2016-11-15 16:27:00

புலம்பெயர்ந்தவர் மாண்பைப் பாதுகாக்க டிரம்ப்க்கு வேண்டுகோள்


நவ.15,2016. அமெரிக்க ஐக்கிய நாட்டின் 45வது அரசுத்லைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப் அவர்கள், அந்நாட்டில், உரிய ஆவணங்கள் இல்லாமல், சட்டவிரோதமாக தங்கி இருப்பவர்களை, வெளியேற்றுவேன் என்று கூறியுள்ளவேளை, புலம்பெயர்ந்தவர்கள் மற்றும் குடிபெயர்வோரின் அடிப்படையான மாண்பை, தொடர்ந்து பாதுகாக்க வேண்டுமென அந்நாட்டுக் கத்தோலிக்கத் திருஅவை கேட்டுக்கொண்டுள்ளது.

நவம்பர் 13, இஞ்ஞாயிறன்று, டிரம்ப் அவர்கள், CBS தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், குற்றவாளிகள் மற்றும் குற்றவாளிகளாகப் பதிவு செய்யப்பட்டிருப்போர் என, இருபது இலட்சம் முதல் முப்பது இலட்சம் பேர் வரை நாட்டைவிட்டு வெளியேற்றும் திட்டத்தை வைத்திருப்பதாக அறிவித்தார்.

இதையடுத்து, பொதுவான அறிக்கை ஒன்றை வெளியிட்ட, அமெரிக்க ஆயர் பேரவையின் புலம்பெயர்ந்தவர் ஆணைக் குழுவின் தலைவரான, Seattle துணை ஆயர் Eusebio L. Elizondo அவர்கள், இவ்வாறு கேட்டுக்கொண்டார்.

உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து, வன்முறை மற்றும் ஆயுத மோதல்களுக்கு அஞ்சி வரும் மக்களை வரவேற்பது, கத்தோலிக்கரின் தனித்துவப் பண்புகளில்  ஒன்று எனவும், திருஅவையின் மரபுப் பண்புகளில் ஒன்றாகிய, மனித வாழ்வைப் பாதுகாக்கும் பணியை, தொடர்ந்து ஆற்றும் எனவும், ஆயர் Elizondo அவர்கள் கூறியுள்ளார்.

உலகில், 6 கோடியே, 50 இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள், கட்டாயமாகப் புலம்பெயர்ந்தவர்கள் என்றும், அவர்களை வரவேற்க வேண்டியது, இக்காலத்தில் அதிகம் தேவைப்படுகின்றது என்றும் கூறியுள்ளார் ஆயர் Elizondo.

அமெரிக்க-மெக்சிகோ எல்லைப் பகுதியில் உள்ள தடைச் சுவர், வேலிகளோடு உயர்த்தப்படும் என்றும், வருகிற சனவரி 20ம் தேதி பதவியேற்கும் டிரம்ப் அவர்கள் ஒரு பேட்டியில் சொல்லியுள்ளார். 

ஆதாரம் : CNS /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.