2016-11-12 14:32:00

நோய்களுக்கும், அநீதிகளுக்கும் உள்ள தொடர்பு - திருத்தந்தை


நவ.12,2016. 'அரிய வகையான' மற்றும், 'புறக்கணிக்கப்பட்ட' நோய்களைக் குறித்து, நலவாழ்வுப் பணியாளர்களின் திருப்பீட அவை ஏற்பாடு செய்துள்ள கருத்தரங்கிற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வாழ்த்துச் செய்தியொன்றை அனுப்பியுள்ளார்.

'அரிய வகையான மற்றும், புறக்கணிக்கப்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டோரை வரவேற்று, பராமரிக்கும் கலாச்சாரத்தை நோக்கி' என்ற தலைப்பில்,  நவம்பர் 10, இவ்வியாழன் முதல், 12 இச்சனிக்கிழமை முடிய உரோம் நகரில் நடைபெற்ற ஒரு பன்னாட்டு கருத்தரங்கிற்கு திருத்தந்தை இச்செய்தியை அனுப்பியுள்ளார்.

நலவாழ்வுப் பணியாளர்களின் திருப்பீட அவை ஏற்பாடு செய்த 31வது பன்னாட்டுக் கருத்தரங்கில் கலந்துகொண்டோரை வாழ்த்துவதாகக் கூறும் திருத்தந்தை, இந்த அவையின் தலைவராகப் பல ஆண்டுகள் பணியாற்றி, கடந்த ஜூலை மாதம் இறையடி சேர்ந்த பேராயர் Zygmunt Zimowski அவர்களை, நன்றியோடு நினைவுகூர்வதாகவும் இச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

உலகெங்கும், அரியவகை நோயினால் துன்புறுவோரின் எண்ணிக்கை, 40 கோடி என்றும், புறக்கணிக்கப்பட்ட நோய்களால் துன்புறுவோரின் எண்ணிக்கை 100 கோடி என்றும் உலக நலவாழ்வு நிறுவனமான WHO வெளியிட்டுள்ள அறிக்கையை தன் செய்தியில் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, நோயுற்றோரில் பெருமளவானவர் நலப்பராமரிப்பு அதிகமற்ற நாடுகளில் துன்புறுகின்றனர் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இத்தகைய நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆற்றும் பணிகள், அடிப்படை மனித மாண்பு என்ற உண்மையிலிருந்து ஆரம்பமாகவேண்டும் என்பதை, திருத்தந்தையின் செய்தி வலியுறுத்துகிறது.

வறுமையில் வாடுவோர், அடிப்படை மனித மாண்பை இழந்திருப்பதால், அவர்கள் இத்தகைய நோய்களால் தாக்கப்படும் வேளையில், அவற்றைத் தீர்க்கும் தீவிரமான ஆய்வுகளை உலக அரசுகளும், பன்னாட்டு நிறுவனங்களும் மேற்கொள்வதில் அக்கறை காட்டுவதில்லை என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நோய்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் நெருங்கியத் தொடர்புகள் உள்ளன என்பதை குறிப்பிடும் திருத்தந்தை, ஒரு சில நோய்களுக்கு தலைமுறை வழி வரும் காரணங்கள் இருந்தாலும், வேறு சில நோய்களுக்கு, சுற்றுச்சூழல் சீரழிவு பெரியதொரு காரணமாக அமைந்துள்ளது என்று தன் செய்தியில் தெளிவுபடுத்துகிறார்.

திருஅவையானது போர்க்களத்தில் பணியாற்றும் மருத்துவமனை என்று தான் கூறிய உருவகத்தை, இச்செய்தியில் மீண்டும் நினைவுகூரும் திருத்தந்தை, நோயுற்றோர் உள்ள பகுதிகளைத் தேடிச்செல்வது திருஅவையின் முக்கியப் பணி என்பதையும் கூறியுள்ளார்.

உலகில் பரவிவரும் நோய்களுக்கும், உலகில் நிலவும் அநீதிகளுக்கும் தொடர்பு உள்ளது என்று தன் செய்தியில் சுட்டிக்காட்டும் திருத்தந்தை, இந்த அநீதிகளை நீக்குவதற்கு, திருஅவை ஏற்கனவே வகுத்துள்ள சமுதாயப் படிப்பினைகள் உதவியாக இருக்கும் என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.