2016-11-18 15:18:00

'இரக்கமும் ஒன்றிப்பும்' – திருத்தந்தையின் சிறப்புப் பேட்டி


நவ.18,2016. இரக்கம் இறைவனின் வெளிப்படையான முகம் என்றாலும், அதுவே, அவரது சக்தியற்ற தன்மையாகவும் தெரிகிறது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தாலிய நாளிதழுக்கு அளித்த பேட்டியொன்றில் கூறியுள்ளார்.

'அவ்வெனீரே' (Avvenire) என்ற நாளிதழில் பணியாற்றும் Stefania Falasca அவர்களுக்கு திருத்தந்தை வழங்கிய ஒரு பேட்டி, 'இரக்கமும் ஒன்றிப்பும்' என்ற தலைப்பில், இவ்வெள்ளியன்று வெளியானது.

இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டு; அண்மைய ஆண்டுகளில், கிறிஸ்தவ ஒன்றிப்பு குறித்து மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள்; கத்தோலிக்கத் திருஅவையின் அடித்தளமாக இருப்பது நற்செய்தி போன்ற தலைப்புக்களில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்பேட்டியில் தன் கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.

இரக்கத்தின் சிறப்பு யூபிலி, திருத்தந்தைக்கு எவ்வகையில் பொருள் தந்தது என்று Falasca அவர்கள் எழுப்பிய முதல் கேள்விக்குப் பதில் அளித்த திருத்தந்தை, இறைவன் தங்கள் மீது அன்புகொண்டுள்ளார், தங்களை மன்னித்துள்ளார் என்று, இந்த ஆண்டில் பலர் உணர்ந்துள்ளனர் என்பதே இப்புனித ஆண்டின் முக்கியப் பொருள் என்று, திருத்தந்தை கூறினார்.

இறைவனுக்கு மோசமான ஞாபக சக்தி இருப்பதாக தனக்கு எண்ணத் தோன்றுகிறது என்று கூறியத் திருத்தந்தை, அவர் ஒருமுறை மன்னித்துவிட்டால், நம் குற்றங்களை அவர் முற்றிலும் மறந்துவிடுகிறார், ஏனெனில், அவர் அன்பே உருவானவர் என்பதைச் சுட்டிக்காட்டி, இந்த எண்ணத்தில் கிறிஸ்தவ மறையின் சாரம் உள்ளது என்று கூறினார்.

யூபிலி ஆண்டில் இடம்பெற்ற பல்வேறு இரக்கச்செயல்களைக் குறித்து கேள்வி எழுந்தபோது, அச்செயல்கள் எதுவும் முன்கூட்டியே திட்டமிடப்பட்டவை அல்ல என்றும், 'இறைவனை அடையும் எளிய வழி'யைக் காட்டிய லிசியூ நகர் புனித தெரேசா கூறியதைப்போல், சிறு சிறு நிகழ்வுகள் வழியே இறைவனின் இரக்கத்தை திருஅவை உணர முடிந்தது என்றும், திருத்தந்தை தன் பேட்டியில் எடுத்துரைத்துள்ளார்.

அண்மைய ஆண்டுகளில் கிறிஸ்தவ ஒன்றிப்பு முயற்சிகளில் ஒரு வேகம் தெரிகிறது என்று பேட்டியாளர் Falasca அவர்கள் கூறியபோது, இந்த முயற்சிகள் பல நூற்றாண்டுகளாக நிகழ்ந்தவை என்றும், குறிப்பாக, இரண்டாம் வத்திக்கான் சங்கத்தில் அதிக தீவிரம் அடைந்தன என்றும் திருத்தந்தை தெளிவுபடுத்தினார்.

கிறிஸ்தவ சபைகள் கால்பந்தாட்டக் குழுக்கள் அல்ல என்ற உருவகத்தைப் பயன்படுத்தியத் திருத்தந்தை, தங்கள் சபைக்கு ஆட்களைத் திரட்டும் முயற்சிகளில் கிறிஸ்தவ சபைகள் ஈடுபட்டிருந்தது, நம்மிடையே உள்ள குறைபாடு என்று வலியுறுத்திக் கூறினார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட Amoris Letitia என்ற திருத்தூது அறிவுரைக்கு எழுந்துள்ள விமர்சனங்கள் குறித்துப் பேசியத் திருத்தந்தை, இறைவனையும், திருஅவையையும் சட்ட திட்டங்கள் என்ற எல்லைக்குள் பூட்டிவைக்க நினைப்பது, இத்தகைய விமர்சனங்களை எழுப்பியுள்ளது என்பதைக் குறிப்பிட்டு, வாழ்க்கையை, கருப்பு வெள்ளை என்ற துல்லியமானப் பிரிவுகளாகக் காண்பதை விடுத்து, காலங்களுக்கு ஏற்றவாறு, தேர்ந்து தெளியும் மனதை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.

அனைவரும் ஒன்றாய் இருக்கவேண்டும் என்று இயேசு இறுதி இரவுணவில் வேண்டினார் என்பதை தன் பேட்டியில் சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை, இந்த ஒன்றிப்பை தேடி அடைவதும், அதை போற்றி பாதுகாப்பதும் உரோமைய ஆயரின் முக்கியப் பணி என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.