2016-11-10 15:38:00

தன் பணியின் குறிக்கோள்களில் ஒன்று, கிறிஸ்தவ ஒன்றிப்பு


நவ.10,2016. கிறிஸ்தவர்கள் ஒருங்கிணைந்து வாழவேண்டும் என்ற ஆவல், நம்மிடையே வளர்ந்து வருவது, தனக்கு மிகுந்த ஆறுதல் தருகிறது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன்னைச் சந்திக்க வந்திருந்த கிறிஸ்தவ ஒன்றிப்பு திருப்பீட அவை உறுப்பினர்களிடம் கூறினார்.

கர்தினால் கர்ட் கோக் அவர்கள் தலைமையில், வத்திக்கானில் நடைபெற்ற கிறிஸ்தவ ஒன்றிப்பு திருப்பீட அவை ஆண்டுக்கூட்டத்தின் ஒரு நிகழ்வாக, இந்த அவையின் உறுப்பினர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, திருப்பீடத்தில் சந்தித்த வேளையில், இந்த ஆண்டுக்கூட்டத்திற்கு, "கிறிஸ்தவர்களின் ஒற்றுமை: முழுமையான ஒன்றிப்பை நோக்கி" என்ற தலைப்பு தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது குறித்து, தன் மகிழ்வை வெளியிட்டார் திருத்தந்தை.

கடந்த ஓராண்டில், வத்திக்கானிலும், தான் மேற்கொண்ட திருத்தூதுப் பயணங்களிலும் நிகழ்ந்த கிறிஸ்தவ ஒன்றிப்பு கூட்டங்களைப் பற்றி குறிப்பிட்டத் திருத்தந்தை, உரோமையின் ஆயர் என்ற முறையிலும், புனித பேதுருவின் வழித்தோன்றல் என்ற முறையிலும், தன் பணிக்காலத்தின் முக்கியக் குறிக்கோள்களில் ஒன்று, கிறிஸ்தவ ஒன்றிப்பு என்று, தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

தன் சீடர்கள் அனைவரும் ஒன்றித்திருப்பது, இயேசுவின் கனவாக இருந்தது என்பதை, இறுதி இரவுணவின்போது அவர் எழுப்பிய செபத்தில் (யோவான் 17, 21.23.26) உணர்கிறோம் என்று கூறியத் திருத்தந்தை, இந்த ஒன்றிப்பு, வெறும் கருத்தியல் அளவில் மட்டும் உருவாகாமல், முழுமையான வடிவம் பெறவேண்டும் என்று வலியுறுத்தினார்.

நாம் மேற்கொள்ளும் ஒன்றிப்பு முயற்சிகள், மனித முயற்சிகளோ, நமது சபைகளின் பேச்சுவார்த்தை முயற்சிகளோ அல்ல, மாறாக, இது இறைவனின் அருளைச் சார்ந்தது என்பதை நாம் உணர்வதும், அதற்குத் தேவையான பொறுமையைக் கடைப்பிடிப்பதும் அவசியம் என்று, திருத்தந்தை தன் உரையில் கேட்டுக்கொண்டார்.

நாம் ஒன்றிணைந்து வருவதற்கு, அனைவரும் ஒரே விதமான எண்ணம் கொண்டிருக்க வேண்டும் என்பது அவசியம் அல்ல, என்பதைத் தெளிவுபடுத்தியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம்மிடையே உள்ள மாறுபட்டக் கருத்துக்கள், நமது ஒற்றுமையை இன்னும் அழகுபடுத்தும் என்று எடுத்துரைத்தார்.

நமது நிலைப்பாடு, கொள்கைகள், என்ற நிலைகளை இறுகப் பற்றிக்கொண்டிராமல், இறைவார்த்தையை மையப்படுத்தி, நாம் இந்த ஒருங்கிணைப்பை மேற்கொண்டால், கிறிஸ்தவ ஒன்றிப்பு, இன்னும் முழுமையானதாக, பொருளுள்ளதாக அமையும் என்று, திருத்தந்தை, கிறிஸ்தவ ஒன்றிப்பு திருப்பீட அவை உறுப்பினர்களிடம் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.