2016-11-21 16:30:00

திருத்தந்தையின் திருத்தூது மடல் – “இரக்கமும், அவலநிலையும்”


நவ.21,2016.  கத்தோலிக்கத் திருஅவையில், 2015ம் ஆண்டு டிசம்பர் 8ம் தேதி தொடங்கிய, இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டு, 2016ம் ஆண்டு நவம்பர் 20, இஞ்ஞாயிறன்று நிறைவடைந்தது. ஒரு குழந்தையை அணைத்து, பாதுகாக்கும் பெற்றோரைப்போல, இறைவனின் இரக்கம், நம்மை அரவணைக்கிறது. அதற்கு நம்மையே அனுமதிக்க வேண்டும். இவ்வாறு, இந்த ஆண்டு முழுவதும், இறைவன் நம்மீது பொழியும் இரக்கம் பற்றியே, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் எல்லாச் செயல்களும், உரைகளும் இருந்தன. கிறிஸ்து அரசர் பெருவிழாவான இஞ்ஞாயிறு காலையில், வத்திக்கான் வளாகத்தில் பெருவிழாத் திருப்பலியை நிறைவேற்றுவதற்கு முன்னர், வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்காவின் புனிதக் கதவை மூடினார் திருத்தந்தை பிரான்சிஸ். அதன்பின்னர், வளாகத்தில் அமர்ந்திருந்த ஏறக்குறைய எழுபதாயிரம் விசுவாசிகளுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கர்தினால்களுடன் கூட்டுத்திருப்பலியை நிறைவேற்றி, இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டை நிறைவு செய்தார். அத்திருப்பலி மறையுரையில், புனிதக் கதவு மூடப்பட்டாலும், இரக்கத்தின் உண்மையான கதவாகிய, கிறிஸ்துவின் இதயம், நமக்காக, எப்போதும், அகலத் திறந்திருக்கின்றது. நாம் அனைவரும் இரக்கத்தின் கருவிகளாக மாறுவோம் என்று கேட்டுக்கொண்டார். இத்திருப்பலியின் இறுதியில், மூவேளை செபத்திற்குப் பின்னர், Misecordia et misera, அதாவது, “இரக்கமும், அவலநிலையும்” என்ற தலைப்பில், திருத்தூது மடல் ஒன்றில் கையெழுத்திட்டார் திருத்தந்தை பிரான்சிஸ். இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டை நிறைவு செய்யும் விதமாக, இந்த ஆண்டு பற்றிய சிந்தனைகளை உள்ளடக்கிய இம்மடலை வெளியிட்டார் திருத்தந்தை. திருஅவைக்குள் அனைத்து இறைமக்களையும் குறிக்கும் விதமாக, மனிலா கர்தினால் அந்தோனியோ தாக்லே, Saint Andrews மற்றும் Edinburgh பேராயர் Leo Cushley, இரக்கத்தின் மறைத்தூதர்களாகப் பணியாற்றிய, காங்கோ குடியரசு மற்றும் பிரேசிலைச் சேர்ந்த இரண்டு அருள்பணியாளர்கள், உரோம் மறைமாவட்ட ஒரு தியாக்கோன், அவரது குடும்பத்தினர், மெக்சிகோ மற்றும் தென் கொரியாவைச் சேர்ந்த இரு அருள்சகோதரிகள், அமெரிக்க ஐக்கிய நாட்டு ஒரு