2016-11-16 12:45:00

இரக்கத்தின் தூதர்கள் : சமாதானத் தூதர் புனித சியன்னா கத்ரீன்


நவ.16,2016. “எல்லாவற்றிலும் துணிச்சலாக இருக்கத் தொடங்குங்கள். இருளை விரட்டி, ஒளியைப் பரப்புங்கள். உங்களின் பலவீனங்களை நோக்காதீர்கள். மாறாக, சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவில், உங்களால் எல்லாவற்றையும் செய்ய இயலும். நீங்கள் செய்யும் வேலையை வைத்து அல்ல, ஆனால், நீங்கள் காட்டும் அன்பை வைத்தே பலன் பெறுவீர்கள்”. இவ்வாறு சொன்னவர், இத்தாலியின் சியன்னா நகர் புனித கத்ரீன். இவர், ஏழைகளுக்கு, குறிப்பாக, கடும் நோயினால் துன்புற்றவர்களுக்குப் பணியாற்றினார். தனது குடும்பத்திலிருந்து உணவு மற்றும் ஆடைகளை, உதவி தேவைப்படுபவர்க்குக் கொடுத்தார். புனித கத்ரீனுக்கு 16 வயது நடந்தபோது, இவரது அக்கா பொனவெந்தூரா இறந்துவிட்டார். அதனால், அக்காவின் கணவருக்கு இவரை மணமுடித்து வைப்பதற்கு பெற்றோர் பெருமுயற்சி எடுத்தனர். ஆனால், திருமண வாழ்வை விரும்பாத கத்ரீன், தனது தலைமுடியை கத்தரித்து விட்டார். பெற்றோர் எவ்வளவு கெஞ்சியும் கத்ரீன் திருமணத்திற்கு இணங்கவில்லை. பின்னர், அவரின் விருப்பத்திற்கே பெற்றோர் விட்டுவிட்டனர். அதன்பின்னர் புனித சாமிநாதர் மூன்றாம் சபையில் சேர்ந்து, வீட்டிலே தனிமையாக வாழ்ந்தார் புனித கத்ரீன்.

இத்தாலியின் சியன்னாவில், 1347ம் ஆண்டு மார்ச் 25ம் தேதி பிறந்தார் கத்ரீன். அச்சமயத்தில், சியன்னாவில் கொள்ளை நோய் பரவியிருந்தது. இவரது தாய்க்கு இவர் 25வது பிள்ளை. இவரோடு பிறந்த சகோதர, சகோதரிகளில் பாதிப்பேர் சிறு வயதிலே இறந்துவிட்டனர். இவரது தந்தை, துணிக்குச் சாயம் போடும் வேலை செய்து வந்தார். கத்ரீனுக்கு 21 வயது நடந்தபோது, கிறிஸ்துவோடு திருமணம் செய்துகொள்வது போன்ற ஓர் ஆன்மீக அனுபவத்தைப் பெற்றார். இந்தக் காட்சியில், இவர் பொதுவாழ்வை வாழ வேண்டுமெனச் சொல்லப்பட்டார். அதன்பின்னர், வீட்டைவிட்டு வெளியே வந்து, கொள்ளை நோயால் தாக்கப்பட்டவர்களுக்கும், ஏழைகளுக்கும், நோயுற்றோருக்கும் உதவினார். ஒருசமயம், இவரது கையிலிருந்த ரொட்டி பலுகியதால், அதன் வழியாக, ஏழைகளுக்கு உணவளித்தார். 1375ம் ஆண்டில், தூக்குத் தண்டனை இளம் கைதி நிக்கோலோ தி துல்தோவைச் சந்தித்துப் பேசினார். அதன் பயனாக அக்கைதி நிம்மதியாக இறப்பை ஏற்றார். கத்ரீன், அவ்வப்போது உணவு உட்கொள்வதைத் தவிர்த்துவிட்டு, திருநற்கருணை உணவுடன் வாழ்ந்து வந்தார். உடலுக்குப் போதிய உணவு கிடைக்காததால், உடல்நலம் குன்றினாலும், மகிழ்வோடு இருந்தார் கத்ரீன். இவருடைய சொற்களால் பலரும் கவரப்பட்டு, இவருக்குச் சீடரானார்கள். 

