2016-11-19 15:14:00

கிறிஸ்து அரசர் பெருவிழா - ஞாயிறு சிந்தனை


சென்னை, லொயோலா கல்லூரி வளாகத்தின் மையத்தில் அமைந்துள்ளது, கிறிஸ்து அரசர் ஆலயம். அந்த ஆலயத்தில், பீடத்திற்கு மேல், கிறிஸ்து அரசரின் திருஉருவம், தன் இரு கரங்களையும் விரித்தபடியே நிற்பதுபோல் அமைக்கப்பட்டுள்ளது. பீடத்தின் இடது பக்கம், சிலுவையில் இரு கரங்களும் அறையப்பட்டுத் தொங்கும் இயேசுவின் உருவமும் வைக்கப்பட்டுள்ளது. சிலுவையில் தொங்கும் இயேசுவின் உருவம், தரைமட்டத்தில் வைக்கப்பட்டிருப்பதால், பலர் அந்த உருவத்தின் பாதங்களைத்  தொட்டபடி, கண்களை மூடி செபிப்பதைப் பார்த்திருக்கிறேன்.

கிறிஸ்து அரசரின் உருவம், எளிதில் எட்டமுடியாத உயரத்தில் இருப்பதும், சிலுவையில் தொங்கும் கிறிஸ்துவின் உருவம், மக்களின் கரங்கள் பட்டுத் தேய்ந்திருப்பதும், நமக்குச் சொல்லித்தரும் பாடங்களைக் கற்றுக்கொள்ள, இஞ்ஞாயிறு கொண்டாடப்படும் கிறிஸ்து அரசர் திருவிழா நம்மை அழைக்கிறது. கல்லூரியில் உள்ள அந்தக் கோவிலுக்கு இயேசுவை அழைத்துச் சென்று, கிறிஸ்து அரசர் உருவம், சிலுவையில் தொங்கும் உருவம் இரண்டையும் காட்டி, அவ்விரு உருவங்களில் அவருக்கு மிகவும் பிடித்த உருவம், அல்லது அவரது அரசத் தன்மையைக் காட்டும் உருவம் எது என்று கேட்டால், நம் கேள்விக்குரிய பதில், இன்றைய நற்செய்தியில் உள்ளது என்று இயேசு கூறுவார்.

இன்றைய நற்செய்தி மட்டுமல்ல, ஒவ்வோர் ஆண்டும், கிறிஸ்து அரசர் பெருவிழாவுக்கென திருஅவை தெரிவு செய்துள்ள நற்செய்தியை வாசிக்கும்போது, இவ்விழாவின் மையப் பொருளை, ‘கிறிஸ்து அரசர்’ என்ற பட்டத்தின் பொருளை அறிந்துகொள்ள முடியும். இன்றைய நற்செய்தியில் (லூக்கா 23: 35-43) தரப்பட்டுள்ளது, கல்வாரியில் நிகழ்ந்த காட்சி. சென்ற ஆண்டு, இவ்விழாவுக்குத் தரப்பட்ட நற்செய்தி, பிலாத்து இயேசுவைச் சந்தித்தக் காட்சி. (யோவான் 18: 33-37) அடுத்த ஆண்டு இவ்விழாவுக்குத் தரப்பட்டுள்ள நற்செய்தி, இறுதித் தீர்வையன்று நடைபெறும் காட்சி. (மத்தேயு 25: 31-46) இம்மூன்று நற்செய்திகளையும் வாசிக்கும்போது, கிறிஸ்துவை அரசர் என்று அழைப்பதன் உட்பொருளை ஓரளவு உணர முடிகிறது.