குடும்பம், திருமணமாகப்போகும் ஓர் இளைஞன், இளம்பெண், உரோம் மறைமாவட்ட பங்கில் மறைக்கல்வி ஆசிரியர்களாகப் பணியாற்றும் இரு அன்னையர், ஒரு மாற்றுத்திறனாளி, ஒரு நோயாளி ஆகியோருக்கு, இம்மடலின் பிரதிகளை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ். இத்திருத்தூது மடல், இத்திங்களன்று, செய்தியாளர் கூட்டத்தில் வெளியிடப்பட்டது. Misecordia et misera என்ற இத்திருத்தூது மடலை வாசிக்கும் எல்லாருக்கும், இரக்கமும், அமைதியும் கிடைப்பதாக என்ற ஆசீரோடு இம்மடலைத் தொடங்கியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

Misecordia et misera என்பது, விபசாரத்தில் பிடிபட்ட பெண்ணை, இயேசு, சந்தித்த நிகழ்வு பற்றி, புனித அகுஸ்தீன் விளக்கும்போது பயன்படுத்திய சொற்றொடராகும். இறைவனின் அன்பு, ஒரு பாவியின் உள்ளத்தைத் தொடும் பேருண்மையை விளக்குவதற்கு, இதைவிட மிக அழகான அல்லது சரியான சொற்றொடரைக் கற்பனை செய்து பார்ப்பது கடினம். இயேசுவும், விபசாரத்தில் பிடிபட்ட பெண்ணும் மட்டும் தனியாக இருந்தனர். அதாவது, இரக்கமும், துன்பமும் மட்டும் தனியாக இருந்தன. இந்த நிகழ்வில், இறைவனின் மாபெரும் இரக்கமும், நீதியும் வெளிப்படுகின்றன. இந்தப் போதனை, இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டின் நிறைவில், ஒளியை வீசுவது மட்டுமல்ல, நாம் வருங்காலத்தில் பின்பற்றவேண்டிய பாதையையும் சுட்டிக்காட்டுகின்றது. விபசாரத்தில் பிடிபட்ட பெண், நம்பிக்கையோடு தனது எதிர்காலத்தை நோக்கவும், புதிய வாழ்வைத் தொடங்கவும் இயேசு உதவுகிறார். இப்பெண், விரும்பினால், அன்பில் வாழவும்(எபே.5:2) இயலும். இப்பெண்ணிற்கு, பாவம் செய்வதற்கான விருப்பம் ஏற்பட்டாலும்கூட, இவர் ஒருமுறை இரக்கத்தை அணிந்துகொண்ட பின்னர், அந்த விருப்பம், இறையன்பால் வேறுதிசையில் மாற்றப்பட்டு, இவர் தனது வாழ்வைப் புதுவிதமாக நோக்கவும், வாழவும் வைக்கின்றது. இதையே, இயேசு, மற்றொரு நிகழ்விலும், நமக்குத் தெளிவாகக் கற்றுத் தருகிறார். இயேசு, பரிசேயர் ஒருவர் வீட்டில் விருந்துண்ணச் சென்ற சமயம், எல்லாராலும் பாவியாக அறியப்பட்ட ஒரு பெண், இயேசுவின் காலடிகளில் நறுமணத் தைலம் பூசி, தனது கண்ணீரால் நனைத்தார்(cf.லூக்.7:36-50). இச்செயலால் துர்மாதிரிகை அடைந்த பரிசேயரிடம் இயேசு, அப்பெண் செய்த பாவங்கள் மன்னிக்கப்பட்டன, ஏனெனில், இவர் மிகுதியாக அன்புகூர்ந்தார். குறைவாக மன்னிப்புப் பெறுவோர் குறைவாக அன்பு செலுத்துவோர் ஆவர்(cf.லூக்.7:47) என்று சொன்னார். 

