2016-11-18 15:51:00

திருத்தந்தை பிரான்சிஸ் பற்றிய புதிய ஆவணப்படம்


நவ.18,2016. "திருத்தந்தை பிரான்சிஸ், அவருடைய சொந்த வார்த்தைகளில்" (‘Pope Francis in His Own Words’) என்ற ஓர் ஆவணப்படம் இச்செவ்வாயன்று வெளியானது.

Rome Reports என்ற நிறுவனமும், சிக்காகோ நகரில் இயங்கிவரும் Mideast Theological Forum என்ற நிறுவனமும் இணைந்து வெளியிட்டுள்ள 46 நிமிட ஆவணப்படத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பிறந்து வளர்ந்த குடும்பம், அவர் பெற்ற இறையழைத்தல், திருஅவையைப் பற்றி அவர் கொண்டிருக்கும் தொலைநோக்குப் பார்வை ஆகியவை பதிவு செய்யப்பட்டுள்ளன.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கியுள்ள பல்வேறு மறைக்கல்வி உரைகள், மூவேளை செப உரைகள், திருத்தூதுப் பயணங்களில் வழங்கிய உரைகள் ஆகியவற்றிலிருந்து தெரிவு செய்யப்பட்டுள்ள பகுதிகள், அவரது குரலில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தன் பாட்டி வழியே தான் பெற்ற விசுவாச உணர்வுகள், இறையழைத்தலை தான் பெற்ற நாளைப் பற்றிய நினைவுகள், அமெரிக்க ஐக்கிய நாட்டில் மேற்கொண்ட பயணத்தில் தான் அடைந்த கனிவான அனுபவங்கள் ஆகியவை குறித்து இக்காணொளியில் திருத்தந்தை பகிர்ந்துகொள்கிறார்.

ஆதாரம் : ZENIT / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.