2016-11-09 16:00:00

மறைக்கல்வியுரை : நோயாளிகளையும் சிறைக்கைதிகளையும் சந்திக்க...


நவ.,09,2016. கடந்த ஆண்டின் இறுதியில் துவக்கப்பட்ட இந்த இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டு இன்னும் 10 நாட்களில் நிறைவுற உள்ள நிலையில், இவ்வாரம் புதனன்று,  'நாம் அனைவரும் நோயாளிகளையும் சிறைக்கைதிகளையும் சென்று சந்திக்கவேண்டியதன் அவசியம்’ குறித்து எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நோயாளிகளைக் குணமாக்குவதும், சிறைக் கைதிகளைச் சென்றுச் சந்திப்பதும், இரக்கத்தின், மேலும் இரு செயல்பாடுகள். இவையிரண்டிலும் இயேசுவே நம் முன்னுதாரணமாக இருக்கிறார். கைவிடப்பட்டோர் அல்லது தனிமையில் வாடுவோர் அருகில் நாம் செல்லவேண்டியதன் முக்கியத்துவம் குறித்து நமக்குக் காண்பிக்கிறார் இயேசு. நோயாளிகளையும் சிறைக் கைதிகளையும் சென்று சந்திக்கும்போது நாம் எவ்வளவு நன்மைத்தனத்தை ஆற்றுகின்றோம், அதேவேளை, இத்தகையப் பிறன்பு நடவடிக்கைகளால், நாம் எவ்வகையில் நன்மைகளைப் பெறுகிறோம் என்பது குறித்து, கொஞ்சம் சிந்தித்துப் பார்ப்போம். தாங்கள் செய்த தவறுகளுக்காகத் தண்டனையை அனுபவிப்போரைச் சென்று சந்திப்பதன் வழியாக நாம் இயேசுவின் குணமளிக்கும் பிரசன்னத்தை அவர்களுக்குக் கொணர்கிறோம். தங்கள் சுதந்திரத்தை இழந்த நிலையில் வாழும் இவர்கள், இறைவனின் இரக்கம் நிறைந்த அன்பையும் மன்னிப்பின் செய்தியையும் பெறவேண்டிய தேவை உள்ளது, ஏனெனில் அதன் வழியாக அவர்கள் தங்கள் மதிப்பையும் மாண்பையும் கண்டுகொள்கின்றனர். எவ்வித பாவமும் அற்றவராக இருந்தாலும், இயேசுவே நமக்காகச் சிறையில் துன்பங்களை அனுபவித்தார். அப்போஸ்தலர்கள் பேதுருவும், பவுலும், தங்கள் சிறைவாசத்தின்போது, செபத்திலும், நற்செய்தி அறிவிப்பிலும் செலவிட்டனர். நாமும், நோயாளிகளையும் சிறைக்கைதிகளையும் சென்று சந்திப்பதன் வழியாக, தேவையிலிருக்கும் நம் சகோதர சகோதரிகளுக்கு இறைவனின் இரக்கத்தையும் மீட்பு வல்லமையையும் கொணர்வோமாக.

இவ்வாறு தன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.