இயேசு இவ்வுலகில் வாழ்ந்தபோது, அவரை அரசராக எண்ணிப் பார்த்தவர்கள், அரசராக்க முயன்றவர்கள் ஒரு சிலர். நற்செய்தியில், இயேசுவை, அரசர் என்று கூறிய முதல் மனிதர்கள், கீழ்த்திசை ஞானிகள். இயேசு பிறந்ததும், அவரைக் காண நெடுந்தூரம் பயணம் செய்து வந்த ஞானிகள் செய்த ஒரே தவறு என்ன? அவர்கள் தேடி வந்த அரசர், உலக அரசரைப் போல் அரண்மனையில் இருப்பார் என்று தப்புக் கணக்கு போட்டனர். எனவே, ஏரோது அரசனின் அரண்மனைக்குச் சென்றனர். ஏரோதிடம், “யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே? அவரது விண்மீன் எழக் கண்டோம். அவரை வணங்க வந்திருக்கிறோம்” என்றார்கள். (மத்தேயு 2: 2) கள்ளம் கபடின்றி அவர்கள் கேட்ட அந்தக் கேள்வி, பல நூறு கள்ளம் கபடற்ற குழந்தைகளின் உயிரைப் பலி வாங்க, காரணமானது.

இரண்டாவது நிகழ்வு, யோவான் நற்செய்தி 6ம் பிரிவில் கூறப்பட்டுள்ளது. இயேசு அப்பத்தைப் பலுகச்செய்து, மக்களின் பசியைத் தீர்த்தார். இயேசு செய்த இந்த அரும் அடையாளத்தைக் கண்ட மக்கள், 'உலகிற்கு வரவிருந்த இறைவாக்கினர் உண்மையில் இவரே' என்றார்கள். அவர்கள் வந்து தம்மைப் பிடித்துக் கொண்டுபோய் அரசராக்கப் போகிறார்கள் என்பதை உணர்ந்து இயேசு மீண்டும் தனியாய் மலைக்குச் சென்றார். (யோவான் 6 : 14-15)

மூன்றாவது நிகழ்வு, எருசலேம் வீதிகளில் நடந்தது. திருவிழாவுக்குப் பெருந்திரளாய் வந்திருந்த மக்கள் இயேசு எருசலேமுக்கு வருகிறார் என்று கேள்வியுற்று, குருத்தோலைகளைப் பிடித்துக்கொண்டு அவருக்கு எதிர்கொண்டுபோய், 'ஓசன்னா! ஆண்டவரின் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுக! இஸ்ரயேலின் அரசர் போற்றப்பெறுக!' என்று சொல்லி ஆர்ப்பரித்தனர். (யோவான் 12: 12-13) (மேலும் காண்க: லூக். 19: 38; மாற். 11: 9-10; மத். 21: 9)

வயிறார உண்டதால் மக்கள் நடுவே எழுந்த ஆர்வம், இயேசுவை அரசராக்கத் துடித்தது. தங்களை மீட்க ஒருவர் வரமாட்டாரா என்ற ஏக்கம், எருசலேம் வீதிகளில், ஆரவாரமாய், ‘ஓசன்னா’ அறிக்கையாக மாறியது. ஆனால், இப்படி அந்தந்த நேரத்தின் தேவைக்கேற்ப தோன்றி மறையும் ஆர்வமோ, ஆரவாரமோ நிலைத்திருக்காது என்பது, தொடர்ந்த சில நாட்களிலேயே நிரூபணமானது. இயேசுவுக்கு அரச மரியாதை கொடுத்து வாழ்த்தியக் கூட்டம், அதே வீதிகளில், அவர் சிலுவை சுமந்து சென்றபோது, பயந்து ஒதுங்கியது, அல்லது, இயேசுவின் எதிரணியாகத் திரண்ட கூட்டத்தில் சேர்ந்துவிட்டது.

