2016-11-18 15:42:00

இரக்கத்தின் யூபிலியின் இறுதியில் வெளியாகும் திருத்தூது மடல்


நவ.18,2016. "அன்பால் நிறைந்த மனம் வேண்டுமெனில், இரக்கமுள்ளவராக இருங்கள்" என்ற செய்தி, நவம்பர் 18, இவ்வெள்ளியன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் பக்கத்தில் வெளியானது.

மேலும், "இறைவனின் இரக்கத்தை ஒருவர் தன் வாழ்வில் உணர்வது மட்டும் போதாது; அதை யார் யார் பெறுகிறாரோ, அவர் அந்த இரக்கத்தின் அடையாளமாகவும், அதை மற்றவருக்கு வழங்கும் கருவியாகவும் மாறவேண்டும்" என்ற வார்த்தைகளை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வியாழனன்று, தன் டுவிட்டர் செய்தியாக வெளியிட்டார்.

இதற்கிடையே, நவம்பர் 20, வருகிற ஞாயிறன்று நிறைவுபெறும் இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கும், “Misericordia et Misera” என்ற திருத்தூது மடலை, இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டின் நிகழ்வுகள் அனைத்தையும் ஒருங்கிணைத்த பேராயர், ரீனோ பிசிக்கெல்லா அவர்கள், நவம்பர் 21, திங்களன்று, வெளியிடுவார் என்று, திருப்பீடச் செய்தித் துறை அறிவித்துள்ளது.

நவம்பர் 19, சனிக்கிழமையன்று பொறுப்பேற்கும் புதிய கர்தினால்களுடன், நவம்பர் 20, வருகிற ஞாயிறு கொண்டாடப்படும் கிறிஸ்து அரசர் பெருவிழாவன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூட்டுத் திருப்பலியாற்றுவார் என்பதும், அத்திருப்பலியின் இறுதியில், புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில் உள்ள புனிதக் கதவு மூடப்படுவதோடு, இரக்கத்தின் சிறப்பு யூபிலி நிறைவடையும் என்பதும் குறிப்பிடத்தக்கன.

ஆதாரம் :  / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.