2016-11-11 15:46:00

ஏழைகளுக்கென்று ஓர் உலக தினத்தை உருவாக்க வேண்டுகோள்


நவ.11,2016. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்ட,  வீடற்றவர்களைச் சந்தித்த இந்நிகழ்வில், இவர்களில் நால்வர் தங்களின் அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டனர்.

திருஅவையின் இதயத்தில் ஏழைகள் இருக்கின்றனர் என்று, திருத்தந்தை கூறியதற்கும், இந்த இரக்கத்தின் யூபிலி ஆண்டில், உரோம் நகருக்குத் தங்களையெல்லாம் திருத்தந்தை அழைத்ததற்கும், திருத்தந்தைக்கு நன்றி தெரிவித்தார், பாரிசிலிருந்து வந்திருந்த D’ETIENNE VILLEMAIN.

ஏழைகளுக்கென்று ஓர் உலக தினத்தை, திருத்தந்தை உருவாக்க வேண்டுமென்ற வேண்டுகோளையும் முன்வைத்த VILLEMAIN அவர்கள், திருத்தந்தைக்காக, தாங்கள் அன்போடு செபிப்பதாகவும் உறுதியளித்தார்.

மேலும், Témoignage de Christian என்பவர் பகிர்ந்துகொள்கையில், திருத்தந்தை, உலக அமைதிக்காக எடுத்துவரும் முயற்சிகளை, தொடர்ந்து ஆற்றுமாறும் கேட்டுக்கொண்டார்.

Robert Swiderski என்பவர் பேசுகையில், தான் கடவுளிடமிருந்தும், கிறிஸ்தவ விழுமியங்களிலிருந்தும் நீண்ட காலம் ஒதுங்கி இருந்ததாகவும், கமிலியன் சபை அருள்பணியாளர்களின் உதவியினால், வாழ்வில் மாற்றம் அடைந்து, இன்று, திருத்தந்தையைச் சந்திக்கும் நிலைக்கு வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

எங்களைப் போன்றவர்களின் வாழ்வு மிகவும் கடினமானது, எனினும், நாங்கள் தனியாக இல்லை, திருத்தந்தையே, தாங்கள் எங்களோடு இருப்பதை உணருகின்றோம் என்றும் Swiderski அவர்கள் தெரிவித்தார்.

பிரான்ஸ், ஜெர்மனி, போர்த்துக்கல், பிரிட்டன், இஸ்பெயின், போலந்து, இத்தாலி உட்பட பல ஐரோப்பிய நாடுகளிலிருந்து ஏறக்குறைய நான்காயிரம் வீடற்றவர்கள், இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

வீடற்றவர் யூபிலியின் இறுதி நாளாகிய நவம்பர் 13, வருகிற ஞாயிறன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இம்மக்களுக்கு யூபிலி திருப்பலி நிறைவேற்றுவார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.