ஆம். மன்னிப்பு, இறைத்தந்தையின் அன்பை, மிகத் தெளிவாகக் காணக்கூடிய அடையாளம். இதனாலேயே, மன்னிப்பை நம்மில் யாருமே, வரையறைக்குட்பட்டதாக வைத்தல் கூடாது. இரக்கம், எப்போதுமே, நம் வானகத் தந்தையின் இலவசச் செயலாக உள்ளது. நாம் சிறப்பித்திருக்கின்ற யூபிலி ஆண்டில், இரக்கத்தின் அருளை மிகுதியாகப் பெற்றிருக்கின்றோம். இவ்வேளையில், நாம், நம் வருங்காலத்தை நோக்க வேண்டிய நேரம் வந்துள்ளது. நாம் அனுபவித்துள்ள இறைவனின் இரக்கத்தின் வளமையை, மகிழ்வோடும், நம்பிக்கையோடும், ஆர்வத்தோடும் எவ்வாறு மிகச் சிறப்பாகத் தொடர்ந்து செயல்படுத்துவது என்பதைப் புரிந்துகொள்வதற்கான நேரம் வந்துள்ளது. முதலில், நாம் இரக்கத்தைக் கொண்டாடுவதற்கு அழைக்கப்படுகிறோம். திருவழிபாட்டில், இரக்கம், மீண்டும் மீண்டும் வேண்டப்படுவது மட்டுமல்லாமல், அது, உண்மையிலேயே பெறப்பட்டு, அனுபவிக்கப்படுகின்றது. திருப்பலியில், தொடக்கமுதல், இறுதிவரை, இரக்கம் தொடர்ந்து வெளிப்படுகின்றது. திருப்பலிக் கொண்டாட்டத்தின் ஒவ்வொரு தருணத்திலும், இறைவனின் இரக்கம் குறிப்பிடப்படுகின்றது.  அருளடையாள வாழ்விலும், இரக்கம் ஏராளமாகப் பொழியப்படுகின்றது. இறைவன் தம்மை வெளிப்படுத்தும் முதல் செயல் அன்பே. எனவே, இறைவன் நம்மீது வைத்துள்ள அன்பில் நம்பிக்கை வைத்து, அவருக்கு நம் இதயங்களைத் திறப்போம். நாம் பாவிகளாக இருந்தாலும், அவரின் அன்பு, எப்போதும் நமக்கு முன்செல்கிறது, நம்மோடு உடன்நடந்து, நம்மில் இருக்கின்றது. எனவே, இச்சூழலில், இறைவார்த்தையைக் கேட்பது மிக முக்கியத்துவம் பெறுகிறது. ஒவ்வொரு ஞாயிறும், கிறிஸ்தவ சமூகத்திற்கு இறைவார்த்தை அறிவிக்கப்படுகின்றது. எனவே, மறையுரைத் தயாரிப்பில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். ஓர் அருள்பணியாளரின் மறையுரை, அவரே, ஆண்டவரின் இரக்கமுள்ள நன்மைத்தனத்தை அனுபவித்ததன் வெளிப்பாடாக, மிகவும் பலனுள்ளதாக அமைய வேண்டும் என்று, திருத்தந்தை இம்மடலில் கேட்டுக்கொண்டுள்ளார்.

திருவிவிலியம், இறைஇரக்கத்தின் விந்தைகளின், மிகப்பெரிய கதையாகும். அதன் ஒவ்வொரு பக்கமும், இறைத்தந்தையின் அன்பில் ஆழமாக வேரூன்றியுள்ளது. ஊற்றெடுக்கும் இறையன்பின் இரக்கப்பெருக்கம், இன்னும் அதிகமாகப் புரிந்துகொள்ளப்படுவதற்கு உதவியாக, இறைவார்த்தை அதிகமதிகமாக அறியப்பட்டு, கொண்டாடப்பட வேண்டும், அது எல்லாரிலும் விதைக்கப்பட வேண்டும் என்று நான் மிகவும் ஆவல் கொள்கிறேன். “மறைநூல் அனைத்தும் கடவுளின் தூண்டுதல் பெற்றுள்ளது. அது, கற்பிப்பதற்கும், கண்டிப்பதற்கும், சீராக்குவதற்கும், நேர்மையாக வாழப் பயிற்றுவிப்பதற்கும் பயனுள்ளது(2திமொ.3:16)”. எனவே, திருவிவிலியம் நன்றாக அறியப்படவும், மிகவும் பரவலாகப் பரப்பப்படவும், திருவழிபாட்டு ஆண்டின் ஒரு ஞாயிற்றுக்கிழமையில், ஒவ்வொரு கிறிஸ்தவ சமூகமும், தன் முயற்சிகளைப் புதுப்பித்தால், எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும்! அந்த ஞாயிறு, இறைவார்த்தைக்கு முழுவதும் அர்ப்பணிக்கும் நாளாக இருக்க வேண்டும். ஏனென்றால், ஆண்டவருக்கும், அவரின் மக்களுக்கும் இடையே இடம்பெறும், தொடர் உரையாடலில் உள்ள வற்றாத வளங்களைப் போற்றுவதற்கு உதவியாக இருப்பது இறைவார்த்தை. திருவிவிலியம் நன்றாக அறியப்படுவதற்கு, படைப்பாற்றல் திறனோடு முயற்சிகள் எடுக்கப்பட்டால், விசுவாசிகள், இறைவார்த்தையைப் பகிர்ந்துகொள்வதற்கு, உயிருள்ள கருவிகளாக மாற உதவும். இந்த முயற்சிகளில், இறைவார்த்தையை வாசித்து, தியானித்து, விளக்கம் சொல்லிச் செபிக்கும் லெக்சியோ திவினாவும் உள்ளடங்கும்.

