2016-11-10 16:04:00

பிறரன்பு சகோதரிகள் சபை வழியாக, ஜாம்பியா பெற்றுள்ள ஆசீர்கள்


நவ.10,2016. அண்மையில் புனிதராக உயர்த்தப்பட்ட அன்னை தெரேசா வழியாகவும், அவர் உருவாக்கிய பிறரன்பு மறைப்பணியாளர்கள்  சகோதரிகள் சபை வழியாகவும், திருஅவையும், இவ்வுலகும் பெற்றுவரும் பல்வேறு ஆசீர்களை எண்ணி இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன் என்று, நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயத்தின் தலைவர், கர்தினால் பெர்னாண்டோ பிலோனி அவர்கள், இவ்வியாழன் ஆற்றிய மறையுரையில் கூறினார்.

நவம்பர் 7 இத்திங்கள் முதல், 10ம் தேதி, இவ்வியாழன் முடிய, ஜாம்பியா நாட்டில் மேய்ப்புப்பணி பயணம் மேற்கொண்ட கர்தினால் பிலோனி அவர்கள், இவ்வியாழன் கொண்டாடப்பட்ட, திருத்தந்தை புனித பெரிய லியோ திருநாளன்று, லூசாக்கா நகரில் பணியாற்றும் பிறரன்பு சகோதரிகள் சபையினருக்கு நிறைவேற்றிய திருப்பலியில் இவ்வாறு கூறினார்.

இவ்வியாழன் நற்செய்தியில், இயேசுவுக்கும் பரிசேயருக்கும் இடையே நிகழ்ந்த உரையாடலை மையமாக்கி மறையுரை வழங்கிய கர்தினால் பிலோனி அவர்கள், இறையாட்சி, கண்ணைப்பறிக்கும் வடிவத்தில் வருவதல்ல, மாறாக, உள்ளத்தின் அமைதியில் உருவாவது என்று எடுத்துரைத்தார்.

ஜாம்பியா நாட்டில் நற்செய்தி வளர்ச்சி அடைந்துள்ளதற்கு, பிறரன்பு சகோதரிகளின் அமைதியான பணிகளும் ஒரு முக்கியக் காரணம் என்று சுட்டிக்காட்டிய கர்தினால் பிலோனி அவர்கள், இறையாட்சி, துன்புறுவோர் நடுவே வெளிப்படுவதையும் சிறப்பாகக் குறிப்பிட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.