2016-11-14 16:02:00

அக்கறையற்ற நிலையின் எதிர்ப்பு மருந்து, இரக்கச் செயல்கள்


நவ.14,2016. "அக்கறையற்ற நிலை என்ற நோய்க்கிருமியால் பாதிக்கப்பட்டிருக்கும் இன்றைய உலகிற்கு, இரக்கத்தின் செயல்களே சிறந்த எதிர்ப்பு மருந்து" என்ற வார்த்தைகள், இத்திங்களன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தியாக வெளியிடப்பட்டுள்ளன.

கடந்த வெள்ளி முதல், இஞ்ஞாயிறு முடிய, வறியோர் மற்றும் வீடற்றோரின் சிறப்பு யூபிலி கொண்டாட்டங்கள் வத்திக்கானில் சிறப்பிக்கப்பட்டதையொட்டி, சமுதாயத்தால் ஒதுக்கப்பட்டோரை மையப்படுத்தி, 'அக்கறையற்ற' நிலை குறித்து திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி அமைந்துள்ளது.

மேலும், இத்திங்கள் முதல் வத்திக்கான் நகருக்குள் குப்பைகள், மற்றும் வீணாகும் பொருள்களை ஒப்படைப்பதற்கென ஓர் இடத்தை ஒதுக்கியுள்ளது, வத்திக்கான் நகர் நிர்வாகம்.

கடந்த ஈராண்டுகளாக ஒவ்வொரு வகையான குப்பைகளுக்கு என தனித்தனி குப்பைத் தொட்டிகள் வைத்து சேகரிக்கப்பட்டு வருகின்ற போதிலும், வத்திக்கான் நகருக்குள் குப்பைகள் மற்றும் வீணாகும் பொருள்களை தரம் பிரித்து வண்டிகள் வழியே எடுத்துச் செல்வதற்கென புதிய முறை ஒன்று, தற்போது அமலுக்கு வந்துள்ளது.

இதன்வழியே, வத்திக்கான் நகருக்குள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த அக்கறை, மேலும் உறுதியாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.