2016-11-10 16:11:00

நோயுற்றோர் பணி, இரக்கத்தின் மாபெரும் நினைவுச்சின்னம்


நவ.10,2016. தங்கள் வாழ்வின் இறுதி நாட்களை நெருங்கிக்கொண்டிருக்கும் நோயாளிகளுக்கு, குறிப்பாக, புற்றுநோயுள்ளவர்களுக்கு ஆற்றப்படும் பணி, இரக்கத்தின் மாபெரும் நினைவுச்சின்னம் என்று மும்பை பேராயர், கர்தினால் ஆசுவால்டு கிரேசியஸ் அவர்கள் கூறினார்.

புற்றுநோயுற்ற வறியோருக்கு மும்பையில், இலவசமாக மருத்துவ உதவிகள் செய்துவரும் "Shanti Avedna Sadan" என்ற மருத்துவமனைக்குச் சென்ற கர்தினால் கிரேசியஸ் அவர்கள், இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டின் அருள் மிக்க ஒரு தருணமாக இதனை தான் கருதுவதாகக் கூறினார்.

நவம்பர் 13, இஞ்ஞாயிறன்று இரக்கத்தின் சிறப்பு யூபிலி உலகிலுள்ள அனைத்து மறைமாவட்டங்களிலும் நிறைவுறுவதையடுத்து, மும்பை உயர் மறைமாவட்டத்தின் பேராயர், கர்தினால் கிரேசியஸ் அவர்கள், நோயுற்றோரைக் காண்பது என்ற இரக்கக் கடமையை நிறைவேற்ற, இந்த மருத்துவமனைக்குச் சென்றார் என்று, பீதேஸ் செய்தி கூறுகிறது.

இதற்கு முன்னதாக, மும்பையில் வாழும் சோட்டாநாக்பூர் பழங்குடினருடன், கர்தினால் கிரேசியஸ் அவர்களும், இராஞ்சி பேராயர், கர்தினால் டெலெஸ்போர் டோப்போ அவர்களும் யூபிலியைக் கொண்டாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.