2016-11-11 15:39:00

ஏழைகளிடம் மிகவும் தாழ்மையுடன் திருத்தந்தை மன்னிப்பு


நவ.11,2016. கடினமான மற்றும் நிச்சயமற்ற வாழ்வு வாழ்கின்ற ஏழைகளிடம், மிகவும் தாழ்மையுடன் மன்னிப்புக் கேட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இவ்வெள்ளியன்று தொடங்கியுள்ள, சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்டவர்களின் யூபிலி விழாவை முன்னிட்டு, பல ஐரோப்பிய நாடுகளிலிருந்து உரோமைக்குத் திருப்பயணம் மேற்கொண்டுள்ள, ஏறக்குறைய நான்காயிரம் வீடற்றவர்கள் மற்றும் அவர்களுக்கு உதவி செய்பவர்களை, வத்திக்கானின் Nervi அறையில் இவ்வெள்ளியன்று சந்தித்துப் பேசிய திருத்தந்தை, ஏழைகளைப் புறக்கணித்த, கிறிஸ்தவர்கள் எல்லாருக்காகவும், தான் மன்னிப்புக் கேட்பதாகத் தெரிவித்தார்.

சிலநேரங்களில், வார்த்தைகளால் உங்களைக் காயப்படுத்தியிருந்தால், அல்லது, நான் என்ன சொல்ல வேண்டுமென்று, நீங்கள் விரும்பியதை, நான் சொல்லாமல் இருந்திருந்தால், அதற்காக, உங்களின் மன்னிப்பை இறைஞ்சுகிறேன் என்று, சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்டவர்களிடம் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.  

இச்சந்திப்பின் ஆரம்பத்தில், சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்ட ஏழைகள் அனைவரும், திருத்தந்தையை வட்டமாகச் சூழ்ந்துகொண்டு, அருங்கொடை செபம் போன்று, திருத்தந்தையின் தோள்மீதும், ஆடையின் மீதும் கரங்களை வைத்து, அவருக்காகச் செபித்தனர். அந்நேரத்தில், திருத்தந்தை தலைகுனிந்து மௌனமாக நின்றார். பின்னர், அவர்களில் நால்வர், தங்களின் துன்ப வாழ்வைப் பகிர்ந்துகொண்டனர். அவர்களில், ராபர்ட் என்பவரின் பகிர்வுக்குப் பதிலளிக்கும் விதமாக, திருத்தந்தை, இஸ்பானிய மொழியில் பேசினார்.

நற்செய்தியை வாசிக்காத கிறிஸ்தவர்களுக்காகவும், அவர்கள், ஏழைகளின் முன்பாக, புறமுதுகு காட்டிய ஒவ்வொரு நேரத்திற்காகவும் நான் உங்களிடம் மன்னிப்புக் கேட்கிறேன் என்று கூறிய திருத்தந்தை, கனவு காண்பதை நிறுத்தி விடவேண்டாம் எனவும், அவர்களிடம் கேட்டுக்கொண்டார்.

ஏழைகளின் கனவுகள் நிறைவேறும் என்றும், உரோமைக்கு வருவோம் என்று கனவு கண்ட உங்களின் கனவு நிறைவேறியிருக்கின்றது என்றும் கூறிய திருத்தந்தை, கனவுகளுடன் முன்னோக்கி நடங்கள் என்றும் கூறினார்.

தற்போது வீடுகள் இல்லாத அல்லது, பல ஆண்டுகள் தெருக்களிலே வாழ்கின்ற, 22 நாடுகளைச் சேர்ந்த ஏறக்குறைய நான்காயிரம் பேர், இந்நிகழ்வில், கலந்துகொண்டனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.