இயேசுவை அரசர் என்று கூறும் நான்காவது நிகழ்வு, பிலாத்துவின் அரண்மனையில் நடந்தது. இயேசுவை அரசர் என்று, பிறர் சொல்லக்கேட்டு பயம்கொண்ட பிலாத்து, இயேசுவிடமே, “நீர் அரசரா?” என்று கேட்டார். அந்தக் கேள்வியின் உண்மையான பதிலைக் கண்டுபிடிக்கவும் பிலாத்து பயந்தார். இந்த நிகழ்வை, சென்ற ஆண்டு, கிறிஸ்து அரசர் பெருவிழாவன்று, நற்செய்தியின் வழி சிந்தித்தோம். (யோவான் 18 : 37)

‘அரசர்’ என்று இயேசு அழைக்கப்பட்ட ஐந்தாவது நிகழ்வு, கல்வாரியில் நடந்தது. இது, இன்றைய நற்செய்தியாக நம்மை வந்தடைந்துள்ளது. இயேசுவை அரசராகப் பார்க்கமுடியாத உரோமைய வீரர்களின் ஏளனக் குரலும், இயேசுவை அரசர் என்று ஏற்றுக்கொண்ட குற்றவாளியின் ஏக்கக் குரலும் இன்றைய நற்செய்தியில் ஒலிக்கின்றன.

உரோமைய வீரர்கள், பல அரசர்களைச் சந்தித்தவர்கள். பல அரசர்களுக்குப் பணிவிடை செய்தவர்கள். அவர்களுக்குத் தெரிந்த அரசர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, சிலுவையில், குற்றவாளி போல் தொங்கிக் கொண்டிருந்த இயேசு, ஒரு பரிதாபமான, போலி அரசனாகத் தெரிந்தார். அவர்களது ஏளனத்திற்குத் தூபம் போடும் வகையில், அந்தச் சிலுவை மீது "இவன் யூதரின் அரசன்" என்று ஏக வசனத்தில் எழுதி, வைக்கப்பட்டிருந்தது.

இந்த ஏளனக் குரல்களுக்கு நேர்மாறாக, இயேசுவுடன் அறையப்பட்டிருந்த குற்றவாளியின் ஏக்கக் குரல், இயேசுவின் அரசத் தன்மையை வெளிப்படுத்துகிறது. “இயேசுவே, நீர் ஆட்சியுரிமை பெற்று வரும்போது என்னை நினைவிற்கொள்ளும்”. (லூக்கா 23: 42) என்று, அந்தக் குற்றவாளியிடமிருந்து விண்ணப்பம் ஒன்று எழுகிறது. மனிதன் என்று கணிக்கமுடியாத அளவு காயப்பட்டு, ஒரு கந்தல் துணிபோல் சிலுவையில் மாட்டப்பட்டிருந்த அந்த உருவத்தில், ஓர் அரசரைக் கண்டார், அந்தக் குற்றவாளி. அவர் இயேசுவிடம் கண்ட அரசத்தன்மைதான் என்ன?

உலக மன்னர்களில் ஒரு சிலர் கைது செய்யப்பட்டபோது, அல்லது அவர்கள் தூக்கு மேடைக்கு கொண்டு செல்லப்பட்டபோது, அவர்கள் காட்டிய கண்ணியம், அமைதி, ஆகியவை, எதிரிகளையும் அவர்கள் மீது மரியாதை காட்டவைத்தது என்று, வரலாறு சொல்கிறது. அந்த கண்ணியத்தை, அந்த அமைதியை, இயேசுவிடம் கண்டார், இந்தக் குற்றவாளி. அவர் கண்களில், இயேசு, அறையுண்டிருந்த சிலுவை, ஒரு சிம்மாசனமாய்த் தெரிந்தது. அவர் தலையில் சூட்டப்பட்ட முள்முடி, மணி மகுடமாய்த் தெரிந்தது. எனவே, அந்த அரசரிடம், தன் விண்ணப்பத்தை வைத்தார், அந்தக் குற்றவாளி.