சியன்னா நகரில், சமூக மற்றும் அரசியல் பதட்டநிலை உச்சத்திற்குச் சென்றதை உணர்ந்த கத்ரீன், அரசியலில் தலையிடத் துணிந்தார். முதலில் 1374ம் ஆண்டில், பிளாரன்ஸ் நகர் சென்றார். பின்னர், தனது சீடர்களுடன், வட மற்றும் மத்திய இத்தாலி முழுவதும் பயணம் செய்து, அருள்பணியாளரின் சீர்திருத்தத்தில் ஈடுபட்டார். மக்கள், இறைவனை முழுமையாக அன்பு கூர்வதன் வழியாகவே, மனம் வருந்தி வாழ்வைப் புதுப்பிக்க முடியும் என்பதை எடுத்துச் சொன்னார். 1375ம் ஆண்டில், திருத்தந்தையின் ஆட்சிப் பகுதிகளுக்கும், பிளாரன்ஸ் குடியரசுக்கும் இடையே போர் மூண்டது. 1376ம் ஆண்டு ஜூனில், போரின் தீவிரத்தைக் கண்ட கத்ரீன், அச்சமயம், பிரான்ஸ் நாட்டின் அவிஞ்ஞோனில் வாழ்ந்து வந்த திருத்தந்தை 11ம் கிரகரி அவர்களிடம், பிளாரன்ஸ் குடியரசின் அமைதித் தூதராகச் சென்றார். மேலும், அச்சமயத்தில், திருத்தந்தை 11ம் கிரகரி அவர்களை, உரோமைக்கு வருமாறு வற்புறுத்தினார் கத்ரீன். திருத்தந்தையும், 1377ம் ஆண்டு சனவரியில், தனது நிர்வாகத்தை உரோமைக்கு மாற்றி, உரோமைக்குத் திரும்பினார்.

திருத்தந்தை 11ம் கிரகரி அவர்களுக்கும், பிளாரன்ஸ் குடியரசுக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருந்த சமயத்தில், திருத்தந்தை இறந்தார். இதையடுத்து அங்கு ஏற்பட்ட கலகத்தில், கத்ரீன் ஏறக்குறைய கொல்லப்பட்ட நிலையில் இருந்தார். 1378ம் ஆண்டு ஜூலையில் பிளாரன்ஸ்க்கும், உரோமைக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் உருவானது. 1378ம் ஆண்டு நவம்பரில், மேற்கத்திய பெரும் பிரிவினை ஏற்பட்டது. அப்போதைய புதிய திருத்தந்தை 6ம் உர்பான், புனித கத்ரீனை உரோமைக்கு வரும்படி ஆணையிட்டார். கத்ரீன், திருத்தந்தையின் நீதிமன்றத்தில் இருந்துகொண்டு, கர்தினால்களும், பிரபுக்களும், இத்திருத்தந்தையை ஏற்கும்படி வலியுறுத்தி, அதில் வெற்றியும் கண்டார். பிளாரன்சில் இடம்பெற்ற மோதலில் காயமுற்று, பல நாள்கள் துன்புற்ற கத்ரீன், 1380ம் ஆண்டு, ஏப்ரல் 29ம் தேதி, உரோம் நகரில், தனது 33வது வயதில் இறைவனடி சேர்ந்தார். உரோம் நகரிலுள்ள மினெர்வா புனித மரியா கோவிலின் அருகில் உள்ள கல்லறையில் இவர் அடக்கம் செய்யப்பட்டார். அங்கே பல புதுமைகள் நிகழ்ந்ததாக மக்கள் கூறியதால் இவரின் உடல் கோயிலினுள் அடக்கம் செய்யப்பட்டது. இவரின் தலை, உடலிலிருந்து பிரித்து எடுக்கப்பட்டு சியன்னா நகரில் உள்ள தொமினிக்கன் ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ளது.

புனித கத்ரீன் அவர்களின் தெய்வீகக் கோட்பாடு என்று நூல் புகழ்பெற்றது. இவர், கர்தினால்கள், ஆயர்கள் மற்றும் துறவு சபைத் தலைவர்களுக்கு, 400க்கும் மேற்பட்ட கடிதங்களை எழுதியுள்ளார். இதனால், சியன்னா நகர் புனித கத்ரீன், 1970ம் ஆண்டில், திருஅவையின் மறைவல்லுநராக அறிவிக்கப்பட்டார். அசிசியின் புனித பிரான்சிசோடு இவரும் இத்தாலியின் பாதுகாவலராக அறிவிக்கப்பட்டார். 33 வயதுக்குள்ளாக, மாபெரும் காரியங்களைச் சாதித்த, சமாதானப் புறாவான, அமைதியின் தூதரான புனித கத்ரீன், இக்காலத்தில், போர்கள் இடம்பெறும் இடங்களில் அமைதி ஏற்பட உதவுவாராக!

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.