இறை இரக்கத்தைக் கொண்டாடுவது, தவமுயற்சி மற்றும் ஒப்புரவு அருளடையாளத்தில், மிகச சிறப்பான விதத்தில் இடம்பெறுகின்றது. ஒப்புரவு அருளடையாளத்தில் நாம் பெறும் இறைவனின் மன்னிப்பு, அவரிடம் நாம் திரும்பி வரவும், அவர் நமக்கு நெருக்கமாக இருப்பதை அனுபவிக்கவும் நமக்கு அழைப்பு விடுக்கின்றது. இறைவன் மட்டுமே பாவங்களை மன்னிக்கிறார். ஆயினும், அவர் நம்மை மன்னித்ததுபோல, நாமும், பிறரை மன்னிக்கத் தயாராக இருக்குமாறு அவர் நம்மிடம் கேட்கிறார். நம் இதயங்கள் மூடப்பட்டு, மன்னிக்க இயலாமல் இருப்பது எவ்வளவு கவலையளிக்கின்றது! நம் வாழ்வில், மனக்கசப்பு, பழிவாங்குதல், கோபம் ஆகியவை மேலோங்கி, அவை, நம் வாழ்வைத் துன்பகரமாக மாற்றுகின்றன. மேலும், இரக்கத்திற்கு மகிழ்வோடு நம்மை அர்ப்பணிக்கத் தடையாகவும் உள்ளன. இவ்வாறு தனது மடலில் கூறியுள்ள திருத்தந்தை, இந்த யூபிலி ஆண்டில், இரக்கத்தின் மறைப்பணியாளர்களாகப் பணியாற்றிய அருள்பணியாளர்க்குத் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார். மேலும், உண்மையான குருத்துவ மறைப்பணியாகிய ஒப்புரவு அருளடையாளத்தை நிறைவேற்றுவதற்கு, அருள்பணியாளர்கள், தங்களைக் கவனமுடன் தயாரிக்குமாறு கேட்டுக்கொள்வதாகத் தெரிவித்துள்ள திருத்தந்தை, இவர்களின் இப்பணிக்குத் தனது இதயப்பூர்வமான நன்றியையும் தெரிவித்துள்ளார். ஒப்புரவு அருளடையாளத்திற்கு வருபவரின் பாவம், எவ்வளவு பெரியதாக இருந்தாலும், அனைவரையும், தந்தைக்குரிய அன்புடன் வரவேற்று, அவர்கள் செய்த தீமைகள் குறித்து சிந்திக்கவும், அவர்கள் திருந்திய வாழ்வில் நடக்கவும், இறைவனின் மன்னிப்பை வழங்குவதில் தாராளமாக இருக்கவும் கேட்டுக்கொண்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கிறிஸ்தவ வாழ்வில் ஒப்புரவு அருளடையாளம், மைய இடத்தைக் கொண்டிருக்கச் செய்ய வேண்டும். ஒவ்வொருவரும் தந்தையின் விடுதலையளிக்கும் மன்னிப்பை அனுபவிக்கச் செய்ய வேண்டும். தவக்காலத்தின் நான்காம் ஞாயிறையொட்டி 24 மணிநேர திருநற்கருணை ஆதாரதனை இதற்கு நல்லதொரு தருணமாகும். கருக்கலைப்பு மாபெரும் பாவம். ஏனெனில், இது மாசற்ற வாழ்வுக்கு முடிவு கட்டுகிறது. அதேநேரம், இறைவனின் இரக்கத்தில் மன்னிப்புப் பெறாத எந்தப் பாவமும் இல்லை. எனவே, இக்குற்றத்தில் மனம் வருந்தி வரும் விசுவாசிகளுக்கு, அருள்பணியாளர்கள், நல்ல வழிகாட்டியாக இருந்து, ஆதரவளித்து வழிநடத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ள திருத்தந்தை, இரக்கத்தின் வேறொரு முகம் ஆறுதல் என்று சொல்லி, துன்பம், புரிந்துகொள்ளாமை மற்றும் வேதனைப்படும் எல்லாருக்கும் ஆறுதலாக