நாம் சிந்தித்த முதல் நான்கு நிகழ்வுகளில், இயேசு தவறான முறையில் "அரசன்" என்று கருதப்பட்டார். அவர்களில் யாருக்கும் இயேசு சரியான பதில் கூட சொல்லவில்லை. தன்னை வாழ்வில் அரசரென அழைத்த, அல்லது அரசராக்க முயன்ற பலருக்கும் பதில் தராத இயேசு, இந்தக் குற்றவாளிக்குப் பதில் தருகிறார். தனது உண்மையான அரசை, தனது உண்மையான அரசத் தன்மையை இந்தக் குற்றவாளி கண்டுகொண்டார் என்பதை இயேசு உணர்ந்ததால், அவருக்கு மட்டும் சரியான பதிலைத் தருகிறார். “நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன்” (லூக்கா 23: 43) என்று உறுதியளிக்கிறார், இயேசு.

1927ம் ஆண்டு வெளியான ஒரு புகழ்பெற்ற திரைப்படம், "The King of Kings". இந்த மௌனப்படம், இயேசு இவ்வுலகில் வாழ்ந்த இறுதி வாரங்களைத் திரைக்குக் கொணர்ந்தது. இத்திரைப்படம், பல கோடி மக்களால் பாராட்டு பெற்றாலும், இதன் இயக்குனர், Cecil B.De Mille அவர்கள், தனக்கு கடிதமாக வந்து சேர்ந்த ஒரே ஒரு பாராட்டு மட்டுமே தன் உள்ளத்தைத் தொட்டதென்று கூறினார். அந்த மடலை எழுதியவர், இறக்கும் நிலையில் இருந்த ஒரு பெண்.

ஒரு சில நாட்களே வாழப்போகிறோம் என்பதை உணர்ந்த அந்தப் பெண், சக்கர நாற்காலியில் அமர்ந்தவண்ணம் இத்திரைப்படத்தைப் பார்த்தார். பின்னர், அவர் இயக்குனர் Cecil அவர்களுக்கு ஒரு மடல் அனுப்பினார். "The King of Kings திரைப்படத்திற்காக உங்களுக்கு மிக்க நன்றி. சாகப்போவதை எண்ணி இதுவரை பயந்த என் மனதில், இப்போது, ஆவலுடன் மறுவாழ்வை எதிர்பார்க்கும் மகிழ்வு வந்துள்ளது" என்று அப்பெண்மணி தன் மடலில் எழுதியிருந்தார். அந்தப் பெண் உணர்ந்த எதிர்பார்ப்பு, கல்வாரியில் சிலுவையில் அறையப்பட்டிருந்த குற்றவாளியின் மனதிலும் எழுந்தது.

சிலுவை மரணங்கள் கொடூரமானவை. உரோமையர்கள் கண்டு பிடித்த சித்தரவதைகளின் கொடுமுடியாக, சிகரமாக விளங்கியது, சிலுவை மரணம். சிலுவையில் அறையப்பட்டவர்கள் எளிதில் சாவதில்லை. அணு அணுவாக சித்ரவதை பட்டு சாவார்கள். கைகளில் அறையப்பட்ட இரு ஆணிகளால் உடல் தாங்கப்பட்டிருந்ததால், உடல் தொங்கும். அந்த நிலையில் மூச்சுவிட முடியாமல் திணறுவார்கள். மூச்சு விடுவதற்கு உடல் பாரத்தை மேலே கொண்டுவர வேண்டியிருக்கும். அப்படி கொண்டு வருவதற்கு, ஆணிகளால் அறையப்பட்ட கைகளையே பயன்படுத்த வேண்டியிருக்கும். இப்படி, விடும் ஒவ்வொரு மூச்சுக்கும் அவர்கள் மரண வேதனை அனுபவித்தார்கள்.

