2016-11-21 17:05:00

இரக்கத்தின் உண்மை கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும்


நவ.21,2016. சிறப்பு யூபிலி ஆண்டின் புனிதக் கதவுகள் மூடப்பட்டாலும், இயேசுவின் இதயம் எனும் இரக்கத்தின் உண்மை கதவுகள் நமக்காக எப்போதும் திறந்தே இருக்கும் என இஞ்ஞாயிறு யூபிலி ஆண்டு நிறைவுத் திருப்பலியில் மறையுரை வழங்கினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

நாம் இரக்கமுள்ளவர்களகச் செயல்படவும், இரக்கத்தின் கருவிகளாக மாறவும் உதவும் வண்ணம் நாம் இறைவனிடம் இருந்து பெற்ற இரக்க நிகழ்வுகள் குறித்து சிந்திப்போம் என்றார் திருத்தந்தை.

இஞ்ஞாயிறன்று சிறப்பிக்கப்பட்ட 'கிறிஸ்து அரசர்' விழா குறித்து தன் மறையுரையில் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வுலகம் அரசத்தன்மையை அதிகாரத்தோடு தொடர்புப்படுத்தி நோக்கினாலும், இயேசுவின் அரசத்தன்மை என்பது, அனைத்தையும் எதிர்கொண்டு குணப்படுத்தும் அன்பை உள்ளடக்கியதாகும் என்றார். இந்த அன்பினாலேயே அவர் தன்னை தாழ்மைப்படுத்தி, நம் துன்பங்களைச் சுமந்து அநீதிகளையும் கைவிடப்படல்களையும் மரணத்தையும் சந்தித்தார் என்றார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இறைமகன் இயேசு நம்மைத் தீர்ப்பிடவில்லை, நம்மை வெற்றிகொள்ளவில்லை, அதேவேளை, நம் சுதந்திரத்தைப் புறந்தள்ளவுமில்லை, மாறாக, தாழ்ச்சியுடன் கூடிய அன்பினால், நமக்குப் பாதை அமைத்து, அனைத்தையும் மன்னித்தார் என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த அன்பே, அன்றும் இன்றும் என்றும் தொடர்ந்து, நம் எதிரிகளான பாவத்தையும், மரணத்தையும், அச்சத்தையும், வெற்றிகண்டு வருகிறது என்றார்.

இயேசு இவ்வுலகில் நடமாடிய காலத்தில், அவரிடம் உதவி நாடி, அவரை நெருக்கிய மக்கள், அவர் சிலுவையில் தொங்கியபோது அவரிடமிருந்து தூர விலகி நின்று, வெறும் பார்வையாளர்களாகவே மாறியதைப் பற்றிக் குறிப்பிட்ட திருத்தந்தை, நாமும் அதைப்போன்று பாராமுகமாக வாழ இயலாது என்றார்.

இயேசுவின் சிலுவையினடியில் நின்ற இரண்டாவது வகை மனிதர்களான,  மக்கள், தலைவர்கள், படை வீரர்கள் மற்றும் ஒரு குற்றவாளி, இயேசுவைக் கிண்டல் செய்தபோது, அவர் எவ்வாறு மௌனம் காத்து, அவர்களை அன்புகூர்ந்து, மன்னித்தாரோ, அதுபோல் நாமும் செயல்படவேண்டும் என்ற அழைப்பை முன்வைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மூன்றாவது வகை மனிதராக நாம் அந்த நல்லக் கள்வனை நோக்குவோம், ஏனெனில் இயேசுவின் அரசாட்சியில் நம்பிக்கைக் கொண்ட அவரே இயேசுவை நோக்கி, அவர் அரியணையில் வரும்போது தன்னையும் நினைவுகூரும்படிக் கேட்கிறார். இயேசுவும் அவர் பாவங்கள் அனைத்தையும் மன்னித்து, அவருக்கு உறுதி வழங்குகிறார், ஏனெனில் இயேசு நம் பாவங்களை நினைவில் வைப்பதில்லை, மாறாக, அனைத்தையும் புதிதாகத் துவக்க முடியும் என்பதில் நம்பிக்கைக் கொண்டவர் அவர், என்றார், திருத்தந்தை.

நாமும் ஒப்புரவு மற்றும் மன்னிப்பிற்கான கதவுகளை ஒரு நாளும் மூடாமல், மற்றவர்க்கு நம்பிக்கையின் பாதையாகச் செயல்படுவோம் என்ற அழைப்பையும் முன்வைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.