2016-11-18 16:03:00

துன்புறுவோரை வரவேற்க எப்போதும் திறந்திருக்கும் இதயக் கதவுகள்


நவ.18,2016. வறியோரை வரவேற்பது, தொழுநோயுற்றோரைப் பேணுவது, உள்நாட்டுப் போரினால் காயப்பட்டுள்ள நாட்டில் அமைதியைக் கொணர்வது ஆகியவை, மியான்மார் நாட்டு கத்தோலிக்க மக்களுக்கு இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டின் இறுதியில் விடுக்கப்படும் சிறப்பான அழைப்பு என்று அந்நாட்டு கர்தினால், சார்ல்ஸ் மாங் போ அவர்கள் கூறினார்.

யாங்கூன் பேராலயத்தில், புனிதக் கதவை மூடும் வேளையில், கர்தினால் போ அவர்கள் வழங்கிய மறையுரையில், இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டில், இரக்கத்தின் தூதர், அன்னை தெரேசா அவர்கள் புனிதராக்கப்பட்டது, பொருளுள்ள ஒரு சிகர நிகழ்வு என்று குறிப்பிட்டார்.

மரத்தால் ஆன புனிதக் கதவுகள் உலகெங்கும் மூடப்பட்டாலும், இரத்தம், தசையால் ஆன நம் இதயக் கதவுகள் துன்புறும் மக்களை வரவேற்க எப்போதும்  திறந்திருக்க வேண்டும் என்று கர்தினால் போ அவர்கள் வேண்டுகோள் விடுத்தார்.

நம்மீது நாமே காட்டவேண்டிய இரக்கம், அடுத்தவர் மீது காட்டவேண்டிய இரக்கம், மறக்கப்பட்டோர், மற்றும் புறக்கணிக்கப்பட்டோர் மீது  காட்டவேண்டிய இரக்கம், மியான்மர் நாட்டில் இரக்கத்தால் கட்டப்படவேண்டிய பாலங்கள் என்ற நான்கு கருத்துக்களை உள்ளடக்கி கர்தினால் போ அவர்கள், தன் மறையுரையை வழங்கினார். 

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.