2016-11-14 17:03:00

புனிதக்கதவு மூடப்படும் வேளையில், நம் உள்மனக் கதவு திறக்கிறது


நவ.,14,2016. சிறப்பு யூபிலி ஆண்டின் இறுதி நிகழ்வாக புனிதக் கதவு மூடப்படும் இவ்வேளையில், நம் விசுவாசம், நம்பிக்கை மற்றும் பிறரன்பு எனும் பயணத்தில், உள்மனக் கதவு திறக்கப்படுகின்றது என மறையுரையாற்றினார் கர்தினால் ஜேம்ஸ் மைக்கேல் ஹார்வி.

யூபிலி ஆண்டின் இறுதி நிகழ்வாக இம்மாதம் 13ம் தேதி, அதாவது கடந்த ஞாயிறன்று, மாலை, உரோம் நகரின் புனித பவுல் பசிலிக்காப் பேராலய புனிதக் கதவை மூடிய விழாவில் மறையுரையாற்றிய கர்தினால் ஹார்வி அவர்கள், 11 மாதங்களுக்கு முன்னர்  தடுப்புச் சுவரை உடைத்து திறக்கப்பட்ட புனிதக் கதவு, பிரிவினைச் சுவர்களை உடைத்து, இயேசுவின் அமைதியை நோக்கிச் செல்லும் புனித தலத்திற்கான பாதையை திறந்ததாகும் என்றார்.

இறை இரக்கத்தை மிகுதியாகக் கொண்டுள்ள இறைவனின் தெய்வீக மறையுண்மையை நாம் சென்றடைவதன் அடையாளமாக புனிதக்கதவு உள்ளது எனவும் எடுத்துரைத்தார் கர்தினால்.

புனிதக் கதவுகள் மூடப்பட்டாலும், இறைவனின் இரக்கக் கதவுகள் ஒரு நாளும் மூடப்படுவதில்லை என்பதையும் எடுத்தியம்பிய கர்தினால் ஹார்வி அவர்கள், கடந்த 20 ஆண்டுகளில் புனித பவுல் பசிலிக்கா பேராலயம், 2000மாம் ஆண்டின் யூபிலிக்கொண்டாட்டம், 2008 மற்றும் 2009ம் ஆண்டின் புனித பவுலின் 2000மாம் பிறப்பு ஆண்டுக் கொண்டாட்டம் மற்றும் தற்போதைய சிறப்பு யூபிலிக் கொண்டாட்டம் என முன்று மிகப்பெரும் நிகழ்வுகளைக் கொண்டாடியுள்ளது என்றார்.

புனிதக் கதவு வழியாக நுழைவது என்பது, நம்மில் மனமாற்றத்தை எதிர்பார்க்கிறது என்பதை மனதில் கொண்டவர்களாக, எண்ணற்றோர் இந்த யூபிலி ஆண்டில் புனித பவுல் பசிலிக்காவிற்கு வந்து, அருளைப் பெற்றுச் சென்றுள்ளதையும் சுட்டிக்காட்டினார் கர்தினால் ஹார்வி. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.