2016-11-21 17:15:00

இந்திய இரயில் விபத்தில் உயிரிழந்தோர்க்கு ஆயர் பேரவை இரங்கல்


நவ.21,2016. இஞ்ஞாயிறு அதிகாலையில் இந்தியாவின் கான்பூருக்கருகே இடம்பெற்ற இரயில் விபத்தில் உயிரிழந்தவர்கள் குறித்து தன் ஆழ்ந்த அனுதாபங்களை  வெளியிட்டுள்ளது, இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவை.

உத்தரப்பிரதேசத்தின் கான்பூரில், இன்டோர் - பாட்னா இரயில் தடம் புரண்டதில், 145 பேர் உயிரிழந்தது, மற்றும் 226 பேர் காயமடைந்துள்ளது குறித்து இந்திய ஆயர் பேரவை ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாகவும், உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்காகவும், அவர்களின் குடும்பங்களுக்காகவும் செபிப்பதாகவும் உரைத்த இந்திய ஆயர்பேரவையின் பொதுச்செயலர், ஆயர் தியோடோர் மஸ்கரினஸ் அவர்கள், இந்த விபத்து குறித்த முழு புலன் விசாரணை இடம்பெற்று, அதற்கான காரணம் கண்டுபிடிக்கப்பட்டு, மேலும் இத்தகைய விபத்துக்கள் இடம்பெறாதிருக்கும்படியான தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இந்தூர் மற்றும் பாட்னா இடையேயான பயணத்தின்போது, ஞாயிறு அதிகாலை 3.10 மணிக்கு கான்பூர் நகரில் தடம்புரண்ட இரயில் வண்டி 14 பெட்டிகளைக் கொண்டிருந்ததாகவும், 2500க்கும் மேற்பட்டோர் பயணம் செய்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

2012ம் ஆண்டு இந்திய இரயில் துறை வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி, இந்தியாவில் இரயில் விபத்துக்களால் ஒவ்வோர் ஆண்டும் ஏறத்தாழ 15,000 பேர் உயிரிழக்கின்றனர். ஒவ்வொரு நாளும் இந்தியாவில் ஏறத்தாழ 2 கோடியே 30 இலட்சம் பேர் இரயிலில் பயணம் செய்கின்றனர். 

ஆதாரம் : AsiaNews/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.