2016-11-12 14:10:00

இறைவனின் இரக்கத்தில் எவரும் ஒதுக்கப்படவில்லை


நவ.12,2016. 2015ம் ஆண்டு டிசம்பர் 8ம் தேதி, அமல அன்னை விழாவன்று தொடங்கிய இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டில், ஏறக்குறைய ஒவ்வொரு மாதத்திலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், யூபிலி பொது மறைக்கல்வியுரையை, ஏதாவது ஒரு சனிக்கிழமை வழங்கி வந்தார். நவம்பர் 20ம் தேதி ஞாயிறன்று, இந்த யூபிலி ஆண்டு நிறைவுறவுள்ளவேளையில், இரக்கத்தின் முக்கிய கூறு குறித்து, இச்சனிக்கிழமை காலையில், கடைசி சனிக்கிழமை யூபிலி பொது மறைக்கல்வியுரையை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ். “பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்(மத்.11:25-28)” என்று இயேசு கூறிய நற்செய்திப் பகுதியை மையமாக வைத்து, முதலில், இத்தாலிய மொழியில் தன் உரையைத் தொடங்கினார் திருத்தந்தை. காலநிலையும் கைகூட, வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் கூடியிருந்த முப்பதாயிரத்துக்கு மேற்பட்ட மக்களிடம், அன்புச் சகோதர, சகோதரிகளே, உங்கள் எல்லாருக்கும் எனது காலை வணக்கம். இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டின், இந்த இறுதி, சனிக்கிழமை யூபிலி பொது மறைக்கல்வியுரையில், எல்லாரையும் உள்ளடக்கும், இரக்கத்தின் முக்கிய பண்பை வலியுறுத்த விரும்புகிறேன், உண்மையில், இறைவன், தம் அன்புத் திட்டத்தில், யாரையும் ஒதுக்குவதற்கு விரும்பவில்லை, மாறாக, எல்லாரையும் உள்ளடக்க விரும்புகிறார் என்று சொல்லி, மறைக்கல்வியுரையை, தொடர்ந்து நிகழ்த்தினார்.

யாரையும் புறக்கணிக்காமல் இருக்கின்ற இறைவனின் இரக்கம், நாம் அனைவரும் இரக்கமுள்ளவர்களாகவும், பிறரின் தேவைகளுக்குத் திறந்தமனம் உள்ளவர்களாகவும் இருப்பதற்கு நமக்குச் சவால் விடுக்கின்றது. குறிப்பாக, ஏழைகள் மற்றும், சோர்ந்தும், பெருஞ்சுமையுடனும் இருப்பவர்களிடம் இரக்கத்துடன் நடந்துகொள்ள நம்மை அழைக்கின்றது. இறைவனின் அன்பையும், இரக்கத்தையும் அனுபவித்துள்ள நாம், வரலாறு அனைத்தையும் அணைத்துக்கொள்ளும், இறைவனின் மீட்பளிக்கும் திட்டத்தில், ஒரு முக்கியப் பங்கைக் கொண்டிருக்கின்றோம். கிறிஸ்துவின் உடலாகிய திருஅவையின் உறுப்பினர்களாக நாம் மாறும்படி, இறைவன், தம் இரக்கத்தில், நம் அனைவரையும் அழைக்கின்றார். அதோடு, நீதி, ஒருமைப்பாடு மற்றும் அமைதி நிறைந்த உலகைக் கட்டியெழுப்புவதில், ஒரே குடும்பமாக, நாம் ஒன்றுசேர்ந்து பணியாற்றவும் இறைவன் நம்மை அழைக்கின்றார். தம் திருமகன் இயேசுவை சிலுவையில் தியாகம் செய்ததன் வழியாக, இறைவன், மனித சமுதாயத்தோடு, தம்மை ஒப்புரவாக்கினார். உலகெங்கும் வாழ்கின்ற நம் சகோதர, சகோதரிகளை, இரக்கத்துடன் அரவணைக்க, இப்போது அவர், தம் திருஅவையை அனுப்புகிறார். இந்த வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தைச் சூழ்ந்துள்ள தூண்கள், இந்த அரவணைப்பின் அடையாளமாக உள்ளன. இவை, மனிதக் குடும்பத்திற்குத் திருஅவை ஆற்றவேண்டிய மறைப்பணியை மட்டுமல்லாமல், பிறரிடம் நாம் காட்டும் இரக்கம், அன்பு மற்றும், மன்னிப்பு வழியாக, எல்லாரையும் அணைக்கும் இறைவனின் அன்புக்கு, விசுவாசத்துடன் நாம் பகர வேண்டிய சான்றையும் நினைவுபடுத்துகின்றது. இந்த உலகில், மதம், கலாச்சாரம் மற்றும் இனத்தின் பெயரால், எவரும் ஒதுக்கப்பட்டுவிடக் கூடாது. ஒவ்வொரு மனிதரின் சுதந்திரத்தையும் மதித்து, நீதி, ஒருமைப்பாடு மற்றும் அமைதியில், ஒரு பெரிய குடும்பத்தின் சகோதர, சகோதரிகளாக, அனைவரும் வாழக்கூடிய ஒரு சமுதாயத்தை, அனைத்து நாடுகளும் அமைக்குமாறு விண்ணப்பிக்கின்றேன். இதற்காக, இறைவனை மன்றாடுவோம்.

இவ்வாறு, இச்சனிக்கிழமை யூபிலி மறைக்கல்வியுரையை நிறைவு செய்தார் திருத்தந்தை பிரான்சிஸ். மேலும், இந்த சிறப்பு யூபிலி ஆண்டில், தன்னார்வத் தொண்டாற்றிய அனைவரின் துணிச்சல் மற்றும் பொறுமை கலந்த பணிகளைப் பாராட்டி, அவர்களுக்கு தனது நன்றியையும் தெரிவித்தார் திருத்தந்தை. இறுதியில், இரக்கத்தின் யூபிலி ஆண்டு, அருளின் மற்றும் ஆன்மீகப் புதுப்பித்தலின் காலமாக, எல்லாருக்கும் அமையட்டும் என வாழ்த்தினார் பின்னர், எல்லாருக்கும், தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார் திருத்தந்தை பிரான்சிஸ் .

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.