2016-11-10 15:32:00

கிறிஸ்தவ மதத்தை காட்சிப்பொருளாக மாற்றும் சோதனை - திருத்தந்தை


நவ.10,2016. கிறிஸ்தவ மதத்தை, கண்ணைப்பறிக்கும் காட்சிப்பொருளாக மாற்றும் சோதனையை நாம் வெல்லவேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வியாழன் காலை, சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் மறையுரை வழங்கினார்.

"இறையாட்சி உங்கள் நடுவிலேயே செயல்படுகிறது" என்று, இயேசு பரிசேயரிடம் கூறிய சொற்களை மையப்படுத்தி, தன் மறையுரையை வழங்கியத் திருத்தந்தை, இறையாட்சி நம் ஒவ்வொருநாள் வாழ்விலும் வளரவேண்டிய உண்மையே தவிர, பலரையும் கவர்ந்திழுக்கும் காட்சிப்பொருள் அல்ல என்று தெளிவுபடுத்தினார்.

புதிது புதிதாக செய்திகளையும், செயல்பாடுகளையும் அளிப்பதற்கு முயற்சிகள் செய்வது நமது மத நம்பிக்கை அல்ல, மாறாக, இறைமகன் இயேசுவில் முழுமையாக வெளிப்பட்ட இறைவார்த்தையை இவ்வுலகிற்கு உணர்த்துவதே உண்மையான கிறிஸ்தவ மதம் என்று, திருத்தந்தை தன் மறையுரையில் வலியுறுத்தினார்.

வீட்டில் ஏற்றப்படும் ஒளி விளக்காகவும், அப்பம் சுடுவதற்கு தயார் செய்யப்படும் மாவில் வைக்கப்படும் புளிப்புமாவாகவும் இருப்பதே, உண்மையான இறையாட்சி என்றும், அது, நிமிடத்தில் தோன்றி மறையும் வாணவேடிக்கை அல்ல என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எடுத்துரைத்தார்.

இறையாட்சியின் வளர்ச்சிக்கு மிகவும் தேவையானது, நமது பொறுமையும், கடின உழைப்பும் என்று கூறிய திருத்தந்தை, நம் உள்ளத்தில் விதைக்கப்பட்ட இறைவார்த்தை என்ற விதையை, பொறுமையாய் பேணி வளர்க்க நாம் அழைக்கப்பட்டுள்ளோம் என்று கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.