2016-11-14 16:18:00

எந்த ஒரு போட்டியும் மற்றவர்களுக்கான மதிப்பில் இடம்பெற….


நவ.,14,2016. ஜெர்மன் கால்பந்தாட்ட குழுவின் வெற்றி எப்போதுமே ஓர் அணியின் வெற்றியாகவே இருந்துள்ளதாக தான் கேள்விப்பட்டதுண்டு என இத்திங்கள் காலையில் வத்திக்கானில் ஜெர்மன் தேசிய கால்பந்து குழுவை சந்தித்தபோது தன் பாராட்டுக்களை வெளியிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தனி மனித வெற்றிக்காக அல்லாமல், குழு உணர்வுடன் பல்வேறு தியாகங்களுடனும் மற்றவர்களுக்கான மதிப்புடனும் இடம்பெறும்  போட்டிகளே விளையாட்டுக்களில் தேவை என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இது வெற்றியை மட்டும் தருவதில்லை, மாறாக, தங்களைப் பின்பற்ற விரும்பும் இளையோருக்கு ஓர் எடுத்துக்காட்டாகவும் உள்ளது என்றார்.

சில சமூக கொள்கைகளுக்காகவும், சமூக நலனுக்காகவும் உழைப்பதில் தங்களை அர்ப்பணிப்பதற்கும், விளையாட்டின்போது கடைபிடிக்கப்படும் உயர்ந்த மதிப்பீடுகள் உதவுகின்றன என்பதையும் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஏழை நாடுகளின் குழந்தைகள் மற்றும் இளையோருக்கு உதவி வரும் ஜெர்மானிய கால்பந்து விளையாட்டு வீரர்களின் செயல் குறித்தும் தன் பாராட்டுக்களை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இதன் வழியாக, ஒரு நீதியான, ஒன்றிணைந்த சமூகம் உருவாவதற்கு அவர்கள் உதவுகின்றனர் எனவும் தெரிவித்தார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

 








All the contents on this site are copyrighted ©.