2016-11-16 17:06:00

நமக்கு மிக அருகில் இருப்பவருக்கு உதவிகள் தேவைப்படலாம்


நவ.16,2016. "பிறரன்புப் பணியில் ஈடுபட, பிரம்மாண்டமான திட்டங்கள் தேவையில்லை. பல நேரங்களில் நமக்கு மிக அருகில் இருப்பவருக்கு நம் உதவிகள் தேவைப்படலாம்" என்ற வார்த்தைகள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புதனன்று வெளியிட்ட டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றுள்ளன.

நவம்பர் 21ம் தேதி, வருகிற திங்களன்று கடைபிடிக்கப்படும் மீன்பிடித்தொழிலின் உலக நாளையொட்டி, FAO எனப்படும், உலக உணவு மற்றும் வேளாண் துறையும், புலம்பெயர்வோர் மற்றும் பயணம் செய்வோர்க்கு மேய்ப்புப் பணியாற்றும் திருப்பீட அவையும் இணைந்து, உரோம் நகரில் நடத்தும் ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கில், திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் மற்றும், இத்திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் அந்தோனியோ மரிய வேலியோ ஆகியோர் பங்கேற்பர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகில், கோடிக்கணக்கான மக்களுக்கு உணவும், உலகளவில், ஐந்து கோடிக்கு மேற்பட்ட மக்களுக்கு வேலைவாய்ப்பும் வழங்குகின்ற, பெருங்கடல்கள் மற்றும் கடல் தொழிலாளரின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் நோக்கத்தில், ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 21ம் தேதி, மீன்பிடித்தொழிலின் உலக நாள் கடைப்பிடிக்கப்படுகின்றது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.