2016-11-15 16:11:00

வெதுவெதுப்பான கிறிஸ்தவர்களாக மாறாமல் இருப்பதில் கவனம்


நவ.15,2016. ஆண்டவரின் பார்வையை நாம் இழந்துவிடாமல் இருக்கும்பொருட்டு, வெதுவெதுப்பான கிறிஸ்தவர்களாக, மாறாமல் இருப்பதில், கவனம் செலுத்துவோம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்செவ்வாய் காலை திருப்பலியில் கூறினார்.

சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில், இச்செவ்வாய் காலை நிறைவேற்றிய திருப்பலியில், அதன் முதல் வாசகத்தை (திவெ.3:1-6,14-22) மையப்படுத்தி மறையுரையாற்றியத் திருத்தந்தை, நம் ஆன்மாவை, வெதுவெதுப்பான நிலையிலிருந்து நம்மை எழுப்பி, நம்மைத் திருத்துவதற்கு, ஆண்டவர், எப்போதும் முயற்சிக்கிறார் என்றும் கூறினார்.

கிறிஸ்தவர்கள், குளிர்ச்சியாகவோ, சூடாகவோ இல்லாமல், வெதுவெதுப்பாக இருந்தால், ஆண்டவர் தன் வாயிலிருந்து, அவர்களைக் கக்கி விடுவார் என்று, இலவோதிக்கேயாவிலுள்ள திருஅவையை எச்சரித்து, திருவெளிப்பாட்டு நூலில் கூறப்பட்டுள்ள கடுமையான மொழியை, மறையுரையில் சுட்டிக்காட்டினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

தங்களைச் செல்வந்தர்களாக நினைப்பவர்கள், மகிழ்வாக இருப்பதில்லை, எனினும்,  எதையும் அன்புக்காக ஆற்றுபவர்கள், மற்றொரு வகையான செல்வத்தைக் கண்டுகொள்வர், அதை, ஆண்டவரால் மட்டுமே அளிக்க இயலும் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

வெதுவெதுப்பான கிறிஸ்தவர்கள், இறைவன் குறித்த பெரிய மற்றும் அழகான காரியங்களைப் பார்க்கின்ற, தியானிக்கின்ற திறமையை இழக்கின்றனர் எனவும், இதனால் நாம் மனம் மாறுவதற்கு, ஆண்டவர் நமக்கு உதவுகிறார், நம்மைத் தட்டி எழுப்பிக்கொண்டே இருக்கின்றார் எனவும் திருத்தந்தை கூறினார். 

நம் ஆண்டவர் நம் இதயக் கதவைத் தட்டுவதைக் கவனிக்காத கிறிஸ்தவர்கள் உள்ளனர், அவர்களுக்கு, எல்லாச் சப்தங்களும் ஒரேமாதிரியாகவே உள்ளன என்றுரைத்தத் திருத்தந்தை, நம் ஆண்டவர் நம் இதயக் கதவைத் தட்டுவதைத் தேர்ந்து தெளிய வேண்டுமெனவும், இதற்காக, தூய ஆவியாரிடம் அருள் வேண்டுவோம் எனவும், விசுவாசிகளிடம் கூறினார்.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.