இருக்குமாறு அழைப்பு விடுத்துள்ளார். திருமணம் என்ற அருளடையாளத்தின் முக்கியத்துவம் பற்றியும் கூறியுள்ளார் திருத்தந்தை. இந்த அருளடையாளத்தின் அருள், குடும்பத்தை உறுதிப்படுத்துவது மட்டுமன்றி, இரக்கத்தை நடைமுறைப்படுத்துவதற்கு, ஒரு நல்ல இடமாகவும் ஆக்குகின்றது. அதோடு, கிறிஸ்தவ சமூகமும், மேய்ப்புப்பணி நடவடிக்கைகளும், குடும்பத்தின் மாபெரும் நேர்மறை விழுமியங்களுக்கு அர்ப்பணித்துச் செயல்படவும் உதவுகின்றது. மேலும், மரணத்தின் இறுதி நேரம் பற்றிய முக்கியத்துவத்தையும் இம்மடலில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை. எல்லா மதங்களிலும், பிறப்பைப் போன்று, இறப்பும், சமய முக்கியத்துவம் பெற்றுள்ளது. கிறிஸ்தவர்களாகிய நாம், அடக்கச்சடங்கு திருவழிபாட்டை, இறந்த ஆன்மாவுக்காகவும், தங்களின் அன்புக்குரியவர்களின் இழப்பினால் துன்புறுவோருக்காகவும், நம்பிக்கையுடன் செபிப்பதாக அமைக்க வேண்டும்.     

யூபிலி ஆண்டு முடிவுக்கு வந்துள்ளது. புனிதக் கதவு மூடப்பட்டுள்ளது. ஆனால், நம் இதயத்தின் இரக்கத் கதவுகள் தொடர்ந்து அகலத் திறந்திருக்கின்றன. இந்த யூபிலி ஆண்டில், குறிப்பாக, வெள்ளிக்கிழமை இரக்கச் செயல்களில், நம் உலகில் பிரசன்னமாக இருக்கும் நன்மைத்தனத்தை அனுபவித்தேன். இந்நேரத்தில், தினமும், தங்களின் நேரத்தையும் முயற்சிகளையும் செலவழிக்கும் தன்னார்வலர்களை, நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன் என்று, இம்மடலில் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அருளின் கனியாகிய புதிய முயற்சிகளைக் கொணரும், இரக்கத்தின் படைப்பாற்றலைக் கட்டவிழ்த்துவிடும் நேரம் இது. இக்காலத்தில், உணவு, வேலை, குடியிருப்பு மற்றும் அமைதி தேடி, எண்ணிக்கையற்ற மக்கள், ஒரு நாடுவிட்டு, வேறு நாடுகளுக்குத் தொடர்ந்து புலம்பெயர்ந்து கொண்டிருக்கின்றனர். நோய், பல்வேறு வடிவங்களில் துன்பங்களை ஏற்படுத்தி, உதவிக்காகக் குரல் கொடுக்கின்றது. சிறைகள், மனிதமற்ற சூழல்களால் நிறைந்துள்ளன. எழுத்தறிவின்மை பரவலாக உள்ளது. இது, சிறாரை, புதுவிதமான அடிமைமுறைக்கு உட்படுத்துகின்றது. தீவிர தனிமனிதக் கோட்பாடு, குறிப்பாக, மேற்கில் நிலவும் இந்நிலை, தோழமையுணர்வை இழக்கச் செய்கிறது. இக்காலத்தில், பலர், கடவுள் அனுபவமே இல்லாமல் இருக்கின்றனர். இது மாபெரும் ஏழ்மையாகவும், மனித வாழ்வின் தவிர்க்க இயலாத மாண்பை ஏற்பதற்குப் பெரும் தடையாகவும் உள்ளது. நாம், இந்த யூபிலி ஆண்டில், பல இரக்கச் செயல்களைச் செய்தோம். ஆனால், நம் உலகம், மனித மாண்பைத் தாக்கும் புதுவித ஆன்மீக மற்றும் பொருளிய