இளையோர் தினத்திற்கு, “வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார்,  தூயவர் என்பதே அவரது பெயர் (லூக்.1:49)” என்பதும்,

2018ம் ஆண்டில் சிறப்பிக்கப்படும் 33வது உலக இளையோர் தினத்திற்கு, “மரியா, அஞ்சவேண்டாம்; கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர் (லூக். 1:30) ” என்பதும்,

2019ம் ஆண்டில் பனாமாவில் சிறப்பிக்கப்படும் 34வது உலக இளையோர் தினத்திற்கு, “நான் ஆண்டவரின் அடிமை; உம்சொற்படியே எனக்கு நிகழட்டும்(லூக்.1:38)”என்பதும், தலைப்புக்களாக, திருத்தந்தையால் தெரிவுசெய்யப்பட்டுள்ளன. 

திருத்தந்தை சுட்டிக்காட்டியுள்ள இம்மூன்று தலைப்புகளும், 2014ம் ஆண்டு முதல், 2016ம் ஆண்டுவரை சிறப்பிக்கப்பட்ட உலக இளையோர் தினத்தின் மையப்பொருள்களின் தொடர்ச்சியாக உள்ளன என்றும், அந்த ஆண்டுகளில் இடம்பெற்ற அன்னைமரியாவின் ஆன்மீகப் பாதை, வருகிற மூன்று ஆண்டுகளிலும் தொடரும் என்றும், திருப்பீட பொதுநிலையினர், குடும்பம் மற்றும் வாழ்வு அவை தெரிவித்துள்ளது.

இளையோர், விசுவாசமும் அழைத்தலைத் தேர்ந்து தெளிதலும் என்று, அடுத்து நடைபெறவுள்ள உலக ஆயர்கள் மாமன்றத்திற்கு, திருத்தந்தை வழங்கியுள்ள தலைப்போடு, இந்த உலக இளையோர் தின தலைப்புகளும் ஒத்துச்செல்கின்றன என்றும், திருப்பீட அவை கூறியுள்ளது. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.