2016-11-09 16:38:00

அணுசக்திக்கு எதிராக பிலிப்பீன்ஸ் அரசுத் தலைவரின் நிலைப்பாடு


நவ.09,2016. பிலிப்பீன்ஸ் நாட்டில், பட்டான் (Bataan) மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள அணுசக்தி மின் நிலையம் ஒன்று, மீண்டும் செயல்படுவதற்கு, அரசுத் தலைவர் ரொட்ரிகோ துத்தெர்த்தே (Rodrigo Duterte) அவர்கள் அனுமதி மறுத்திருப்பதை, அந்நாட்டு ஆயர்கள் வரவேற்றுள்ளனர்.

அணுசக்தியை நம்பியிருப்பது நாட்டிற்கு ஆபத்து என்றும், நீர், காற்று, சூரியன் போன்ற இயற்கைச் சக்திகளைப் பயன்படுத்தும் வழிகளை ஆய்வு செய்வதே நாட்டிற்கு நல்லது என்றும், பலாங்கா (Balanga) ஆயர், ருபெர்தோ சாந்தோஸ் அவர்கள், பீதேஸ் (Fides) செய்தியிடம் கூறினார்.

தான் பதவியில் இருக்கும்வரை, பிலிப்பீன்ஸ் நாட்டில் அணுசக்திக்கு இடமில்லை என்று, அரசுத் தலைவர் துத்தெர்த்தே அவர்கள் கூறியிருப்பதை, ஆயர் சாந்தோஸ் அவர்கள், பெரிதும் வரவேற்றுள்ளார்.

1958ம் ஆண்டிலிருந்து, 1986ம் ஆண்டு முடிய கட்டப்பட்டு வந்த பட்டான் அணுமின் நிலையம், பல்வேறு போராட்டங்களின் காரணமாக, இன்றளவும் செயல்படவில்லை என்றும், அதை மீண்டும் செயல்பட வைப்பதற்கு நடந்த முயற்சிகளை, அரசுத் தலைவர் தடைசெய்துள்ளார் என்றும், பீதேஸ் செய்தி மேலும் கூறுகிறது. 

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.