2016-11-16 12:51:00

திருத்தந்தை : நமக்குத் தீமை செய்வோர் மீது பொறுமை


நவ.16,2016. இரக்கத்தின் யூபிலி ஆண்டில், கிறிஸ்தவர்கள் அனைவரும் ஆற்ற வேண்டிய, உடல் சார்ந்த மற்றும் ஆன்மீகம் சார்ந்த இரக்கச் செயல்களாக, திருஅவை, பதினான்கைப் பரிந்துரைத்து, அவற்றைச் செயல்படுத்துவதற்கு ஊக்கமளித்து வருகின்றது. “நமக்குத் தீமை செய்தோரை, பொறுமையாக ஏற்றுக்கொள்ளுதல்” என்பது, ஆன்மீகம் சார்ந்த ஏழு இரக்கச் செயல்களில் ஒன்றாகும். ஆன்மீகம் சார்ந்த, இந்த இரக்கச் செயல் பற்றியே, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புதன் காலையில், வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான திருப்பயணிகளுக்கு, பொது மறைக்கல்வியுரை வழங்கினார். “ஒவ்வொருவரும் தன் கண்ணில் இருக்கும் மரக்கட்டையை எடுத்து எறிந்த பின்னர், பிறர் கண்ணில் இருக்கும் துரும்பை எடுக்க வேண்டும் என்ற இயேசுவின் நற்செய்தி போதனைப் பகுதி (லூக்.6:41-42)” முதலில் வாசிக்கப்பட்டது. பின்னர், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எல்லாருக்கும் காலை வணக்கம் சொல்லி, நாம் அனைவரும் மிக நன்றாகத் தெரிந்து வைத்திருக்கும், ஆனால், நாம் செயல்படுத்த வேண்டியிருந்தும், சிலவேளைகளில், நாம் செயல்படுத்தாமல் இருக்கின்ற, ஓர் இரக்கச் செயல் பற்றிப் பார்ப்போம் என, இத்தாலிய மொழியில் தன் உரையைத் தொடங்கினார்.

அன்புச் சகோதர, சகோதரிகளே, இந்த இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டின் நம் மறைக்கல்வியில், தீமை செய்தவர்களைப் பொறுமையுடன் ஏற்றுக்கொள்தல் பற்றிய இரக்கச் செயல் பற்றிச் சிந்திப்போம். நமக்குத் தீமை செய்தவர்களிடம், இன்னும் பரந்த அளவில் சொல்லப்போனால், நமக்கு எரிச்சல் ஊட்டுபவர்களிடம், பொறுமை காட்டுவது, பாவிகளாகிய நம்மீது, இறைவன் காட்டும் இரக்கத்தை நாம் பின்பற்றுவதாகும். பிறரோடு பொறுமையாக இருப்பதில் நாம் பழகுவது, நம் சொந்த நடத்தையையும், நம் தவறுகளையும் சிந்திப்பதற்கும் நமக்குச் சவாலாக இருக்கின்றது. அறியாமையில் உள்ளவர்க்கு கற்பித்தல், பாவிகளை நன்னெறிப்படுத்தல் ஆகிய இரு ஆன்மீகம் சார்ந்த இரக்கச் செயல்களுக்கும், பொறுமை தேவைப்படுகின்றது. வாழ்வில் முக்கியமான காரியங்களாகிய, விசுவாசத்திலும், அறிவிலும் இளையோர் வளர்வதற்கு, ஆரவாரமின்றி உதவிசெய்யும், எண்ணற்ற பெற்றோர், மறைக்கல்வி ஆசிரியர்கள் மற்றும், ஆசிரியர்கள் காட்டும் பொறுமையை நாம் நினைத்துப் பார்ப்போம். குறுகிய காலத்தில் அழியக்கூடியவைகளைப் பற்றிக்கொண்டிருப்பவர்கள், தங்களின் வாழ்வில், ஆண்டவரின் திட்டத்தைக் கண்டுணரவும், இதன் வழியாக, நிலைத்த மகிழ்வைக் காணவும் பிறர்க்கு உதவுவது, மாபெரும் பிறரன்புச் செயலாகும். நம் சகோதர, சகோதரிகளுக்கு, இவ்வாறு சேவையாற்றுவதன் வழியாக, நம் இதயங்களும் மனமும் தூய்மைப்படுத்தப்பட்டு, புதுப்பிக்கப்படும். நம்மைச் சுற்றி வாழ்வோர்க்கு நாம் ஆதரவாகவும், ஊக்கமூட்டுபவர்களாகவும் செயல்படுவதற்கு, நமக்குத் தேவையான, மனத்தாராளத்தையும் பொறுமையையும் தூய ஆவியார் தருவாராக. இதன் வழியாக, உண்மையிலேயே முக்கியமான விடயங்களை, நாம் எல்லாரும் ஒன்றிணைந்து பேணி வளர்க்க இயலும்.

இவ்வாறு, இப்புதன் பொது மறைக்கல்வியுரையை நிறைவு செய்த திருத்தந்தை, திருப்பயணிகள் எல்லாருக்கும், இரக்கத்தின் யூபிலி ஆண்டின் இறுதி நாள்கள், அருளும், ஆன்மீகப் புதுப்பித்தலின் காலமாக அமையட்டும் என வாழ்த்தினார். நவம்பர் 20, வருகிற ஞாயிறன்று, உலக சிறார் உரிமைகள் தினம் கடைப்பிடிக்கப்படுவதைக் குறிப்பிட்டார் திருத்தந்தை. அனைத்துக் குடும்பங்களும், நிறுவனங்களும், சிறாரின் நலன் பாதுகாக்கப்படுவதில் கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொண்டார். அதன் வழியாக, அடிமைமுறை, ஆயுதக் குழுக்கள் மற்றும், தவறாக நடத்தப்படுவதிலிருந்து சிறார் காப்பாற்றப்படுவார்கள். மேலும், ஒவ்வொரு சிறாரின் பள்ளி செல்வதற்கான உரிமை உறுதிசெய்யப்படுவதில் விழிப்பாயிருக்கவும், சிறார், அமைதியான சூழலில் வளரவும் அனைத்துலக சமுதாயத்தைக் கேட்டுக்கொண்டார். இதனால், சிறார், வருங்காலத்தை நம்பிக்கையோடும் நோக்குவார்கள் என்றார்  திருத்தந்தை. மேலும், இத்தாலியின் ஜெனோவாவைச் சேர்ந்த 55 பேர் கொண்ட குழு ஒன்று, 140 கிலோ எடையுள்ள, அரைவட்ட வடிவ சாக்லேட் இனிப்பை திருத்தந்தைக்கு வழங்கியது. வெனெசுவேலா நாட்டு 11 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இப்பொது மறைக்கல்வியுரையில் கலந்துகொண்டனர். இன்னும், மத்திய இத்தாலியில், அண்மையில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகச் செபிக்குமாறும், அவர்களுக்கு ஒருமைப்பாட்டுணர்வு காட்டப்படுமாறும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.     

பின்னர், எல்லாருக்கும், தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.