2016-11-12 14:59:00

குருத்துவத்தைத் துறந்து வாழ்கின்ற, இளையோருடன் திருத்தந்தை


நவ.12,2016. அண்மை ஆண்டுகளில், குருத்துவ வாழ்வைத் துறந்து வாழ்கின்ற, இளையோர் குழு ஒன்றை, எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, அவர்கள் வாழும் இடம் சென்று சந்தித்து, அவர்களை வியப்பில் ஆழ்த்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஆற்றிவரும் வெள்ளிக்கிழமை இரக்கச் செயல்களின் ஒரு கட்டமாக, இவ்வெள்ளி மாலை 3.30 மணியளவில், சாந்தா மார்த்தா இல்லத்திலிருந்து புறப்பட்டு, உரோமைக்கு கிழக்கேயுள்ள, Ponte di Nona புறநகர்ப் பகுதியில், ஏழு இளையோர் குடும்பங்களைச் சந்தித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருத்தந்தையின் இந்தத் திடீர் வரவால் மகிழ்ந்த அந்த இளையோர், தங்கள் குடும்பங்களுடன் திருத்தந்தையைச் சந்தித்தனர். குருத்துவ வாழ்வில் தாங்கள் எதிர்கொண்ட சந்தேகம், நிச்சயமற்ற தன்மை, தனிமை, புரிந்துகொள்ளப்படாமை, பல பொறுப்புக்களை ஏற்றபோது உணர்ந்த சோர்வு போன்றவைகளை, திருத்தந்தையிடம் இவர்கள் பகிர்ந்து கொண்டனர். இந்த மனப் போராட்டங்கள், குருத்துவ வாழ்வில் நுழைவதற்கு எடுத்த தீர்மானம் தவறானதோ என்று சிந்திக்க வைத்தன என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

உரோம் மறைமாவட்டத்தில் அருள்பணியாளர்களாகப் பணியாற்றிய இந்த ஏழு இளையோரும், இத்தாலியின் சிசிலி, இஸ்பெயினின் மத்ரித் மற்றும் இலத்தீன் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள். இவர்கள் திருமணம் செய்து, குடும்ப வாழ்வு வாழ்கின்றனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.