2016-11-17 15:31:00

அந்நியரை வரவேற்பதை, திருஅவை நிறுத்தப்போவதில்லை


நவ.17,2016. அமெரிக்க ஐக்கிய நாட்டில் புதிதாகப் பொறுப்பேற்கும் அரசுத் தலைவரும், அதிகாரிகளும் வேறுபட்ட கருத்துக்களைக் கூறினாலும், கத்தோலிக்கத் திருஅவை, பசித்திருப்போர், தாகமாயிருப்போர் ஆகியோருக்கு உதவுவதையும், அந்நியரை வரவேற்பதையும் நிறுத்தப்போவதில்லை என்று, அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவையின் புதியத் தலைவர் கூறியுள்ளார்.

பால்டிமோர் நகரில் அண்மையில் நடைபெற்ற அமெரிக்க ஜக்கிய நாட்டு ஆயர் பேரவைக் கூட்டத்தில், நவம்பர் 15, இச்செவ்வாயன்று புதியத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கர்தினால் டேனியல் தினார்தோ (Daniel DiNardo) அவர்கள், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறினார்.

மனிதர்கள் அனைவரும், அடிப்படையில், சமமான மாண்பு உடையவர்கள் என்பதை, கத்தோலிக்க திருஅவை எப்போதும் மதிக்கும் என்றும், இதிலிருந்து மாற்றுக்கருத்து கொண்டோரை மதித்தாலும், திருஅவை தன் நிலைப்பாட்டில் மாறப்போவதில்லை என்றும், கர்தினால் தினார்தோ அவர்கள் எடுத்துரைத்தார்.

ஆயர் பேரவையின் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள லாஸ் ஆஞ்செலஸ் பேராயர் ஹோஸே கோமஸ் அவர்கள், அமெரிக்காவில் வாழும் பிறநாட்டவர்களை, குறிப்பாக, இலத்தீன் அமெரிக்க மக்களை, ஆதரித்து, வளர்ப்பது, தலத்திருஅவையின் ஒரு முக்கிய பணி என்று குறிப்பிட்டார்.

ஆதாரம் : CNA / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.