2016-11-16 16:54:00

வத்திக்கானிலிருந்து நிபுணர் குழுவை அனுப்பி வைத்த திருத்தந்தை


நவ.16,2016. இத்தாலியின் வால்நெரீனா (Valnerina) மற்றும் நோர்ச்சியா (Norcia) பகுதிகளில் ஏற்பட்ட நில நடுக்கத்தைத் தொடர்ந்து, அப்பகுதியில் பணியாற்ற தீயணைப்புத் துறையின் உயர் அதிகாரிகளையும், வத்திக்கான் அருங்காட்சியக அதிகாரிகளையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுப்பியுள்ளார் என்று, அம்மறைமாவட்டம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த ஆலயங்களின், கலைநயம் மிக்க கருவூலங்களை இடிபாடுகளிலிருந்த மீட்டு, மீண்டும் அந்த ஆலயங்களை கட்டியெழுப்புவதற்கு உதவியாக, இந்தச் சிறப்புக் குழுவினர் அங்கு அனுப்பப்பட்டுள்ளனர் என்று மறைமாவட்ட குறிப்பு கூறியுள்ளது.

திருத்தந்தை தங்கள் பகுதி மீது காட்டிவரும் அக்கரைக்கு தாங்கள் மிகுந்த நன்றியறிந்திருப்பதாக, Spoleto-Norcia உயர் மறைமாவட்டத்தின் பேராயர், Renato Boccardo அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.

புகழ்பெற்ற புனித பெனடிக்ட் ஆலயம் உட்பட, அனைத்து ஆலயங்களின் மறு கட்டுமானப் பணிகளை மேற்பார்வையிட, வத்திகானிலிருந்து வருகை தந்துள்ள நிபுணர்கள் குழு ஆற்றும் அனைத்து பணிகளுக்கும் ஆகும் செலவை, வத்திக்கான் வழங்கும் என்ற அறிவிப்பு, திருத்தந்தை தங்களுடன் இருக்கும் உணர்வை உறுதிப்படுத்துகிறது என்று பேராயர் Boccardo அவர்கள் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.