இந்த வேதனையின் உச்சியில், சிலுவையில் அறையப்பட்டவர்கள் சொல்லும் வார்த்தைகள் எல்லாம், வெறுப்புடன் வெளி வரும். தங்களை, பிறரை, தங்கள் கடவுள்களைச் சபித்துக் கொட்டும் வார்த்தைகளே அங்கு அதிகம் ஒலிக்கும். அப்படிப்பட்ட ஒரு வேதனையின் கொடுமுடியிலும், தான் விடும் ஒவ்வொரு மூச்சுக்கும் மரண போராட்டம் நிகழ்த்தி வந்த இயேசு, “நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன்” என்று வழங்கிய வாக்குறுதி, அந்தக் குற்றவாளிக்கு மட்டுமல்ல, கடந்த 20 நூற்றாண்டுகளுக்கும் மேலாக, கோடான கோடி மனிதர்களுக்கு, நம்பிக்கை வழங்கியுள்ளது. அந்த நம்பிக்கையை, நாம், கிறிஸ்து அரசர் திருவிழாவில் கொண்டாடுகிறோம்.

இறுதியாக இரு எண்ணங்கள். இன்று, புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில் புனிதக் கதவை மூடி, நாம் கடந்த ஓராண்டளவாய்க்  கொண்டாடிவந்த இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டினை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நிறைவுக்குக் கொணர்கிறார். மரத்தாலும், இரும்பாலும் செய்யப்பட்ட புனிதக் கதவுகள் உலகெங்கும் மூடப்பட்டாலும், இரத்தத்தாலும், சதையாலும் செய்யப்பட்ட இதயத்தின் கதவுகள் இனியும் திறந்திருக்க வேண்டும் என்று, இறைவனிடம் மன்றாடுவோம்.

இன்று, நவம்பர் 20, அகில உலகக் குழந்தைகள் நாள் (Universal Children's Day). நவம்பர் 14 கடந்த திங்களன்று இந்தியாவில் குழந்தைகள் நாள் கொண்டாடப்பட்டது. பல்வேறு நாடுகளில் பல்வேறு நாட்களில் குழந்தைகள் நாள் கொண்டாடப்படுகிறது. இந்த நாளைக் “கொண்டாடுகிறோம்” என்று சொல்லும்போது மனதுக்குள் ஆயிரம் நெருடல்கள். இந்த நெருடல்களில் சிலவற்றை, நவம்பர் 16, கடந்த புதனன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் மறைக்கல்வி உரையின் இறுதியில், ஒரு விண்ணப்பமாக வெளியிட்டார்:

"நான் அனைவருடைய மனசாட்சிக்கும், அனைத்து குடும்பங்களுக்கும், நிறுவனங்களுக்கும் ஒரு விண்ணப்பத்தை முன்வைக்கிறேன். குழந்தைகள் எப்போதும் பாதுகாக்கப்படவேண்டும், அவர்களது நலமான வாழ்வு உறுதி செய்யப்படவேண்டும். அடிமைத்தனத்தின் பல்வேறு கொடுமைகளுக்கு அவர்கள் உள்ளாகாமல் பாதுகாக்கப்படவேண்டும். ஆயுதம் தாங்கிய குழுக்கள் இவர்களை வேட்டையாடுவதிலிருந்து, காக்கப்படவேண்டும். குழந்தைகள் மீது கண்ணும் கருத்துமாக இருந்து, அவர்களுக்கு உரிய கல்வியை வழங்குவதிலும், அவர்களுக்கு நல்லதொரு எதிர்காலத்தை உருவாக்குவதிலும் அனைத்துலக சமுதாயம் தீவிர கவனம் செலுத்த வேண்டும்" என்று திருத்தந்தை விண்ணப்பித்தார்.

வருங்காலச் சந்ததியினரைப்பற்றியக் கவலை சிறிதும் இன்றி வாழும் நம் மனசாட்சியை இறைவன் விழித்தெழச் செய்வாராக. நிறைவுறும் இரக்கத்தின் சிறப்பு யூபிலி, இவ்வுலகில் உருவாக்கிய இரக்க உணர்வுகள், தொடர்ந்து நம் இதயங்களை, அயலவர் பக்கம், குறிப்பாக, குழந்தைகள் பக்கம் திருப்பட்டும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.