ஏழ்மையைத் தொடர்ந்து உருவாக்கிக்கொண்டே இருக்கின்றது. இக்காரணத்தினால், திருஅவை, எப்போதும் விழிப்பாயிருந்து, இரக்கத்தின் புதிய பணிகளோடு தன்னை இணைத்துக் கொள்வதற்குத் தயாராக இருக்க வேண்டும். அவற்றை, மனத்தாராளத்தோடும், ஆர்வத்தோடும் ஆற்ற வேண்டும். கொல்கத்தாவில் இயேசுவை நினைத்துப் பார்ப்போம். மாண்புடைய வாழ்வு வாழ்வதிலிருந்து மக்களைத் தடைசெய்யும் ஏழ்மை மற்றும் ஓரங்கட்டப்படுவதன் புதிய வடிவங்களுக்கு நம் முகத்தைத் திருப்பாதிருப்போம். வேலையின்றி அல்லது, போதுமான ஊதியமின்றியும், வாழ்வதற்கு வீடோ, நிலமோ இல்லாமலும் இருப்பவர்களையும், மதம், இனம், அல்லது சமூகநிலையால் பாகுபாட்டை எதிர்கொள்பவர்களையும் நினைத்துப் பார்ப்போம். கிறிஸ்தவ இரக்கம், தோழமையோடு செயல்பட வைக்கின்றது. மேலும், இரக்கத்தின் சமூகப் பண்பு, புறக்கணிப்பையும், வெளிவேடத்தையும் அழித்தொழிக்க அழைக்கின்றது. பிறரைச் சந்திப்பதை மீண்டும் கண்டுணருவதை அடிப்படையாகக் கொண்ட,  இரக்கத்தின் கலாச்சாரத்தை ஊக்குவிக்கவும் திருத்தந்தை அழைப்பு விடுத்துள்ளார். இதனால், எவரும், மற்றவரைப் புறக்கணிக்காமலும், நம் சகோதர, சகோதரிகளின் துன்பங்களிலிருந்து விலகிச் செல்லாமலும் இருப்பார்கள். இடைவிடா செபம், தூய ஆவியாரின் செயல்களுக்குப் பணிந்திருத்தல், புனிதர்கள் வாழ்வு பற்றிய அறிவு, ஏழைகளுக்கு நெருக்கமாக இருத்தல் ஆகியவைகளில், இரக்கத்தின் கலாச்சாரம், வடிவமைக்கப்படுகின்றது. யூபிலி ஆண்டில் ஆற்றப்பட்ட உடல் மற்றும் ஆன்மீகம் சார்ந்த இரக்கச் செயல்கள் தொடர்ந்து நடத்தப்படுமாறு பரிந்துரைத்துள்ளார் திருத்தந்தை.

மேலும், இந்த சிறப்பு யூபிலி ஆண்டின் தெளிவான ஓர் அடையாளமாக, திருவழிபாட்டு ஆண்டின் 33வது ஞாயிறை, உலக ஏழைகள் தினமாகச் சிறப்பிக்குமாறும் உலகளாவியத் திருஅவைக்கு அழைப்பு விடுக்கிறேன். இதுவே, கிறிஸ்து அரசர் பெருவிழாவுக்குத், தகுதியான முறையில் தயாரிக்க சிறந்த வழியாகும் என்று கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.. நம் வாழ்வுப் பயணத்தின், ஒவ்வொரு நாளும் கடவுளின் பிரசன்னத்தால் குறிக்கப்பட்டுள்ளது. நம் முயற்சிகளைத் தூய ஆவியார் வழிநடத்துகிறார். நம் அன்னை மரியா, தம் இரக்கத்தின் கண்களால் நம்மை எப்போதும் நோக்குகிறார். அவரின் தாய்க்குரிய பராமரிப்பில் நம்மை அர்ப்பணிப்போம் என்று இம்மடலை நிறைவு செய்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். திருத்தந்தையின் விருப்பப்படி, நம் இரக்கச் செயல்களைத் தொடர்ந்து ஆற்றுவோம். இறைஇரக்கத்தின் தூதர்களாக மாறுவோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.